மாயம் 47
“யமுனா, உங்களுக்குள்ள எல்லாம் சரியா இருக்குன்னு நினைத்து தான் நான் முன்னாடி அமைதியா இருந்தேன். இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது” என்று தேவ்விடம் திரும்பிய திவாகர், “நாங்கள் யமுனாவை அழைத்துக்கொண்டு போகிறோம்” என்று கூறினான்.
அதுவரை குழந்தையிடம் விளையாடிக்கொண்டிருந்தவனின் சிரித்த முகம் இறுக்கமானது. “உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டுப் போகத்தான் உனக்கு உரிமை இருக்கு. என் பொண்டாட்டியை கூட்டிட்டுப் போக நினைச்சாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று குழந்தையோடு எழுந்தான்.
“ஆராதனா பாப்பா, உன் அம்மா யமுனா அழுறாங்க பாரு” என்று வேண்டும் என்றே யமுனாவிற்கும் தனக்கும் பிறந்த குழந்தை என்பதைத் தெரிவிக்க இப்படிச் சொன்னான்.
இதைக் கேட்டு அதிர்ந்த மூவரும், “யமுனா இந்தக் குழந்தை?” என்று தயங்கும்போதே, “ஆராதனா என் குழந்தை தான் மாமா” என்று கதறி அழுதவள், தன் கண்களைத் துடைக்க முயன்றும் கண்ணீர் உருண்டோடியது.
“என்ன யமுனா, உன் குழந்தை என்று சொல்ற? நம் குழந்தைன்னு சொல்லு. தேவ், யமுனாவின் செல்லக்குட்டி ஆராதனா” என்று சத்தமாக கூறினான்.
“மாப்பிள்ளை, தேவ்வும் யமுனாவும் சந்தோஷமா இருக்காங்க. நீங்கள் பிரியாவை கூட்டிட்டுப் போங்க” என்று கெஞ்சியவரிடம், “இப்படி குமுறி குமுறி அழுறா, இவள் சந்தோஷமா இருக்கான்னு சொல்ற உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?” என்று கத்தினான் திவாகர்.
“திவா ப்ளீஸ், கொஞ்சம் நான் சொல்றதைக் கேளுங்க, அவர்களுக்கு குழந்தையே பிறந்துவிட்டது. எப்படி சந்தோஷமா இல்லாமல் இருப்பாங்க? நம்ம வீட்டிற்குப் போகலாம். தர்ஷி ஒன்றரை வருஷமா நீங்கள் இல்லாமல் துடிச்சு போய்ட்டா” என்று அழுது திவாகரின் கையைப் பிடித்த பிரியாவின் கையை உதறினான்.
“உன் அண்ணன் ஒன்னும் உத்ததன் இல்லை, மிரட்டி கல்யாணம் பண்ணவனுக்கு மிரட்டி கற்பழிக்க தெரியாதா என்ன?” என்று சொல்லி முடிக்கும்போதே, ஆராதனாவை சீதாலட்சுமியிடம் கொடுத்துவிட்டு, திவாகரை அறைந்தான் தேவ்.
திவாகரும் தேவ்வின் சட்டையைப் பிடிச்சு இழுத்து, “துருதுருன்னு சுத்திட்டு இருந்த பொண்ண இப்படி நாசமாகிட்டியே பாவி, யமுனா வாயே திறக்க மாட்டுறா. அப்போ எந்த அளவுக்கு அவளை நீ கொடுமைப்படுத்திருக்க” என்று விடாமல் பேசினான்.
“தேவ், எவ்வளவு திமிரு இருந்தா மாப்பிள்ளையை அடிப்ப?” என்ற சீதாலட்சுமியின் கூற்றை மதிக்காத தேவ், “உங்கள் மாப்பிள்ளை வந்தோமா, பொண்டாட்டியை கூட்டிட்டுப் போனோமான்னு இருக்கணும். எனக்கும் என் மனைவிக்கும் இருக்கும் அந்தரங்க விஷயங்களைப் பற்றிக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை” என்று கத்தினான்.
