மாயம் 42
“ஆ... ரேஷ் என்ன ஆச்சு, நான் ஆபிஸில் இருக்கிறேன்” என்று யமுனா கூறும்போது,
“யம்மு, ஆராதனா அழுதுட்டே இருக்கா. பாட்டில் பால் குடிக்க மாட்டுறா, சோறு ஊட்டுனா சாப்பிடலை. பாவம் பிள்ளை பதினைந்து நிமிஷமா விடாமல் அழுறா” என்று கூறும்போதே யமுனாவின் கண்களில் கண்ணீர் கொட்டியது.
“யம்மு லைன்ல இருக்கியா? அம்மா ஃபோனில் சொன்னாங்க, நீ தாய்ப்பால் கொடுக்கும் நேரம் இதுன்னு. ஒரு அரை மணி நேரம் பெர்மிஷன் போட்டு வந்து பால் குடுத்துட்டு போடீ” என்றாள் ரேஷ்மி.
“சரி டீ” என்று கூறிவிட்டு காலை கட் செய்த யமுனா மனதில், ‘தன் சொந்தக் குழந்தைக்கு பால் கொடுக்க, குழந்தையின் தந்தையிடமே கை ஏந்தும் தாய் நானாக மட்டும் தான் இருப்பேன், திமிரு பிடிச்சவன்! கல் நெஞ்சக்காரன்!’ என்று நினைக்கையில், “என்ன ஆச்சு, எதுக்கு அழுதுட்டு இருக்க?” என்று கேட்டவனின் குரலில் அதட்டல் மட்டுமே தெரிந்தது.
“அது… வந்து என் குழந்தைக்கு பால் கொடுக்கும் நேரம் இது, ரொம்ப நேரமா அழுகுறாளாம். ஒரு அரை மணி நேரம் பர்மிஷன் கொடுத்தீங்கனா… பால் கொடுத்துவிட்டு வந்திடுவேன் சார்” என்று சொல்லி முடிக்கும் போதே, யமுனாவின் மூக்கே சிவந்து விட்டது.
‘பாவி… இவள் குழந்தையாம், நான் இல்லாமல் தனியா குழந்தை பெத்துக்கிட்ட மாதிரி பேசுறா, திமிருப்பிடிச்சவள்!’ என்று நினைத்தவன், “குழந்தைக்கு பால் இன்னும் கொடுத்துட்டு இருக்கனு, ஏன் நேற்றே சொல்லவில்லை? இது தான் நீ குழந்தை மேல் அக்கறை காட்டும் லட்சணமா?” என்று கடுப்பில் எழுந்தவன், “கிளம்பு” என்று கூறிவிட்டுத் தன் காரை எடுக்கச் சென்றான்.
யமுனாவும் மடமடவென தேவ்வின் பின்னால் ஓடியவள், காரின் பின் சீட்டில் அமர செல்லும்போது, “ரொம்ப ஸ்மார்ட்டா பிஹேவ் பண்றோம்ன்னு நினைக்காத யமுனா, முன்னாடி வந்து ஏறு” என்று வண்டியை ஸ்டார்ட் செய்தான். யமுனாவும் முன்னாடி ஏறி அமர்ந்தாள்.
வண்டியை எடுத்தவன் வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தபோதே, “பெயர் என்ன?” என்று கம்பீரமாகக் கேட்டான். தேவ் தனக்கு பிறந்தது ஆணா பெண்ணா என்று கூடத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
“எனக்கு புரியல” என்று கேட்ட யமுனாவை முறைத்தவன், “குழந்தை பெயர் என்ன? உனக்கு எல்லாம் விளக்கமாகச் சொன்னால் தான் புரியுமா?” என்று எரிந்து விழுந்தான்.
“ஆராதனா” என்று தடுமாறினாள்.
தேவ்வின் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம். தன்னுடைய உதிரம் இன்று பெண் குழந்தையாய் பிறந்திருப்பது, அவனுக்கு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும் போல் தோன்றியது.
