மாயம் 49

 மாயம் 49


“பிரியா, உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா, உன் அண்ணனுக்கு வீட்டு முகவரி கொடுத்துருப்ப? என்று கர்ஜித்த திவாகரை சொடக்கிட்டு அழைத்த தேவ், “உன் வீட்டை கண்டுபிடிக்குறது எனக்கு பெரிய விஷயம் இல்லை திவாகர். பிரியாவுக்கும் நான் வந்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றான்.

“இப்போது எதற்கு இங்கே வந்த? முதல்ல வீட்டை விட்டு கிளம்பு என்று திவாகர் கூறி முடிப்பதற்குள், ஆக்ரோஷமாக எழுந்த தேவ், தன் கூலர்ஸைக் கழற்றி, “அன்னிக்கு நான் இருந்த மனநிலை சரியில்லை. அதனால நீ பேசுன பேச்சுக்கு பதில் பேசவில்லை. என்னை ஒருமையில் அழைக்கிற அளவுக்கு நீ பெரிய ஆள் இல்லை திவாகர். என்னிடம் மரியாதையா பேசு என்று கர்ஜித்தவனைப் பார்த்த அனைவரும் பயந்தனர். 

‘மறுபடியும் என்னை கூட்டிட்டு போய்ட்டு காயப்படுத்துவாரு, இதான் என் வாழ்க்கை என்ற பயத்தில் இருந்தவளுக்குத் தெரியவில்லை, இனி தேவ் யமுனாவின் பக்கம் திரும்பப் போவதில்லை என்று.

“நீ... நீங்கள் யமுனாவை இனி தொல்லை செய்ய மாட்டேன் என்று உங்கள் தாயிடம் சத்தியம் செய்துவிட்டு, இங்கு வந்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று கேட்டான் திவாகர். 

“உண்மை தான், நான் என் மகள் ஆராதனாவைத் தான் பார்க்க வந்தேன் என்று கூறிவிட்டு யமுனாவின் காலுக்கடியில் தவழ்ந்து கொண்டிருந்த ஆராதனாவைத் தூக்கியவன், யமுனா இருக்கும் திசையின் பக்கம் கூட திரும்பாமல், ஆராதனாவை எடுத்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்து கொஞ்சிக் கொண்டிருந்தான்.

“நீங்கள் குழந்தையை வெச்சு பிளாக்மெயில் பண்ணலாம்னு நினைக்காதீங்க. அதற்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்ற திவாகரைப் பார்த்து, தேவ் நக்கலாகச் சிரித்தான். 

“ஐய்யோ திவாகர், நானும் நீ எங்கள் வீட்டு மாப்பிள்ளைன்னு அவமானப்படுத்த கூடாதுன்னு பார்த்தா, நீயா வசமா என்கிட்ட வந்து மாட்டுறியே… என்ன சொன்ன நீ பயப்பட மாட்ட, அப்படித்தான? இந்த தைரியம் எல்லாம் உன் குடும்பத்தையே என் கண்ட்ரோலில் வைத்து, உனக்கு கிடைச்ச, கிடைக்க இருந்த வேலைக்கு எல்லாம் ஆப்பு வெச்சு ஜெயிலுக்கு அனுப்புவன்னு நான் மிரட்டும் போது, இந்த தைரியம் எங்க போச்சு? என்று கேட்ட தேவ்விடம் இம்முறை என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் அமைதி ஆனான் திவாகர்.

ஆராதனைவைக் கொஞ்சிக்கொண்டு இருந்த தேவ்விடம், “அண்ணா, காஃபி சாப்பிடுறீங்களா? என்று உபசரித்த தங்கையை நினைத்து தேவ்விற்கு மனது கொஞ்சம் நிம்மதி அடைந்தது.

“எனக்கு வேண்டாம் பிரியா, உன் கணவன் தான் ரொம்ப சூடா இருக்கார் அவரிடம் கேளு என்று சிறிதுநேரம் ஆராதனாவுடன் நேரத்தை செலவழித்தான்.

தன் எதிரே சுவற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த யமுனாவை மருந்துக்குக் கூட பார்க்காத தேவ்வின் மனது, ‘இனி என்னால் உனக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது யமுனா. ஆனால் என் மகள் ஆராதனாவைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது என்று நினைத்தது. 

“நீ உள்ளே போ யமுனா என்ற திவாகரின் சொல்லைக் கேட்டு உள்ளே சென்ற யமுனா, அறையில் இருந்த ஜன்னலின் வழியே யாருக்கும் தெரியாமல், தேவ் என்ன செய்கிறான் என்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பிரியா, ஆராதானாவிற்கு தடுப்பூசி போட்டாச்சா…? பாப்பா கையில் கொசு கடித்திருக்கு, மாலை சீக்கிரமே கதவைச் சாத்துங்கள் என்று குழந்தையைப் பற்றியே கேட்ட தன் கணவன், தன்னை கண்டுகொள்ளவில்லையே என்ற ஏக்கம் யமுனாவிற்குள் பிறந்தது.

“அது வந்து தம்பி தேவ்… என்று தயங்கிய சேகரிடம், “சொல்லுங்க அங்கிள் என்று பேச்சில் கோபமே இல்லாமல் பேசியவனை அதிசயமாகப் பார்த்தவர், “அது வந்து, நாங்க உங்களை எதிர்க்க வேண்டும் என்று அப்படி பண்ணவில்லை. ஆனால் யமுனாவிற்கு நல்ல வாழ்க்கை அமைத்து தர வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்று அவர் சுற்றி வளைத்தார்.

“அப்பா, இவர்கிட்ட ஏன் தயங்கிட்டு இருக்கீங்க, யமுனாவிற்கு இன்னொரு கல்யாணம் பண்ண போறோம். அதற்கு இவர் இடைஞ்சலாய் இருக்கக்கூடாதுன்னு தெளிவா சொல்லுங்கள் என்று பட்டென்று திவாகர் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியே, யமுனா உட்பட. 

திவாகர் இப்படிப் பேசுவான் என்று எதிர்பார்க்காத யமுனா, உடனே இந்தப் பேச்சை நிறுத்த வைக்க வேண்டும் என்று எண்ணினாள். ஆனால் தேவ்விடம் எந்த ஒரு கோபத்தையோ, வருத்தத்தையோ காணாமல் அதிர்ந்து, அங்கேயே பேசாமல் நின்றாள். 

ஒரு நிமிடம் தன் காதுகளை நம்பமுடியாத தேவ், தன்னை நிதானித்துக் கொண்டு, “இதில் யமுனாவிற்கு விருப்பமா? என்று பொதுப்படையாகக் கேட்டான்.

“நாங்கள் சொன்னால் யமுனா ஒத்துப்பா என்று தீர்மானமாகக் கூறினான் திவாகர். பிரியாவிற்குத் தன் கணவன் பேசும் பேச்சை கேட்டு எரிச்சலாக வந்தது. 

“நீங்கள் செய்வது தப்பு திவாகர் என்று பேசிய மனைவியை, ஒரு கையை நீட்டி, “நீ வாயை மூடு என்று கத்தினான். 

ஆராதனாவைப் பிரியாவிடம் கொடுத்த தேவ், திவாகரைப் பார்த்து, “எனக்கு என் மகள் வேண்டும் என்று கூறிவிட்டு வெளியே செல்ல எத்தனித்தவன், “நான் ஆராதனாவை நினைக்கும் போதெல்லாம் பார்க்க வருவேன் என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

தேவ் சென்ற பின் பிரியாவிற்கும் திவாகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. “யமுனா இன்னும் என் அண்ணனுடைய மனைவி தான். அவர் முன்னாடியே அவரின் மனைவிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பேன்னு நீங்கள் எப்படி திவாகர் சொல்லலாம்? என்று கத்தினாள். 

