மாயம் 50

 

மாயம் 50

“தேவ் ப்ளீஸ், உங்களிடம் ஒரு உதவி கேட்கிறேன் என்று கலங்கிய விழிகளுடன் யமுனா கூறும்போது தான் கவனித்த தேவ், “சொல்லு யமுனா, என்ன வேண்டும்? என்று கேட்டான். தேவ்வின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் யமுனாவால் கண்டுகொள்ள முடியவில்லை.

“எனக்கு மென்சஸ் வந்திருச்சு. சானிடரி நாப்கின் வேண்டும், ப்ளீஸ் வாங்கிட்டு வர முடியுமா? எனக்கு வயிறு வலிக்குது. குழந்தையை வெச்சிட்டு ஒன்னும் பண்ண முடியலை என்று வயிற்றைப் பிடித்து தரையிலேயே அமர்ந்தவளைப் பாவமாகப் பார்த்தான். 

“சரி யமுனா... ஆராதனாவை நான் கூட கூட்டிட்டுப் போறேன். நீ கதவை மூடாமல் இரு என்று மடமடவென கதவருகில் சென்றவன், “என்ன பிராண்ட் வாங்கணும்? என்று தயங்கிக் கேட்டான். அவனின் கேள்விக்கு பதில் உரைத்தவளுக்கு, தேவ்வின் நடவடிக்கையில் வித்தியாசம் தெரிந்தது.

தேவ் கூறியது போலவே ஐந்தே நிமிடத்தில் பொருளோடு வந்தவன், அதை யமுனாவிடம் ஒப்படைத்துவிட்டு ஆராதனாவை கையில் ஏந்திக்கொண்டே பால்கனிக்குச் சென்றான். 

ரெஸ்ட் ரூம் சென்று விட்டு வெளியே வந்த யமுனாவின் முன் ஒரு சோடா பாட்டிலைக் கொடுத்தவன், “வயிறு வலிக்கு சோடா குடிச்சா கொஞ்சம் பெட்டரா இருக்கும் என்றவனின் செயல் அதிசயமாக இருந்தாலும், அதை முகத்தில் காட்டாமல் சோடா பருகியவள், அப்படியே சோஃபாவில் முடங்கி அமர்ந்தாள்.

அதற்குப் பின் தேவ் யமுனாவின் பக்கம் திரும்பவில்லை. சிறிது நேரம் தேவ்விடம் கொஞ்சி விளையாடிய குழந்தை, அப்படியே தேவ்வின் தோள்களில் தூங்கி விட்டது. ஆராதனாவைத் தொட்டிலில் போட்டவன் கிளம்ப தயாரானபோது, மனது கேட்காமல் அங்கே சோஃபாவிலேயே சுருண்டு படுத்துக்கொண்டிருந்த யமுனாவைப் பாவமாகப் பார்த்தான். 

‘எப்போதும் வர பீரியட்ஸே இப்படி வலிக்குதுன்னா, ஒரு குழந்தையை யாரும் இல்லாமல் உடல் வலியோடு சேர்த்து… என்னால் நீ பட்ட மன வலியுடன் சேர்ந்து குழந்தை பெற்றிருக்கிறாயே… யூ ஆர் கிரேட் யமுனா அண்ட் அம் சாரி என்று மனதிலேயே கூறினான். 

கிளம்ப நினைத்தவன், யமுனா அப்படியே வலியில் தூங்கிவிட்டாள் என்பதை உணர்ந்து, தன் மனைவி மற்றும் தன் மகளின் பாதுகாப்பிற்காக, வாசலிலேயே வெளியே பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்.

***

நீண்ட நேரம் தூங்கினார்கள் யமுனா மற்றும் ஆராதனா. தேவ்வும் யமுனாவை எழுப்பாமல் அமைதியாக வாசலின் பக்கமே நின்றிருந்தான். ஆராதனா மெல்ல சிணுங்கும் சத்தம் கேட்டதும், யமுனா விழிக்கும் போதே, தேவ் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்தான். 

அதைப் பார்த்துக் கலங்கியவள், ‘இந்த தேவ் யாரு? இவ்வளவு வருடங்கள் இவர் எங்கே இருந்தார்? என்று புதிதாக மாறிய தேவ்வைக் கண்டு கலங்கினாள். 

ஆராதனா தூங்கிவிட்டாள் என்று உறுதி செய்த பின் தொட்டிலை விட்டு விலகியவன், அங்கு கலங்கிய விழிகளுடன் யமுனா தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தான். 

“என்ன ஆச்சு யமுனா, வயிறு வலி இன்னும் சரி ஆகலையா? டாக்டர் கிட்ட போலாமா? என்று கேட்டவனை கண் இமைக்காமல் பார்த்தவள், “வேண்டாம் சரி ஆயிடும் என்று அமைதியாக உட்கார்ந்தாள். யமுனாவின் கண்களில் வந்த கலக்கம் எதற்கு என்று, யமுனா மட்டுமே அறிந்த ஒன்று.

மாதவிடாய் எல்லாப் பெண்களுக்கும் நடக்கும் விஷயம். எல்லா மாதமும் அந்த ஒரு வாரம் வலியில் வேலை செய்யும் பெண்களுக்கு, கணவனின் அக்கறையே மருந்தாக இருக்கிறது. கணவனின் அன்பு, பாசம், அக்கறை கிடைத்துவிட்டால், அவன் மனையாள் எந்த ஒரு வலியையும் தாங்கிக் கொள்வாள். அதே உணர்ச்சி தான் இப்போது யமுனாவின் மனதில் புதிதாய் தோன்றியது. தேவ்வின் அக்கறையால், யமுனாவின் வயிறு வலி கூட அவளுக்குப் பெரிதாக தோன்றவில்லை

யமுனா அமர்ந்து இதனை யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் வெளியே சென்ற தேவ், “கதவைச் சாத்திக்கொள் என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான். எப்போதும் தேவ் தன் அருகில் இருக்கும் போது ஒரு பயம், பதற்றத்தை உணருபவளின் மனது, இன்று லேசாகவும் அமைதியாகவும் இருந்தது. தேவ் சென்று ஒரு மணி நேரம் மேல் ஆகியும் அவன் விட்டுச்சென்ற நினைவுகளில் இருந்து யமுனா மீள முடியாமல் இருக்கும்போதே, ஆராதனா அழ ஆரம்பித்தாள். இப்படியே அன்று இரவு வரை சென்றது. 

கோவில் சென்று விட்டு அனைவரும் வீடு திரும்பிய பின், யமுனாவிடம், “யாராவது வீட்டிற்கு வந்தாங்களா யமுனா? என்று கேட்ட திவாகரிடம் அவசரமாக, “இ… இல்லை அத்தான், யாரும் வரவில்லை என்று மழுப்பியவளுக்கு, ஏன் திவாகரிடம் தேவ் வந்ததை மறைத்தோம் என்று புரியவில்லை. 

‘இப்படி தேவ்வுடனும் வாழ முடியாமல், மாமா குடும்பத்தினருடனும் உண்மையாய் இல்லாமல், இது என்ன வாழ்க்கை கடவுளே! என்று நினைத்தவள், அந்த நினைப்பை அப்போதைக்கு காயப்போட்டு விட்டு, தன் வேலையைப் பார்த்தாள்.

அதற்குப் பிறகு யமுனாவிற்கு தேவ் எப்போது வருவான் என்று, மனது நினைக்கத் தொடங்கியது. திவாகருக்கும் பிரியாவுக்கும் பொதுவான பேச்சு வார்த்தைகள் மட்டுமே தொடர்ந்தது. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் இருந்தாள் பிரியா. ஏனெனில் தன் அண்ணனை அவளால் விட்டுக்கொடுக்க முடியவில்லை. இந்த பிரச்சனைகளுக்கு மூலக் காரணமே பிரியா எனும்போது, அவளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியும் எழ ஆரம்பித்தது. 

தன்னால் தான் தேவ் யமுனாவை மிரட்டி மணம் புரிந்து, இப்போது யமுனா மற்றும் தேவ்வின் வாழ்க்கை ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. தேவ்வினால் யமுனாவிற்கு வலுக்கட்டாயமாக குழந்தை பிறந்திருக்காது என்று மட்டும் அவளின் அடி மனது ஆணித்தரமாக கூறியதால், யமுனாவின் மேல் உள்ள கோபம் குறைய மறுத்தது. 

ஒவ்வொரு முறையும் வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்கும்போதும், அது தேவ்வாக இருக்குமோ என்று நினைத்த யமுனாவின் வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போன்ற உணர்வு தோன்றியது. ஆனால் தனக்கு இருந்த அதிக வேலைப்பளுவில், அடுத்த இரண்டு வாரங்கள் தேவ் ஆராதனாவைப் பார்க்க வரவில்லை. அவன் வராத நாள்கள் நீடித்துக் கொண்டே போக, யமுனாவின் மனது சோர்வடைய ஆரம்பித்தது. 

அன்று ஞாயிற்றுக்கிழமை, திவாகர் வீட்டில் இருக்கும் சமயத்தில் காலிங் பெல் அடித்துக் கொண்டிருந்தது. கதவைத் திறந்த பிரியா, “அண்ணா வாங்க என்று அவனை உள்ளே வரவேற்று சோஃபாவில் அமரவைத்தாள். 

சேகர் மற்றும் விஜயலட்சுமி கூட தேவ்வினை வரவேற்றனர். அவர்களைப் பொறுத்தவரை தேவ்விடம் இருந்து பிரச்சனை எதுவும் வராமல், அவனிடம் முகம் கொடுக்காமல் பேசுவது தவறு என்று கருதினர். ஏனெனில் அவர்கள் தேவ்வின் பண பலத்திற்கும், பிரியாவின் அண்ணன் என்ற முறையினாலும், அவர்களால் முகத்தை தூக்கி வைத்து போக முடியவில்லை.

தேவ்விற்கு எதிரில் அமர்ந்த திவாகருக்குத் தான் இருப்பு கொள்ளவில்லை. தன் வீட்டில் தேவ் கம்பீரமாக உட்கார்ந்து இருக்கிறான், தான் என்னவோ தயங்கி இருப்பது போல் திவாகர் உணர்ந்தான். அதற்குக் காரணம் தேவ்வின் ஆளுமையான தோற்றமும் செயலும் தான். யமுனாவிடம் மட்டுமே தன்னை நிதானித்துக்கொண்டவன், மற்றவர்களிடம் அந்த கம்பீரம் மற்றும் ஆளுமையை இம்மி அளவுக்கூட குறைத்துக் கொள்ளவில்லை.

ஆராதனாவைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த யமுனா, தேவ் வந்திருப்பதை அறியவில்லை. அவள் குழந்தையைக் குளிப்பாட்டி விட்டு தன் அத்தையிடம் கொடுத்தவள், தானும் குளித்துவிட்டு வெளியே வரும் போது, தேவ்வின் கைகளில் ஆராதனா விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு, தன்னை மீறி உதட்டில் வந்துபோன புன்னகையை, யார் கவனிக்காமல் விட்டாலும், அதை திவாகர் கவனித்து விட்டான். யமுனாவின் இந்த செயல் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

ஆராதனாவுடன் நேரத்தைக் கழித்தவன், யமுனாவின் பக்கம்கூட திரும்பவில்லை. குழந்தையை அரவணைத்துவிட்டு, பிரியாவிடம் கொடுத்தவன் கிளம்பும்போது, திவாகர் வேண்டும் என்றே, “யமுனாவுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று இருக்கோம் என்று கூறினான்.

அவனைக் கூர்மையாகப் பார்த்த தேவ், “அதான் அன்னிக்கே சொல்லிட்டியே என்று தன் மனதில் இருக்கும் கவலையை முகத்தில் காட்டாமல் எழுந்தவன், பிரியாவிடம் கூறிவிட்டு கிளம்பினான்.

திவாகர் மறுபடியும் இன்னொரு திருமணம் பற்றி பேசியதற்கு கோபம் வந்தாலும், தேவ் அதற்கு என்ன சொல்லுவான் என்று அறையில் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தவளுக்கு, தேவ் அதை ஒரு பொருட்டாக எடுக்காமல் இருந்தது, ஈட்டியை வைத்து குத்தியது போன்ற உணர்வை மனதில் ஏற்படுத்தியது. 

‘உன்னுடன் இருந்த தருணங்கள் வலியைக் கொடுத்தாலும் 

அதில் இருந்த சுகம், 

ஏன் உன்னிடம் விலகி இருந்து கிடைக்கும் 

அமைதியில் வலிக்கிறது?

என்ன மாயம் செய்தாயோ 

உன்னை விட்டு நீங்க முடியாமல் தவிக்கும் என் மனது என்று நினைக்கையில், அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்கவும் மனம் இல்லாமல் அழுதாள். 

ஹாலுக்கு சென்று, “என் வாழ்க்கையில் கணவன் என்றால் அது தேவ் மட்டும் தான். இனி என் கல்யாணத்தைப் பற்றி யாரும் பேச வேண்டாம். இனியும் பேசினால், நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறியவளை வியப்பாகப் பார்த்த திவாகருக்கு, குழப்பம் ஆரம்பித்தது. 

‘ஒருவேளை பிரியா சொல்வது போல் யமுனாவிற்கும் தேவ்வை பிடிக்குமோ? என்ற கோணத்தில் யோசிக்கத் தொடங்கினான். 

பிரியாவிற்கு யமுனா பேசிய அர்த்தம் பெரிதாக புரியவில்லை. ‘கல்யாணம் வேண்டாம், தேவ்வும் வேண்டாம் என்கிறாரா? இல்லை கல்யாணம் வேண்டாம் என்கிறாரா? என்ற குழப்பத்தில் இருந்தவள், இதில் இனி தான் தலையிட வேண்டாம் என்று ஒதுங்கினாள்.

*** 

அதற்குப் பிறகும் ஒரு மாதம் கடந்தது. ஆனால் தேவ் மட்டும் ஆராதனாவைப் பார்க்கக்கூட வரவில்லை. யாரிடம் இதைப் பற்றிக் கேட்பது, என்ன கேட்பது என்றும் புரியாமல் தவித்தவளுக்கு, அன்று யமுனாவின் பெயரில் ஒரு தபால் வந்திருந்தது. ‘தனக்கு யார் தபால் அனுப்பி இருப்பார்கள்? என்று யோசித்தவள், அனுப்புனர் பெயரில், சத்யதேவ் என்று இருந்தவுடன் சந்தோஷத்தில் பிரித்தாள். 

ஆனால், அதிலிருந்த டைவர்ஸ் நோட்டீஸைக் கண்டவளுக்கு பேரிடியே விழுவது போல் ஆனது. கண்ணீருடன் அதிர்ச்சியில் தொப்பென்று அமர்ந்து, கதறி அழுதவளின் சத்தத்தைக் கேட்ட அனைவரும், ‘யாருக்கு என்ன ஆச்சு? என்ற பதற்றத்தில் ஓடி வந்தனர். 

“யமுனா என்ன ஆச்சு மா? ஏன் இப்படி அழுற? என்று பதறிய மாமாவிடம் எதுவும் சொல்லாதவள் அழுதுக்கொண்டே இருந்ததைப் பார்த்து, அவள் கையில் இருந்த பேப்பரை வாங்கி சத்தமாகப் படித்தாள் பிரியா. இந்த விஷயம் பிரியாவிற்கே அதிர்ச்சியாய்த் தான் இருந்தது. 

“ஒகே யமுனா, இனி பிரச்சனை இல்லை. உன் வாழ்க்கையில் இருந்த வில்லன் அவுட் என்று வேண்டும் என்றே சீண்டினான் திவாகர்.

“அத்தான் வாயை மூடுங்க… தேவ் எனக்கு வில்லன் இல்லை. நீங்கள் எல்லாரும் உங்கள் மனைவி கூட இருக்கீங்க. யாருக்காவது என்னையும் அவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று தோனுச்சா? என்று கோபத்தில் அழுதவளை, ஆச்சரியமாகப் பார்த்தார்கள் அனைவரும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 2

மாயம் 8