“சும்மா கத்தாத தேவ்… நீ அவளை வலுக்கட்டாயமாக சீரழிச்சிட்ட, அதான் யமுனா நான் பேசியதற்கு மறுப்பு சொல்லாமல் இருக்கா” என்று பிரியாவிடம் திரும்பியவன், “நீ என் கூட வீட்டிற்கு வரணும்னா, யமுனா மற்றும் அவள் குழந்தை நம்முடன் வீட்டிற்கு வர வேண்டும். இல்லன்னா காலம் பூராவும் உன் அண்ணன் கூடவே இரு” என்று தீர்மானமாகக் கூறியவனைப் பார்த்து, நின்ற இடத்திலேயே அமர்ந்து அழுதவள் தேவ்வைப் பார்த்தாள்.
தேவ்விற்கு, யமுனா எதுவும் பேசாமல் அழுவது பேரதிர்ச்சியாக இருந்தது. யமுனாவின் சம்மதத்துடன் தான், இரு தருணங்களிலும் ஈருடல் ஓருயிர் ஆனார்கள். ஆனால் இப்போது யமுனா அமைதியாக இருப்பது, என்னவோ அவன் யமுனாவை வலுக்கட்டாயமாக கெடுத்து, அவளை இந்த நிலைக்கு ஆள் ஆக்கியது போல் இருந்தது. தேவ்விற்கு யமுனா தன்னோடு விருப்பமுடன் தான் இருந்தாள் என்று வெளியே சொல்ல விருப்பமில்லை.
“திவாகர் அத்தான், என்னைக் கூட்டிட்டுப் போயிடுங்க. இனி என்னால் இவருடன் வாழ முடியாது” குனிந்து கொண்டே அழுதவளின் நிலை அனைவருக்குமே பாவமகத் தான் இருந்தது, தேவ்வைத் தவிர.
தன் மகன் யமுனாவை பலமாக காயப்படுத்தி இருக்கிறான் என்று உணர்ந்த சீதாலட்சுமி, “நீ கிளம்பு யமுனா, உனக்கு இங்கே சந்தோஷம் இல்லை. நீ சந்தோஷமா இருக்கணும், அதான் எனக்கு வேணும். ஆனால் இந்த அத்தை பெற்ற மகனால் தான் உன்னுடைய இன்றைய நிலை என்று இந்த அத்தையை வெறுத்துறாதே” என்று கதறி அழுதார் சீதாலட்சுமி.
“சம்பந்தி, யமுனா ரொம்ப பாவம். அவளை இதற்குப் பிறகும் இங்கே விட்டுட்டுப் போனா, நாங்கள் மனிதர்களே இல்லை. எங்கள் பெண் எங்களுக்கு வேண்டும்” என்று கலங்கிய சேகரிடம், “அதான் கூட்டிட்டுப் போக சொல்லிட்டேனே சம்பந்தி. நான் வேற என்ன பண்ணனும் சொல்லுங்க?” என்று கதறிய சீதாலட்சுமியிடம், குழந்தையைப் பெற்றுக் கொண்டார் விஜயலட்சுமி.
“உங்கள் மகன் தேவ் யமுனாவைத் தேடியோ அல்லது வற்புறுத்தியோ இனி வரக்கூடாது. அது உங்களின் கையில் தான் இருக்கிறது” என்று கூறினான் திவாகர்.
“இனி தேவ்வினால் யமுனாவிற்கு எந்தவிதமான பிரச்சனையும் வராது, இது என் மேல் ஆணை!” என்று தேவ்வை அழுத்தமாகப் பார்த்தார். தேவ்வும் தன் தாயைத் தான் கலங்கிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டாம் முறை தேவ் கலங்குவதைப் பார்த்த தாய்க்கு, இதைத் தவிர வேறு வழியும் தெரியவில்லை.
தேவ்விற்கு யமுனா எதுவும் பேசாமல் அழுததிலேயே மனது விட்டுப்போனது. “பூ மாதிரி இருந்த பெண்ணை இப்படி பொசுக்கிட்டியே!” என்று திவாகர் தேவ்விற்கு முன் வந்து புலம்பிவிட்டு யமுனாவைக் கிளம்பச் சொன்னான். யமுனாவும் தன் பொருட்களை எடுக்கச் சென்றாள். “பிரியா நீ கிளம்பு” என்று தன் அலுவலக பையை எடுத்துக் கொண்டு தேவ் கிளம்பிவிட்டான்.
யமுனா கிளம்பும் முன் திவ்யாவை கட்டிப்பிடித்தவள், “உன் கணவன் கூட வாழு திவ்யா” என்று அணைத்தவளை, “இனியாவது நிம்மதியா இரு யமுனா” என்றாள் திவ்யா கலங்கிய விழிகளுடன். அனைவரிடமும் கண்ணீருடன், வெவ்வேறு உணர்ச்சியுடன் விடைபெற்றனர் யமுனா மற்றும் பிரியா.
***
காரில் ஏறிய பின்பும் கூட திவாகர், பிரியாவிடம் எதுவும் பேசவில்லை. தங்களின் வாழ்க்கையை நினைத்து கவலையில் இருந்த பிரியா, தன் அண்ணனின் வாழ்க்கையை நினைத்தும் கவலையுற்றாள்.
காரை எடுத்த திவாகரை அதிர்ச்சியாகப் பார்த்தவள், “திவாகர், இது உங்களுடைய கார் மாதிரி இருக்கிறது. டெல்லியில் இருந்தே காரில் வந்துவிட்டீர்களா?” என்று அதிர்ச்சியாகக் கேட்டாள்.
“நான் சென்னையில் இருக்கும் கம்பெனிக்கு மாறிட்டேன்” என்று மொட்டையாக பதில் அளித்தவனைப் பார்த்த பிரியா, ‘என்னிடம் ஊர் மாறியதைக் கூட சொல்லவில்லை. அவ்வளவு வைராக்கியத்தோடு இருக்கீங்களா திவா’ என்று மனதில் குமுறியவள் அமைதியானாள்.
நேற்று இரவு தன்னை அப்படிக் காயப்படுத்தியவனுடன் வாழப் பிடிக்காமல் தான் யமுனா சபையில் அமைதி காத்தாள். அவளுக்கு தேவ்வின் மீது வைத்த காதலினால் தன் மீதே அருவருப்பு ஏற்பட்டது. ஆனால் யமுனா ஒன்றை யோசிக்கத் தவறிவிட்டாள். தேவ் நினைத்திருந்தால் யமுனாவை சபையிலேயே அவமானம் படுத்தியிருக்கலாம். ஆனால், யமுனா பேசிய வார்த்தைகள் மற்றும் அவளே விருப்பத்துடன் தேவ்வுடன் இணைந்ததைப் பற்றி தேவ் கூறவில்லை என்பதை நினைக்கவில்லை.
அப்படி நினைத்திருந்தால், தேவ்வின் மீது வந்த வெறுப்பு கொஞ்சமாவது தணிந்திருக்கும். ஆனால் யமுனாவின் மனநிலை, அவள் மட்டுமே அறிந்த ஒன்று. யமுனாவிற்கு இப்போது தேவைப்பட்டது மன நிம்மதி மட்டுமே. துருதுருவெனத் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவளின் இறகையை உடைத்து, இப்போது சோகமே உருவான யமுனாவை அவளே வெறுத்தாள்.
சென்னை மேடவாக்கத்தில் அமைந்த அந்த அழகிய அடுக்கு மாடி குடியிருப்பில், திவாகரின் கார் நின்றது. விஜயலட்சுமியிடம் ஒட்டிக் கொண்ட ஆராதனாவை, யமுனாவிடம் கொடுக்க மனமில்லாமல் அவரே வைத்துக்கொண்டது, யமுனாவிற்கு மனநிறைவாக இருந்தது. மனதோரத்தில், ‘இவங்க எல்லாரும் இப்போது நல்லவங்க ஆயிட்டாங்க. ஆனால் தொலைந்து போன என் வாழ்க்கையை நான் டைம் மெஷின் வைத்தா பார்க்க முடியும்?’ என்று சலித்தவள், அந்த அடுக்குமாடியின் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள்.
திவாவரின் மௌனம் பிரியாவை வாட்டியது. தர்ஷியை மட்டும் தூக்கிக் கொஞ்சிய திவாகர், பிரியாவிடம் மருந்துக்குக் கூட அக்கறையாகப் பேசவில்லை.
அலுவலகத்திற்கு வந்த தேவ்விற்கு நிதானம் தேவைப்பட்டது. தன்னிடம் எல்லாம் இருந்தும், ஏன் யமுனாவிற்கு தன் மேல் காதல் இல்லை? தன்னோடு உறவாடியவள், கடைசியில் அதற்கும் அனைவரின் முன் அமைதி காத்ததில், மனது ரொம்ப பாரமானது. இது நாள் வரை யமுனா செல்லும் ஒவ்வொரு தருணங்களிலும் தேவ்விற்கு யமுனா மீது ஆத்திரம் வந்தது. ஆனால் இம்முறை யமுனா இல்லாதது ஒரு தவிப்பை உண்டாக்கியது.
அப்போது அவனின் அறையைத் தட்டி உள்ளே வந்து கொண்டிருந்தான் குணா. தேவ் தான் நேற்றே குணாவிற்கு கால் செய்து இன்று சென்னை வரச் சொல்லியிருந்தான். அன்று காலை ஏறி மதியம் சென்னையில் இறங்கியவன் நேராக அலுவலகத்திற்கு வந்தான்.
“அண்ணா வந்து… அம்மா சொன்னாங்க, இந்த யுத்தத்திற்கு முடிவே இல்லையா?” என்று கேட்ட தம்பியிடம், “இது மொத்தமாவே முடிஞ்சு போச்சு குணா உட்காரு” என்றான்.
தேவ் எப்போதும் தன்னுடைய பர்ஸ்னலை யாரிடமும் பகிர மாட்டான். அதைப் பற்றிப் பேசிக்கொண்டும் இருக்க மாட்டான். அதனாலேயே பேச்சை மாற்றுவதற்காக, “திவ்யாகிட்ட நேற்று பேசினேன். அவளுக்கு இன்னும் அவகாசம் வேண்டுமாம்” என்று சலிப்பாகக் கூறினான்.
“பரவாயில்லை அண்ணா, திவ்யா மனது காயப்பட்டு இருக்கு. அவள் முழுமனதாக என்னை ஏற்றுக் கொள்ளட்டும்” என்று புன்னகையுடன் கூறியவனை,
விசித்திரமாகப் பார்த்த தேவ், “நீ ஒரு தப்பும் பண்ணல. அவளா உன்னை தேவை இல்லாமல் பிரிச்சிட்டு, இதில் நிதினையும் நீ ஒரு வருஷமா பார்க்கவில்லை. அவள் மேல் கோபப்படாமல் இவ்வளவு பொறுமையா இருக்க?” என்று கேட்டான்.
“அண்ணா, என்னிடம் பேசாமல் என்னை பிரித்து வைத்தாலும், அவள் என் மனைவி. அவளுடைய கோபத்தில் அர்த்தம் இருக்கிறதே அண்ணா. தன்னுடைய உயிர்த்தோழியின் வாழ்க்கை தன்னால் தான் ஊசல் ஆடுகிறது…” என்று அவன் சொல்லும்போதே, தேவ்வின் தீப்பார்வையை உணர்ந்தவன்,
“அண்ணா உங்களை நான் தப்பாகச் சொல்லவில்லை. ஆனால் யமுனாவைப் பொறுத்தவரை அவளுக்கு நடந்தது அநீதி தான? அதனால் தன் வாழ்க்கையை நிறுத்தி வைத்த என் மனைவி மேல் எனக்கு பெருமை தான்” என்று தன் மனைவியைப் பெருமையாகப் பேசிய தம்பியை, “வீட்டிற்கு போ” என்று கட்டளையிட்டான். அவன் சென்ற பின், தன் குஷன் சீட்டில் சாய்ந்தவன், ஆழ்ந்த சிந்தனைக்குச் சென்றான்.
திவ்யாவைத் தாங்கிய குணாவைப் பற்றி யோசித்தவன், ‘தான் என்றுமே யமுனாவிற்கு சாதகமாக இருந்ததில்லையே, அப்போது யமுனாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அதையும் மீறி அவளை என்னிடம் கொடுத்திருக்கிறாளே! நான் யமுனாவிடம் மென்மையாக நடந்திருக்க வேண்டுமோ?’ என முதல் முறையாக நினைத்தான்.
‘தன்னுடைய குணத்திற்கே மென்மை இல்லாத பட்சத்தில், கல்யாணத்தைப் பற்றி பல கனவுகளுடன் இருந்தவளுக்கு, இரண்டாம் தாரமாக ஒரு குழந்தையுடன் கல்யாணம் என்பது, எப்படி ஜீரணிக்க முடியும்? அதுவும் தன்னுடைய முரட்டுத்தனத்தில் தன்னிடம் பல முறை அடி வாங்கியவள், அதையும் மீறி அவளை என்னிடம் கொடுத்திருக்கிறாள் என்றால், நான் தான் அவளிடம் பொறுமையாக இருந்திருக்க வேண்டுமோ?’ என்று யமுனாவிற்காக முதல் முறையாக வருத்தப்பட்டான் தேவ்.
கருத்துகள்
கருத்துரையிடுக