“ஆமாம் உன் அண்ணன் பொண்டாட்டியை நடத்திய மாதிரி நான் உன்னை நடத்துனா, நீ முன்று நாளுக்கு மேல் என்கூட இருக்க மாட்ட என்று பதிலுக்குக் கத்தினான்.

“இரண்டு பேரும் ப்ளீஸ் கத்தாமல், சண்டை போடாமல் இருக்கீங்களா? என்ற யமுனாவின் அலறல் சத்தம் கேட்டு, அந்த வீடே அடங்கியது.

***

“திவாகர் அத்தான், என் வாழ்க்கையில் இனி கல்யாணம் என்ற பேச்சுக்கு இடம் இல்லை… இதுக்கு தான் நான் சொன்னேன் எனக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுங்கள் என்று. நான் இந்த வீட்டில் இருந்தால் உங்கள் இருவருக்குமே சண்டை வந்துட்டே இருக்கும் என்று கலங்கினாள்.

“யமுனா அழாத... டேய் திவாகர், பேசாமல் நானும் அப்பாவும் யமுனாவுடன் வேறு வீடு பார்த்து இருக்கிறோம் என்ற அன்னையை, 

“என்னம்மா நீங்களும் புரியாமல் பேசுறீங்க, நீங்கள் மூவரும் தனியாக வேற வீட்டில் இருந்தால், தேவ் உங்களை தாண்டி யமுனாவை தூக்கிக்கொண்டு போயிடுவான் என்றவனை முறைத்த பிரியா, கடுப்பில் தர்ஷியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். 

யமுனாவிற்கு தலை வலிக்க ஆரம்பித்தது. தான் வீட்டைவிட்டு வந்த அந்த நாள் அனைவரின் முன் உண்மையைக் கூறாமல் அமைதியாக இருந்ததிற்கு தன்மேல் கோபம் இருக்கும், குறைந்த பட்சம் தன்னை முறைத்தாவது இருக்க வேண்டும். ஆனால் தன்னை அவன் கண்டுகொள்ளாமல் இருந்தது, மனதிற்கு வலியைக் கொடுக்க ஆரம்பித்தது. 

‘உன்னை விலகினால் என்னை ஏங்க வைக்கிறாய்

உன்னை நெருங்கினால் என்னை காயப்படுத்துகிறாய்

என்ன மாயம் செய்தாயோ 

உன்னிடம் இருந்து விடுபட முடியாத 

இந்த மனதை நான் வெறுக்கிறேன் என்ற வரிகள், யமுனாவின் மனதில் இடைவிடாத ரீங்காரமாய் அடித்துக் கொண்டே இருந்தது.

***

நாட்கள் சென்றது. அன்று தேவ் வந்து சென்ற பின் ஒருவாரம் ஆனது என்ற நிலையில், அன்று சனிக்கிழமை திவாகருக்கு விடுமுறை என்பதால், அனைவரும் திருத்தணி கோவில் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது பார்த்து யமுனாவிற்கு வயிறு வலிக்கத் தொடங்கியது. ஆராதனா பிறந்த பின், மாதவிடாய் அன்று வரை வராமல் இருந்தவளுக்கு, அன்று தான் பல மாதங்களுக்குப் பிறகு வந்தது.

தன் நிலையை விஜயலட்சுமியிடம் கூறியவளிடம், “பேசாமல் பிளானைக் கான்செல் பண்ணிடலாம் யமுனா, இன்னொரு நாள் போகலாம் என்றார். 

“இல்லை அத்தை ப்ளிஸ், என்னால் எதுவும் கான்செல் ஆக வேண்டாம். நீங்கள் இரவுக்குள் வந்திருவீங்க தானே, அதுவரைக்கும் சமாளித்து விடுவேன் என்று சமாதானம் செய்து, அனைவரையும் அனுப்பி வைத்த பிறகு தான், யமுனாவிற்கு நிம்மதியாக இருந்தது.

ஏற்கனவே மனக்கசப்பில் இருந்த பிரியா மற்றும் திவாகருக்கு இன்று கண்டிப்பாக திருத்தணி முருகரை வேண்டிய பின், அவர்களுக்குள் அந்த முருகன் அருளால் பிணைப்பு ஏற்படும் என்று உணர்ந்தவள், அவர்களை அனுப்பி விட்டு குழந்தையுடன் வீட்டிற்குள் வந்த பின் தான் மூச்சே விட்டாள். 

ஏற்கனேவே வயிறு வலியில் துடித்தவள், அவர்களை அனுப்பிய பின் தன்னிடம் சானிடரி நாப்கின் இல்லை என்பதை உணர்ந்தாள். கையில் குழந்தையை வைத்துக் கொண்டு, இந்த வயிறு வலியில் எப்படி நாப்கின் வாங்குவது என்று அவள் தவித்துக்கொண்டிருந்த போது தான், வீட்டின் காலிங்பெல் சத்தம் கேட்டது.

செக்யூரிட்டியாக இருக்குமோ என்று நினைத்தவள், அவரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று யோசித்தவள், எப்படி அவரிடம் கேட்பது என்றும் யோசித்தாள். பக்கத்து வீட்டுக் காரர்கள் இதுவரை கதவைத் திறந்து கொண்டு பேசியதில்லை. இப்போது என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தவள், மறுபடியும் காலிங் பெல் சத்தம் கேட்டவுடன், அவளின் பரிதவிப்பை ஒரத்தில் வைத்துவிட்டு கதவைத் திறந்தாள்.

படிந்த தாடியுடன் கிரே கலர் சட்டை அணிந்து, காக்கி கலர் ஜீன் அணிந்திருந்த தேவ் அங்கு நின்றதைக் கண்டு, ஏற்கனவே வயிறு வலியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவளுக்கு, இப்போது தேவ் வந்த அதிர்ச்சியில் வயிறு கலக்கமாக வேறு இருந்தது.

யமுனா தன்னைக் கண்டு அதிர்ச்சியாக நிற்பதை கண்டுகொள்ளாமல் உள்ளே பார்த்தவன், அங்கே தவழ்ந்து கொண்டிருந்த ஆராதனாவைப் பார்த்து, “ஆராதனா குட்டி… என்று யமுனாவைத் தாண்டி உள்ளே செல்லும்போது, தேவ்வின் உடல் யமுனா மீது படாதவாறு ஒதுக்கமாய்ச் சென்றது, யமுனாவிற்குச் செருப்பால் அடித்தது போன்று உணர்வு. 

‘தான் அன்று தேவ்வின் மேல் உள்ள விருப்பத்தில் தான் குழந்தை பிறந்தது என்று அனைவருக்கும் முன் ஒப்புக் கொள்ளாததற்கு, என்னை இப்படி பழி வாங்குகிறார் என்று நினைத்தாள்.

ஆனால் தேவ்வின் மனதில், ‘இனி மனதளவிலும் உடலளவிலும் யமுனாவை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தவன், அவளிடம் விலக ஆரம்பித்தான். ஆராதனாவைத் தூக்கிக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தவன், வீட்டில் யாரும் இல்லை என்பதை உணர்ந்தும், யமுனாவின் பக்கம் திரும்பவும் இல்லை, பேசவும் இல்லை.

வயிறு வலியில் துடித்த யமுனாவிற்கு மாதவிடாயின் பணி ஆரம்பித்தே விட்டது. இப்படியே விட்டால் வெளிப்படையாய் வந்துவிடும். இனி ஆபத்திற்கு பாவம் இல்லை என்று, “எனக்கு ஒரு உதவி வேண்டும் என்று மெல்லக் கேட்டாள். ஆராதனாவுடன் ரைம்ஸ் பாடிக்கொண்டே விளையாடிக்கொண்டு இருந்தவனின் காதில், யமுனா பேசியது விழவே இல்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 8

மாயம் 2