“எவ்வளவு மாசம் ஆகுது?” என்று கேட்டவனிடம், “ஒன்பது மாசம்” என்று கூறியவளுக்கு பால் கட்டியதின் வலி வேறு.
கார் வீட்டை அடைந்த பின் வேகமாக இறங்கிய யமுனா, முதலில் பாத்ரூமிற்குச் சென்று கட்டிய பால்லை கொட்டிவிட்ட பின், அங்கு ரேஷ்மியின் கையில் அழுதுகொண்டு இருந்த ஆராதனாவை வாங்கிக் கொண்டு, பால் கொடுக்க உள்ளே ஓடினாள்.
வெளியேவே காத்துக்கொண்டிருந்த தேவ்வின் மனது, தனது மகளைப் பார்க்கத் துடித்தது. ஆனால் யமுனாவின் மேல் கோபம் கொண்ட மனது, ‘யமுனாவை முதலில் வெச்சு செய்ய வேண்டும், பின் உரிமையாய் தன் மகளை ஏந்த வேண்டும்’ என்று தீர்மானித்தான்.
ஷிரீஜா மற்றும் சுஜித் வங்கியில் பணம் எடுக்கச் சென்றதால், வீட்டில் ரேஷ்மி மட்டுமே குழந்தையோடு இருந்தாள். பால் கொடுக்கும்போதே ஆராதனா தூங்கிவிட்டதால் குழந்தையைத் தொட்டிலில் போட்டவள், தன் உடையை மாற்ற கையில் கிடைத்த சேலையை எடுத்தாள். சுடிதார் என்றால் பால் சுரந்த பின் கொட்டுவது கஷ்டமென்பதால் சேலையைக் கட்டினாள்.
ரேஷ்மியிடம் விடைபெற்று விட்டு வெளியே செல்லும்போது, தேவ் தன் காரில் மீது சாய்ந்து கொண்டு சேலையில் வரும் யமுனாவைத் தான் தீவிரமாகப் பார்த்தான். காரை எடுத்தவன், யமுனா ஏறியதும் “அழுகையை நிறுத்திட்டாளா?” என்று கேட்டுக்கொண்டே ஓட்டத் தொடங்கினான்.
“ஆ… தூங்கிவிட்டாள் சார்” என்று தடுமாறினாள்.
“அடுத்து எப்போது பால் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டவனின் கேள்வியை சங்கடமாக உணர்ந்தவள், “இரவு ஏழு மணி சார்” என்றுவிட்டு வேறு பக்கம் திரும்பினாள்.
பின் தேவ் யமுனாவிடம் எதுவும் பேசவில்லை. கார் அலுவலகத்திற்கு வந்த பின்னர், யமுனா தன் இடத்தில் அமர்ந்து தண்ணீர் அருந்திக் கொண்டிருந்தாள். மூச்சு வாங்க பால் கொடுத்து, சேலையை மாற்றிவிட்டு ஓடி வந்தவளுக்கு, தண்ணீர் தாகம், பால் கொடுத்ததால் இப்போது அவளுக்கு பசிக்க ஆரம்பித்தது.
***
காலையிலேயே சரியாக சாப்பிடாமல் வந்தவளுக்கு, உடல் சோர்வாக இருந்தது. இதில் தேவ்விடம் இருந்து அவன் அறைக்கு வருமாறு அழைப்பு வந்தது. இன்னும் பத்தே நிமிடத்தில் லன்ச் டைம் அது வரைக்கும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவள், தேவ்வின் அறைக்குள் சென்றாள்.
யமுனா வருவதையே பார்த்தவன், “எனக்கு லாஸ்ட் மூன்று வருஷங்களோட பேலன்ஸ் சீட் எக்செலில் வேண்டும் அதுவும் உடனே” என்று கூறிவிட்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
“சார், இப்போது லன்ச் டைம். சாப்பிட்டு விட்டு நீங்கள் கொடுத்த வேலையை வேகமாக முடித்துக் கொடுக்கிறேன் சார்” என்று கூறியவளை வேடிக்கையாகப் பார்த்தவன்,
“இவ்வளவு நாள் வீட்டில் நல்லா சொகுசா தான இருந்த, இன்னிக்கு வேலை பார்த்தா ஒன்னும் குறைஞ்சிற மாட்ட. வொர்க் ஃபர்ஸ்ட், லன்ச் நெக்ஸ்ட். முதல்ல வேலையை முடி” என்று கணீரென்று கூறியவனைக் கலங்கிய விழிகளோடு பார்த்தாள்.
யமுனா, ‘இவனுக்கும் தங்கச்சி இருக்குல்ல, குழந்தைக்கு பால் கொடுத்தால் அந்த தாய்க்கு பசிக்கும்றது கூடவா தெரியாது?’ என்று நினைத்தவள், வேறு வழியின்றி தன் இடத்திற்குச் சென்று வேலையை ஆரம்பித்தாள்.
யமுனாவிற்கு மனது ஒத்துழைத்தாலும் உடல் ஒத்துழைக்கவில்லை. அனைவரும் சாப்பிட்டு வந்ததும், “யமுனா ஏன் இன்னும் சாப்பிடவில்லை?” என்று கேட்டனர். “பிறகு சாப்பிடறேன்” என்று வாய் சொன்னாலும், அவளின் பசியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மயக்கமே வருவது போல் இருந்தது. இதற்குப் பிறகும் தன்னால் முடியாது என்று உணர்ந்த யமுனா, தேவ்வின் அறைக்கே சென்றாள்.
பக்கத்தில் இருக்கும் உயர்தர உணவகத்தில் இருந்து தேவ்விற்கு சாப்பாடு வந்தது. அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தான் யமுனா வந்தாள். அவன் சாப்பிடுவதைப் பார்த்தவள், மனதில் கடிந்து கொண்டே, “சார் எனக்கு முடியல, கொஞ்சம் மயக்கம் வருவது போல் இருக்கு. ஒரு பத்து நிமிஷம் தான் சார், சாப்பிட்டு விட்டு என் வேலையைத் தொடர்கிறேன்” என்றவளை நக்கலாகப் பார்த்தான்.
“டூ வாட் ஐ சே. உனக்கு சாப்பாடு தான் முக்கியம்னா உன் சீட்டை கிழிச்சிருவேன்” என்று அவன் கூறும் போது கோபத்தில் பொங்கிய யமுனா, “சார் திஸ் இஸ் டூ மச், என்னுடைய லன்ச் டைமில் என்னை சாப்பிட அனுமதிக்கவில்லை என்றால், நான் இப்போதே ஷிரீஜா மேடமிடம் உங்களை கம்ப்ளைன்ட் பண்ணுவேன்” என்றவள் மடமடவென ஷிரீஜாவிற்குக் கால் செய்தாள். யமுனா செய்வதை வேடிக்கையாகப் பார்த்த தேவ் சாப்பிட்டுக் கொண்டே யமுனாவைப் பார்த்தான்.
“ஷிரீஜா அம்மா, நான் யமுனா பேசுறேன்…” என்று அவள் கூறும்போதே,
“யமுனா, இன்று காலை கம்பெனி தேவ் சாரின் பெயரில் மாற்றப்பட்டதும்மா. தேவ் சார் என்ன சொன்னாலும் செய்ம்மா. நான் நினைத்தது போல் அவர் இல்லை. ரொம்பவே உன் விஷயத்தில் முரண்டு பிடிக்கிறார். அதனால் உன்னிடம் நிறைய வேலை வாங்குவார் என்று என்னிடம் இப்போது தான் கால் செய்து கூறினார். அதைப்போல் ஆபிஸ் நேரத்தில் உன்னிடம் பேசக்கூடாது என்று வேற சொல்லிருக்கார். நீ பார்த்துக்கோ, தேவ் சார் சொல்வதைச் செய். வேலை அதிகமாகத் தான் இருக்கும்” என்று பட்டும் படாமல் பேசிவிட்டு காலை கட் செய்த ஷிரீஜாவின் கூற்றைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்தாள் யமுனா.
தேவ்வின் சதி இதில் இருக்கும் என நினைத்தவள், “என்ன பண்ணீங்க சார்? ஏன் ஷிரீஜா மேடம் இப்படி பேசுறாங்க?” என்று அவனைப் பார்த்து கேட்டாள்.
“பரவாயில்லையே கண்டுபிடிச்சிட்ட, உங்கள் ஷிரீஜா மேடம் ஏன் இந்த கம்பெனியை விக்குறாங்கனு தெரியுமா?” என்று ஏளனமாகக் கேட்டவனை,
“அவங்களுக்கு வயசு ஆகிடுச்சு. அதான் பாத்துக்க முடியலைன்னு விக்குறாங்க சார்” என்று கூறினாள்.
“ஹா ஹா அது உங்கள் எல்லார் கிட்டயும் சொன்னது, உண்மை என்னன்னா அவங்க மூன்று வருஷமா கடன் வாங்கித் தான் இந்த கம்பெனியை ரன் பண்ணிருக்காங்க. கடன் வாங்கியது தேவ் பைனான்ஸ்ஸிடம். நேற்று என் கண்ணில் நீ மாட்டாதவரை எங்க டீலிங் எப்படி இருந்துதுன்னா… கம்பெனியை நான் வாங்கிய பிறகு, மிச்ச பணத்தை அவங்க பையன் செட்டில் பண்றதா இருந்துச்சு.
ஆனால் உன் கெட்ட நேரம் என் கையில இப்போது மூன்றாம் முறையா சிக்கியிருக்க... அதனால் இன்று மார்னிங்கே ஒரு டீலிங் போட்டேன். ரிமைனிங் பணம் வேண்டாம். பட் உங்களின் அக்கவுண்டன்ட் யமுனா நான் கொடுக்குற வேலை எல்லாத்தையும் செய்தால் மட்டும் தான் இங்கு வேலைன்னு கூறிவிட்டேன். உன் திறமை மேல அளவு கடந்த நம்பிக்கை உன் ஷிரீஜா அம்மாவிற்கு. ஆனால் அவங்களுக்குத் தான் தெரியவில்லை, இந்த தேவ்விற்கு யமுனா செய்து முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு என்று” என்று எழுந்தவன் தன் கையைக் கழுவிவிட்டு வந்தான்.
“சார் ப்ளீஸ், உங்களிடம் நான் வேலை பார்க்கிறேன் என்பதால், என்னால் இப்போது சாப்பிடாமல் வேலை பார்க்க முடியாது. எனக்கு குழந்தை இருக்கிறது, அவளுக்கு பால் கொடுக்கவாவது நான் சாப்பிட வேண்டும்” என்று கையேந்தி கெஞ்சியவளிடம் நெருங்கியவன்,
“அதான் என்கிட்ட மாட்டிக்கிட்டியே, இன்னும் என்னடி சாருன்னு நடிச்சிட்டு இருக்க?” என்று யமுனாவின் கையை முறுக்கியவன், “ரொம்ப பசிக்குதா?” என்று பொய்யாக பாவமாகக் கேட்டான்.
“தேவ் ப்ளிஸ்… கை ரொம்ப வலிக்குது விடுங்க” என்று அழுதவளை மதிக்காதவன், “சாப்பிட்டு வா, அதுவும் என் பொண்ணுக்கு நீ பால் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் சாப்பிட விடுறேன். இன்னும் டென் மினிட்ஸ் தான், சாப்பிட்டு வா… உனக்கு இருக்கு” என்று வன்மையாகக் கூறியவன், அவளின் கையை விடுவித்தான்.
உடல் வலியும் மன வலியும் சேர்ந்து யமுனாவைப் படுத்தியது. காலையில் பேக் செய்த தொசை மற்றும் சட்னி காய்ந்தே விட்டது. தன் குழந்தைக்காகவாவது உயிர் வாழ வேண்டும், உயிர் வாழ சாப்பிட வேண்டும் என்றே, வேறு வழி இல்லாமல் தோசையை விழுங்கியவள், தண்ணீரையும் குடித்துக்கொண்டு ஒருவாறு சாப்பிட்டு முடித்தாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக