மாயம் 44
அலாரம் வைத்து காலையில் ஐந்திற்கு விழித்த யமுனா, மடமடவென காலைக்கடன்களை முடித்து விட்டு கையோடு தலைக்கு குளித்தாள். குழந்தை அழும் சத்தம் கேட்டவுடன், பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த சத்தத்தில் விழித்த தேவ், டவலை வைத்து மூடிக்கொண்டு குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான்.
ஆனால் யமுனாவோ பிசிக்கலி பிரெஸ்சன்ட் பட் மென்ட்டலி ஆப்ஸ்சன்ட் போன்று காட்சியளித்தாள். யமுனாவின் மனதில் குழப்பத்திற்கு மட்டும் பஞ்சமே இல்லை. வாழ்க்கையே ஒரு முடிச்சுக்குள் இருக்கிறது அதை எப்படி அவிழ்க்க வேண்டும் என்பதை யோசித்தாலே மனது சோர்வாக இருந்தது.
தேவ்வும் குளித்து முடித்து விட்டு இருவருக்கும் காஃபி ஆர்டர் செய்தான். சோஃபாவில் அமர்ந்து குழந்தைக்கு தேவையான திங்க்ஸை எடுத்து லாவகமாக ஒரு பேக்கில் வைத்துக்கொண்டிருந்த யமுனாவை ஃபோனைப் பார்த்துக் கொண்டே அமைதியாய்ப் பார்த்தான். கல்யாணத்திற்கு முன் இருந்த யமுனாவிற்கும் இப்போது இருந்த யமுனாவிற்கும் நிறைய மாற்றங்கள் இருப்பதை உணர்ந்தான். இப்போது இருக்கும் யமுனா மிகுந்த பொறுப்பு உணர்ச்சியுடன் செயல்படுவதைப் பார்த்து மனதில் ஒரு நிம்மதி இருந்தது.
தேவ்வின் மனதில் ஒரு கேள்வி மட்டும் ரீங்காரம் போல் ஒலித்துக் கொண்டே இருந்தது. உடலால் என்னுடன் இணைந்தேன் என்று கூறியவள், எப்படி குழந்தை பெற்றுக் கொண்டாள்? இதை யமுனாவிடமே கேட்க வேண்டும் என்று எண்ணினான்.
காஃபி வந்த பின் யமுனாவை ஒரு பார்வைப் பார்த்தபோதே புரிந்து கொண்டவள், காஃபியை எடுத்து தேவ்விற்கு ஒரு கப்பில் கலந்து கொடுத்து விட்டு, அவளுக்கும் எடுத்துக் கொண்டாள்.
யமுனாவிடம் கேட்கத் துடித்த மனதைக் கட்டுப்படுத்தியவன், பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான். யமுனாவிடம் கேட்க நினைத்ததை இப்போதே கேட்டிருந்தால், அவர்களுள் அடுத்த பூகம்பம் நிகழாமல் இருந்திருக்கலாம். விதி ஏன் தேவ் மற்றும் யமுனா சேருவதற்கு முன் இவ்வளவு இதிகாசங்களை எழுதி வைத்திருக்கிறது என்பது கடவுள் மட்டுமே அறிந்த ஒன்று.
கார் சென்னையை நோக்கி புறப்பட்டது. வழியில் குழந்தை அழும்போது காரை நிறுத்தியவன், யமுனாவிடமிருந்து குழந்தையை வாங்கி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து வியந்தவளைக் கண்டான் தேவ். குழந்தையிடம் பீக் க பூ விளையாடிவன், அழுகை நின்ற பின்னரே குழந்தையின் முதுகை மெதுவாகத் தடவிக்கொண்டே யமுனாவிடம் கொடுத்தான்.
காரில் செல்லும் வழியில், “ஏன் அப்படி ஆச்சரியமா பார்த்த?” என்றவனின் கேள்வி எதற்காக என்று உணர்ந்தவள்,
“டெரர் சத்யதேவ் குழந்தையிடம் இப்படி விளையாடியது எனக்குப் பார்க்க வித்தியாசமாக இருந்தது அதான்” என்று தயங்கிக் கூறினாள்.
தன் பார்வையை வண்டி ஓட்டுவதிலேயே கவனமாக இருந்தவன், “என்ன டெரரா இருந்தாலும், ஆராதனா என் மகள். அப்பா மகளிடம் இப்படித் தான் இருப்பாங்க” என்று அவன் கூறும் போது, அவள் முகம் சோகமாக இருந்தது.
அவளின் அமைதியைக் கண்டவன், அவளைத் திரும்பிப் பார்த்து, “என்ன ஆச்சு, ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்று கேட்டான்.
“எனக்குத் தாய், தந்தை பாசம் பற்றித் தெரியாது. அந்த கொடுப்பினை எனக்கு இல்லை” என்று சொன்னவளைக் கூர்மையாகப் பார்த்தான்.
“அப்போ என் பெண்ணை மட்டும் என்கிட்ட காட்டாமல் இருந்தது நியாயமா உனக்கு?” என்று தேள் கொட்டுவது போல் பேசியவனை வெறுமையாகப் பார்த்தவள், மறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.
***
தேவ்வின் கார் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவன் வில்லாவில் நின்றது. மனது படபடக்க, இதயம் துடிதுடிக்க, அந்த வீட்டைப் பார்த்த யமுனா, ‘உள்ளே யாரெல்லாம் இருப்பாங்க? அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?’ என்று உணர்ந்தவள், மெதுவாக குழந்தையுடன் இறங்கினாள். யமுனாவிடம் குழந்தையை வாங்கியவன், நேரே உள்ளே சென்றான். அவனோடு பின்னே சென்ற யமுனா அடி மேல் அடி வைக்கவே யோசித்து யோசித்து மெதுவாகச் சென்றாள்.
சென்னையில் இருக்கும் அந்த பிரம்மாண்டமான வில்லா மாலை ஐந்து மணிக்கு, பெசன்ட் நகரின் கடல் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருந்தது. அங்கு இருந்த மரம் செடிகள், காற்றின் சொல் கேட்டு ஆடிக் கொண்டிருந்தது. தேவ் ஆராதனாவை தூக்கிக்கொண்டு உள்ளே வரும் போது முதலில் கண்ட நிதின், “ஐ... பெரியப்பா… பாப்பா…” என்று கத்தினான்.
அவன் சத்தத்தைக் கேட்டு முதலில் வந்த திவ்யா, “அத்தை… அத்தான் வந்துட்டாங்க” என்று கத்திய பின், சீதாலட்சுமி தன் அறையிலிருந்து வெளியில் வந்தார்.
“என்னப்பா தேவ், யார் இந்த குழந்தை? அழகா இருக்கே” என்று கூறியவரிடம், “இந்த வீட்டு இளவரசிம்மா… ஆராதனா சத்யதேவ்!” என்று தேவ் கூறும்போது இருந்த அதிர்ச்சி, பின்னாடி யமுனா வருவதைக் கண்ட பின் இருமடங்காக ஆனது.
“யமுனாம்மா…” என்றவர் அதிர்ச்சியில் மயங்கினார். அவரைத் தாங்கிப் பிடித்த திவ்யா அவரை சோஃபாவில் படுக்க வைத்தாள். அப்போது யமுனாவும் விரைந்து வந்து, “அத்தைக்கு என்ன ஆச்சு திவ்யா?” என்று பதறினாள்.
“பயப்படாதே யமுனா... இப்போது முழிச்சுருவாங்க” என்று அவர் மீது தண்ணீர் தெளித்த பின் எழுந்த சீதாலட்சுமி, “ஐய்யோ மயங்கிட்டேனா” என்று சாதாரணமாகச் சொன்னவர், தேவ்வின் இறுகிய முகத்தைப் பொருட்படுத்தாமல், “என் பேத்தியைக் கொடுடா” என்று உரிமையாகக் கேட்டார்.
யமுனாவிற்குத் தான் குற்ற உணர்ச்சியாக இருந்தது. இப்படி பாசம் வைத்திருக்கும் அத்தையிடம் கூறாமல் சென்றுவிட்டோமே என்று. இவ்வளவு சாதுவான அத்தைக்கு இப்படி திமிரான மகனா? என்று நினைத்தவளிடம், “அண்ணி வந்துட்டீங்களா?” என்று மாடியிலிருந்து குழந்தையுடன் வந்தாள் பிரியா.
“பிரியா, நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? குணா, திவா அத்தான் எல்லாம் எங்கே? நல்லா இருக்காங்களா?” என்று கேட்ட யமுனாவை,
“வீட்ட விட்டு போனவளுக்கு இந்த அக்கறை எல்லாம் இருக்கா என்ன? என்னமோ ஊருக்கு போய்ட்டு வந்த மாதிரி கேசுவலா விசாரிக்கிற, கொஞ்சம் கூட உனக்கு குற்ற உணர்ச்சி இல்லை” என்று குத்தலாகப் பேசிய தேவ்விடம், “தேவ் நிறுத்து, இனி நீ ஒரு வார்த்தை பேசாத” என்று அதட்டினார் தாய்.
“நீ வந்ததே போதும் யமுனா, இனி எங்களை விட்டு போக மாட்டன்னு எனக்கு சத்தியம் பண்ணும்மா” என்று கேட்ட தாயிடம், “அம்மா, கொஞ்சம் அண்ணிக்கு ரெஸ்ட் கொடுங்க. அவங்களே பாவம் களைச்சு வந்திருப்பாங்க” என்று யமுனாவை கொஞ்சம் நேரம் தூங்குமாறு கூறினாள் பிரியா.
“அத்தை, அதுவந்து ஆதிரா எங்கே?” என்று தடுமாறிக் கேட்ட மருமகளிடம், “எல்லாம் அப்புறம் பேசிக்கலாம் மா, நீ இப்போது தூங்கு, ஆராதனாவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று திவ்யாவிடம் யமுனாவை அழைத்துச் செல்லுமாறு கூறினார் சீதாலட்சுமி. தேவ்விடம் ஒரு கடுமையான அமைதி இருந்தது.
யமுனா சென்ற பின், “என்னப்பா தேவ் இப்படி இருக்க நீ…? யமுனா இல்லாத இந்த ஒன்றரை வருஷம் நீ நீயாக இல்லை. அவள் வந்த பின் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதை மாதிரி நடந்துகொள்கிறாயே” என்று கவலையாகக் கூறிய தாயிடம்,
“நீங்கள் சொல்றது எல்லாமே உண்மை தான் மா. நான் யமுனாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். ஆனால் அதே அளவு அவள் மேல் வெறுப்பும் இருக்கு… அவள் அன்னிக்கு என்னிடம் பேசிய பேச்சு என்ன?
அவளால் தான் இன்று குணாவும் பிரியாவும் வாழ்க்கையில் அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். ஆனால் யமுனா என்னமோ இவ்வளவு நாள் பிக்னிக் போய்ட்டு வந்த மாதிரி, இவங்க எப்படி இருக்காங்க, அவங்க எப்படி இருக்காங்கனு விசாரிசிட்டு இருக்கா” என்று கோபமாகப் பேசிய மகனிடம், என்ன சொல்லி சமாளிப்பது என்று கூட சீதாலட்சுமிக்குத் தெரியவில்லை.
யமுனா திவ்யாவின் பின்னாடி ஒரு அறைக்குச் சென்றாள். “இங்கே படுத்துக்கோ யமுனா” என்று கூறிய திவ்யா ஏதோ பேச வாயெடுத்து பின் அமைதி ஆனாள். இதைக் கவனித்த யமுனா,” ஏதாவது பேசணுமா திவ்யா?” என்று அவள் கூறி முடிப்பதற்குள், யமுனாவின் கால்களில் விழுந்து கதறி அழுதாள் திவ்யா.
