மாயம் 48
மூன்று தனி அறைகளைக் கொண்ட திவாகரின் வீட்டில், யமுனா மற்றும் ஆராதனா ஒரு அறையிலும், சேகர் மற்றும் விஜயலட்சுமி இன்னொரு அறையிலும், திவாகர் மற்றும் பிரியா இன்னொரு அறையிலும் இருந்தனர். தேவைக்கு மட்டுமே பிரியாவிடம் பேசிய திவாகரை, இரவு எப்படியாவது, திவாகரிடம் தஞ்சம் புகுந்தாவது அவன் மனநிலையை மாற்றலாம் என்று நினைத்தாள்.
அப்படித் தான் இரவு பத்து மணியளவில் அனைவரின் அறையிலும் விளக்கு அணைந்த பின், திவாகர் மட்டும் தன்னுடைய லாப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான். தர்ஷியைத் தூங்க வைத்தவள், கணவன் தன்னை கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டு கலங்கினாள். தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு, திவாகரை எப்படியாவது தன் வசம் இழுக்க வேண்டும் என்று நினைத்தாள். கணவனை ஒன்றரை வருடங்களாக பிரிந்த மனைவிக்கு இருக்கும், வலி, ஆசை, மோகம் அவளுக்கும் இருக்கும் தானே.
அலங்காரம் முடிந்த பின் திவாகரிடம் வேண்டும் என்றே பேச்சுக் கொடுத்தாள். அவள் முகத்தைப் பார்க்காமல் லாப்டாப்பில் கண்களை பதித்துக்கொண்டே கூறியவனிடம், “திவாகர், என்னைப் பார்க்கக் கூட மாட்டீங்களா?” என்று கலங்கிய பிரியாவைப் பார்த்த திவாகர்,
“பிரியா, நீ என்ன டிரை பண்ணுறனு எனக்குப் புரியுது. வாழ்க்கையே தொலைச்சுட்டு வந்து நிக்குறது, என் அத்தை மகள் யமுனாவை என் தங்கச்சினே வெச்சிக்கோ. உன் அண்ணாவால் சீரழிக்கப்பட்டு ஒரு குழந்தையுடன் வாழ்க்கையை இழந்திட்டு நிக்குறா. அவளுக்கு ஒரு புது வாழ்க்கை அமையும் வரை நாம் இருவருக்கும் தனித் தனிப் படுக்கை தான்” என்று கீழே ஒரு மெத்தையை விரித்து படுத்துக் கொண்டவனை, ஏமாற்றத்துடன் பார்ததவளின் கண்ணீர் தலையணையை நனைத்தது.
இப்படியே இரு வாரங்கள் சென்றது. பிரியவினால் யமுனாவிடம் சகஜமாகப் பேச முடியவில்லை. ஆனால் திவாகருக்காகப் பேசினாள். அப்போது யமுனாவின் மனதில் இருந்த மிச்சக் கேள்விகளைக் கேட்டாள்.
“கிஷோர் மற்றும் மனிஷாவின் திருமணம் என்ன ஆச்சு பிரியா?” என்றவளிடம், “அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு அண்ணி. இப்போது மனிஷா ப்ரெக்னன்ட்னு சொன்னாங்க” என்று முடித்துவிட்டாள்.
“பிரியா... அது வந்து… நான் சென்னை வந்ததில் இருந்து ஆதிராவைக் காணவில்லை. பிரனிதா இவங்க எல்லாம் என்ன ஆனார்கள்?” என்று தயங்கிக் கேட்டாள்.
பிரியாவிற்கு வந்த கோபத்தில், “அதான் என் அண்ணாவையே வேண்டாம் என்று சொல்லிட்டீங்களே அண்ணி, அப்புறம் ஆதிரா, பிரனிதா பற்றி தெரிஞ்சி நீங்கள் என்ன பண்ணப் போறீங்க?” என்று கடுகடுவென்று கூறிவிட்டு நகர்ந்த பிரியாவை, கலங்கிய விழிகளுடன் பார்த்தாள் யமுனா.
அன்று இரவு திவாகரிடம் பேச நினைத்த யமுனா, அவன் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன், “திவா அத்தான், எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா?” என்று தயங்கிக் கேட்டாள்.
***
“என்ன ஆச்சு யமுனா… இப்போ எதற்கு வேலை உனக்கு? இந்த வீட்டில் யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்றவனின் பார்வை சமையல் செய்து கொண்டிருந்த பிரியாவின் மேல் படிந்தது.
“ஐய்யயோ அத்தான், அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் எவ்வளவு நாள் இப்படி உங்கள் வீட்டில் இருப்பது? நான் வேலைக்குப் போனால் தான் என் குழந்தையைக் காப்பாற்ற முடியும்” என்று கூறியவளை யோசனையாகப் பார்த்தவன்,
“உனக்கு இந்த வீட்டில் ஒரு குறையும் இருக்காது யமுனா. நீ இனி என்னுடைய தங்கை” என்று கூறியவனிடம், அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல், அமைதியாய் தன் அறைக்குள் சென்றாள்.
தன் மகள் ஆராதனாவை தேடிய தேவ், தன் தாயின் அறை கதவைத் தட்டி உள்ளே சென்றான். யமுனா சென்றதிலிருந்து சீதாலட்சுமி தேவ்விடம் பேசுவதைச் சுருக்கிக் கொண்டார். உள்ளே சோர்வாக படுத்துக்கொண்டிருந்த அன்னையிடம், “பார்க்க உடம்பு ரொம்ப சோர்வாக இருக்கே அம்மா, மாத்திரை சாப்பிட்டீங்களா?” என்று அக்கறையாக கேட்ட மகனையும் பார்க்க பாவமாகத்தான் இருந்தது.
“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா, மனசு தான் சரி இல்லை” என்றவரின் கையைப் பிடித்தவன், “அம்மா, எனக்கு ஆராதனைவை ரொம்ப தேடுதும்மா... உங்களுக்கு கொடுத்த வாக்கு, நான் யமுனாவை தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனால் என் மகளைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது அம்மா” என்று அவன் சொல்லி முடிக்கும் போதே, சீதாலட்சுமியின் கையில் தேவ்வின் கண்ணீர் சிந்தியது.
“உனக்கு உன் மகளைப் பார்க்க உரிமை இருக்கு தேவ்… நீ சாப்பிட்டியா?” என்றவரிடம், “அது மட்டும் தான் எனக்கு சரியா நடக்குது, வாழ்க்கையில் மற்ற எதுவும் எனக்கு சரி இல்லை” என்று கூறிவிட்டு எழுந்தவனைப் பார்த்து, வாழ்க்கையைத் தொலைத்து விட்டாய் என்று கோபப்படுவதா, இல்லை கவலைப்படுவதா என்று கூடத் தெரியவில்லை அம்மாவிற்கு.
அப்போது தேவ்வின் எண்ணிற்கு கிஷோரிடம் இருந்து கால் வந்தது. “சொல்லு கிஷோர்... அப்படியா… சரி நீ கவலைப்படாத, நான் உடனே வரேன்” என்று காலை கட் செய்தவனிடம், “என்ன ஆச்சுப்பா, யாரு?” என்று கேட்டார் சீதாலட்சுமி.
“அம்மா, கிஷோர் பேசினான்… மனிஷாக்கு டெலிவரி பெயின் வந்திருச்சாம். என்னுடைய பிரண்ட் ரோஹித் ஹாஸ்பிடல்ல தான் சேர்த்துருக்கானாம். விக்ரம் வேற லண்டனில் இருக்கான். ப்ளீஸ் சீக்கிரம் வான்னு கூப்பிடுறான். நான் போயிட்டு வந்திடறேன்” என்று விடைபெற்றவன், தன் காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான்.
அங்கே கண்ணீருடன் கிஷோர் எமர்ஜென்சி வார்ட்டிற்கு வெளியில் அமர்ந்து இருந்ததைப் பார்த்து, அவன் தோளில் கை வைத்தான். “தேவ், நீ வந்துட்டியா… மனிஷா உள்ளே வலில துடிச்சிட்டு இருக்கா, என்னால தாங்க முடியல” என்று அழுதவனை விசித்திரமாகப் பார்த்தான் தேவ்.
“இதெல்லாம் டெலிவரி பிராசஸ் தான கிஷோர், எல்லா பெண்களும் இதை கடந்து வந்து தான ஆகணும்” என்ற தேவ்விடம்,
“பாவம் தேவ் பெண்கள் எல்லாம். நம்ம ஆம்பிளைங்க ஈஸியா குழந்தையை கொடுத்திடுறோம். கஷ்டப்பட்டு குழந்தையை வலியுடன் பெற்றெடுக்குறாங்க. இதனால் தான் பெண்களுக்கு மறுஜென்மம்ன்னு சொல்றாங்க” என்று அழுதுக்கொண்டே கூறினான்.
“கவலைப்படாத, நான் ரோஹித் கிட்ட பேசிட்டு தான் வரேன். மனிஷாக்கு ஸ்பெஷல் கேர் கொடுப்பேன்னு சொல்லிருக்கான். எங்கடா உங்க அப்பா, அம்மா?” என்று அதிர்ச்சியாக கேட்டான் தேவ்.
“ஃபேமிலியில் எல்லாரும் ஒரு கல்யாணத்திற்காக ரிஷிகேஷ் போயிருக்காங்க. நான் தான் மனிஷாவுடன் இருக்கேன்” என்று கூறும் போதே ஒரு நர்ஸ் ஓடி வந்து கிஷோரிடம், “சார், உங்க மனைவி மனிஷாவிற்கு நீங்கள் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று சொல்றாங்க. சீக்கிரம் வாங்க, அவங்க வலியில் துடிக்கிறாங்க” என்றவுடன் மடமடவென உள்ளே ஓடினான் கிஷோர்.
கிஷோர் சென்ற பின் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி சாய்ந்த தேவ், ‘கிஷோர் மனிஷாவிற்காக எவ்வளவு செய்திருக்கிறான், செய்கிறான். அவளின் அழுகை இவனை இம்சிக்கிறது. ஆனால் நான், யமுனாவின் அழுகையை மேலும் தான் அதிகப்படுத்தி இருக்கேன். நான் எப்படிப்பட்டவன் என்று எனக்கே புரியவில்லையே’ என்று மனதில் குமுறினான்.
திடீரென்று கண்களைத் திறந்தவன், ‘நம் மகளை தனியாகவே, கணவன் அருகில் இல்லாமல் பெற்றிருக்கிறாய். எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்திருக்க யமுனா நீ? ச்ச நான் எவ்வளவு மோசமா நடந்துருக்கேன்’ என்று தனக்குள்ளேயே பேசியவன், “ஐயம் சாரி யமுனா…” என்று தன்னை மீறி கத்தி சுவரில் குத்தியவனை, அங்கு இருந்த அனைவரும் வித்தியாசமாகப் பார்த்தனர்.
சிறிது நேரத்தில் வெளியே வந்த கிஷோர், தேவ்வை அணைத்துக் கொண்டு, “தேவதை பிறந்திருக்காடா” என்று சந்தோஷத்துடன் கூறினான். அவனை வாழ்த்திவிட்டு, மனிஷாவிடமும் வாழ்த்தைக் கூறுமாறு சொன்ன தேவ், பிரியாவிற்கு கால் செய்தான்.
“ஆ அண்ணா சொல்லுங்க” என்று தடுமாறிய தங்கையிடம், “பிரியா, உன் வீட்டிற்கு நான் இப்போது வரேன். என் மகளை நான் பார்க்க வேண்டும்” என்று கூறினான்.
“அண்ணா நாங்க இப்போது டெல்லியில்…” என்று கூறிக்கொண்டிருக்கும் போது, “தெரியும், நீ இப்போது சென்னை மேடவாக்கத்தில் தான் இருக்க என்று. உன் கணவன் என்ன செய்தாலும் அந்தச் செய்தி எனக்கு வந்து விடும்” என்று ஃபோனை வைத்தவன், நேராக மேடவாக்கத்திற்குச் சென்றான்.
***
தேவ்வின் கார் அந்த பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பின் முன் நின்றது. யமுனாவும் விஜயலட்சுமியும், தர்ஷி மற்றும் ஆராதனாவை தினமும் மாலை கீழே உள்ள பார்க்கிற்கு அழைத்து வந்து விளையாட வைத்தனர். தவழும் குழந்தையான ஆராதனா, தன் அழகிய முட்ட கண்ணை வைத்து பொக்கை வாயைத் திறந்து சிரிப்பாள். தான் எதற்கு வாழ்கின்றோம் என்ற உணர்வு யமுனாவிற்கு தோன்றும்போதெல்லாம், தன் குழந்தையின் சிரிப்பைப் பார்த்து ஆறுதல் அடைவாள்.
அன்றும் யமுனா மற்றும் விஜயலட்சுமி மாலையில் குழந்தைகளை அழைத்துச் சென்று விளையாட வைத்துவிட்டு வீட்டினுள் செல்லும்போதே, பிரியாவின் முகம் படபடப்பாகவே இருந்தது. அன்றைய சம்பவத்தின் பின் பிரியா, யமுனாவிடம் பேசுவதைத் தவிர்த்து விட்டாள்.
தன் அண்ணனை வேண்டாம் என்று கூறிவிட்டு வந்தவர், ஏன் ஆதிராவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்? யமுனாவிற்காகத் தானே, ஆதிராவை அவளின் அன்னையிடம் ஒப்படைத்தான் தேவ். அதை அறிந்த பிரியாவின் மனதிற்குள், யமுனா இப்போது தேவ்வை விட்டு வந்தது சினத்தை ஏற்படுத்தியது. தப்பே செய்தாலும் இரத்த பாசம் அல்லவா, அதனால் தன் அண்ணனை பிரியாவால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.
ஒவ்வொரு முறையும் காலிங் பெல் சத்தம் கேட்கும் போது, பக்கு பக்கு என்று உணர்ந்தவளுக்கு, திவாகரும் வந்து விட்டான் என்று தெரிந்த பின் மிகவும் பயமாக இருந்தது. யமுனா ஹாலில் குழந்தைகளை வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த சமயத்தில் தான், யமுனாவின் வில்லன் காலிங் பெல்லில் கை வைத்தான்.
கதவைத் திறந்தது என்னமோ திவாகர் தான். தேவ்வை எதிர்பார்க்காத திவாகர், முதலில் அதிர்ச்சியில் உறைந்தான். பின் தன்னை சுதாரித்துக் கொண்டு, “நீ ஏன் இங்கு வந்த? அதான் உன் அம்மாவின் மேல் சத்தியம் செய்தாயே” என்று கூறியவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்த தேவ்வை அனைவரும் பேந்த பேந்த விழித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதுவரை குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து குனிந்த விதமாய் விளையாடிக் கொண்டிருந்த யமுனா, தேவ் வந்ததைக் கவனிக்கவில்லை.
“எனக்குச் சொந்தமானது இங்கே இருக்கும்போது, என்னால் எப்படி வராமல் இருக்க முடியும் திவாகர்?” என்று அழுத்தமாகக் கூறியவனின் குரல் யமுனாவின் செவிகளுள் நுழையும்போதே, அதிர்ச்சியில் பதறியடித்துக் கொண்டு எழுந்தாள்.
அங்கே சோஃபாவில், கருப்பு சட்டை மற்றும் கூலர்ஸ் அணிந்து, கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்த தேவ்வைக் கண்டு திகைத்தவள், தன்னை மீறி எழுந்து நின்றாள். தன்னைத் தான் தேவ் குறிப்பிடுகிறான் என்று நடுக்கத்தில் இருந்தாள் யமுனா.
கருத்துகள்
கருத்துரையிடுக