“என்னை மன்னிச்சிரு யமுனா, உன்னுடைய இந்த நிலைக்கு நான் மட்டும் தான் காரணம். இவ்வளவு நாள் தினமும் தூங்கும்போது அழுதிருக்கேன். இப்போது கூட தேவ் அத்தானின் பிடியில் மாட்டிக்கொண்டு தான் இங்கு வந்திருப்ப. என்னை மன்னிச்சிரு யமுனா, உன் காலில் விழுவதற்குக் கூட எனக்கு தகுதி இல்லை” என்று அழுதுகொண்டே தரையில் தோய்ந்தாள்.
“எழுந்திரு திவ்யா, இனி அழுது ஒரு பிரயோஜனமும் இல்லை. எல்லாத்தையும் மீறி என் விதி இப்படித் தான் எழுதப்பட்டு இருக்கு. அதனால் எழுந்திரு, ப்ளீஸ் நானே ரொம்ப நொந்து போய் இருக்கேன்” என்று யமுனா கலங்கிய பின், அவளுக்குத் தனிமை கொடுக்க நினைத்த திவ்யா வெளியில் வந்தாள்.
***
ஆராதனாவை அழகாக ஹாலில் தவழவிட்டு, நிதின் மற்றும் தர்ஷி அவளின் பக்கத்தில் உட்கார்ந்து, “பாப்பா பாப்பா” என்று கைகளைத் தட்டி ரசித்துக் கொண்டிருந்தனர். இதனை சோஃபாவில் அமர்ந்த சீதாலட்சுமி மகிழ்ச்சியாய் பார்த்துக் கொண்டு இருந்தவர், திடீரென அங்கு சோகமாய் நின்று கொண்டிருந்த பிரியாவைப் பார்த்து மனது வெதும்பியது.
“உன் மாப்பிள்ளை கிட்ட சொல்லிட்டியா பிரியா” என்று கேட்ட அன்னையைத் திரும்பிப் பார்த்தாள் பிரியா.
“கால் பண்ணேன்மா, எப்போதும் போல அவர் எடுக்கவில்லை” என்று வெறுமையாகத் தன் குழந்தையைப் பார்த்த பிரியா, “மெசேஜ் பண்ணிருக்கேன் மா, அதனால் கண்டிப்பா யமுனா வந்தது தெரிய வரும்” என்று கூறும்போதே, தேவ் தன் இரவு உடையான பைஜாமாவை அணிந்து, தன் கை சட்டையை மடித்தபடி கீழே இறங்கினான்.
“வருவான்… கண்டிப்பா அவன் வருவான்! இனி வந்து தான ஆகணும்” என்று கடுப்பாக மகன் கூறியதைப் பார்த்து அதிர்ந்த அம்மா, “தேவ், திவாகர் இந்த வீட்டு மாப்பிள்ளைப்பா, மரியாதை கொடுத்து பேசு” என்றார்.
அன்னையைப் பொருட்படுத்தாதவன், “பொண்டாட்டியை வீட்ட விட்டு அனுப்புனவனுக்கு எல்லாம், என்ன மரியாதை வேண்டிகிடக்கும்மா” என்று கத்தினான்.
“ஏன்பா அதே கேள்வியை உன்னிடம் யாரும் கேட்க முடியாது என்பதால் தான், உன் தவறும் உனக்கு புரியவில்லை. முதலில் உன்னிடம் உள்ள பிழையைத் திருத்து தேவ்” என்று அழுத்தமாகக் கூறினார் சீதாலட்சுமி.
தன் அன்னையின் கூற்று மனதில் ஏறி மூளைக்குச் செல்லும்போதே, யமுனாவினால் தான் தன் தாய் தன்னை இப்படிச் சொல்லுகிறார் என்று கடுப்பில் இருந்தவன், நேராக யமுனா இருந்த அறைக்குச் சென்றான். மேலே தாழ்ப்பாள் போட்டு உள்ளே தூங்கிக் கொண்டிருந்தாள் யமுனா. இந்த மூன்று நாட்களாக தேவ் படுத்தியப்பாடின் விளைவாக, ஆராதனாவிற்கு பால் கொடுப்பதைக் கூட மறந்து, நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக