மாயம் 41
“என்ன ஷிரீஜா மேடம், உங்களுடைய அக்கவுண்ட்டிற்கு வாய் இல்லையா? நீங்களே பேசிக்கொண்டு இருக்கீங்க. அவங்களை வேலையில் வைக்கணுமா வேண்டாமா?” என்று நக்கல் தொனியில் தேவ் பேசிய விதம், ஷிரீஜாவிற்கே வருத்தத்தைக் கொடுத்தது.
“சாரி சார், அது வந்து கைக்குழந்தை வெச்சிட்டு இருக்கா, கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க” என்று ஷிரீஜா கூறியபோது அதிர்ந்த தேவ், அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், “கணவன் வெளிநாடுன்னு சொல்றீங்க? அப்போது எதுக்கு மேடம் மிஸஸ் யமுனா கைக்குழந்தையுடன் கையேந்திட்டு நிற்க வேண்டும்?” என்று இம்முறை அவனுடைய வார்த்தையில் கடுமை இருந்தது.
தேவ்வின் லாஜிக்கான கேள்வியில் வாயடைத்துப் போன ஷிரீஜா, என்ன விடை சொல்வது என்று தெரியாமல் விழித்தார். யமுனா ஊமை போல் வாயைத் திறக்கக் கூட பயந்து, தலையை நிமிராமல் இருந்தாள்.
மேலும் தொடர்ந்த தேவ், “ஓகே ஷிரீஜா மேடம், அது அவங்க பர்சனல் தட்ஸ் நாட் மை பிராப்ளம். எனக்கு நாளையில் இருந்து இந்த அக்கவுண்ட்டண்ட் யமுனா உங்கள் ஆபிஸிற்கு வர வேண்டும். எனக்கு டுடே கம்பெனியின் வரவு, செலவு, லாபம், நஷ்டம் எல்லாம் தெரிய வேண்டும்” என்றான் திமிராக. இதைக் கேட்ட பெண்கள் இருவரும் திகைத்து நின்றனர்.
***
“தேவ் சார், குழந்தையை வெச்சிட்டு இருக்கா?” என்று ஷிரீஜா கூறும்போதே, “வேலை வேண்டும் என்றால் நான் சொன்னதைக் கேட்டு தான் ஆக வேண்டும்” என்று யமுனாவை அழுத்தமாகப் பார்த்தான் தேவ்.
“சரி சார், யமுனா நாளையிலிருந்து வருவாள்” என்று வாக்கு கொடுத்த பின் தேவ் கிளம்பினான்.
யமுனாவிற்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. ஷிரீஜாவிடம் உண்மையைச் சொல்லி விடலாமா? என்று நினைத்தவள், முதலில் தேவ் எப்படி இங்கே என்று விசாரிக்கலாம் என்று ஷரீஜாவை நாடினாள்.
“ஏன் யமுனா, இன்னும் சுஜித், ரேஷ்மி வரவில்லை? உன்னிடம் ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்டவரிடம், “தெரியவில்லை அம்மா, நான் கால் செய்தேன், ‘அப்புறம் பேசுறேன்’ என்று ரேஷ்மி மெசேஜ் மட்டும் பண்ணிருந்தாள்” யமுனாவிற்கு இப்போது தேவ் வந்த பின் சுஜித், ரேஷ்மி பிரச்சனை மனதில் பதியவில்லை.
ஷிரீஜாவிடம் எப்படி தேவ்வை பற்றி பேச்சு ஆரம்பிக்கலாம் என்று யோசித்தவள், “அம்மா, இன்று மூன்று பேர் கொட்டேஷன்க்கு வராங்கனு சொன்னீங்க, ஆனால் ஒருத்தர் மட்டும் வந்திருக்கார்” என்று கேட்டவளிடம்,
“ஆமாம் யமுனா, மூன்று பேர் வந்திருந்தாங்க. இப்போது வந்த சத்யதேவ் சார் இந்தியாவிலேயே டாப் பிசினஸ்மேன். இவர் நிறைய பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். இவருடைய தம்பி குணா தான் வருவதாக இருந்தது. ஆனால் அவரை ஏதோ அவசர வேலையாக பெங்களூர் அனுப்பியதால் இவரே வந்தாராம்…
இவரைப் பார்த்த பின் எனக்கு பெரிய ஷாக். நான் கூட அவரிடம் கேட்டேன் அவர் தம்பிக்கு பதிலாக வந்திருக்கிறேன், தம்பிக்கு நீண்ட நாள் பப்ளிகேஷன் கம்பெனி வாங்க ஆசையாம். அதுவும் வேற மாநிலம் என்றவுடன் தேவ் தான் அவர் தம்பியை வாங்க புஷ் பண்ணாராம். அப்போது தான் இந்தியாவில் எல்லா இடத்திலும் அவர்கள் பிசினஸ் நிலைத்து நிற்கும் என்றார் தேவ்” என்ற ஷிரீஜா, “எவ்வளவு பிசினஸ் மைண்ட் பாரேன் யமுனா, ஹி இஸ் வெரி கிளவர். இவர் டுடே பப்ளிகேஷன் வாங்கிவிட்டால் டாப்புக்கு எடுத்துட்டு போய்டுவார்” என்றார்.
தன் சொந்தக் கதையைக் கூற வேண்டாம் என்று நினைத்த யமுனாவின் மனதில் ஆயிரம் குழப்பங்கள் சூழ்ந்தது. ‘வெளிநாட்டில் கணவன், குழந்தை என்றவுடன் நான் இன்னொருவனை மணந்து வேறு ஒருவனுக்கு பிறந்த குழந்தை என்று நினைத்திருப்பானோ? அதான் என்னை மதிக்காமல் அலட்சியப்பார்வை பார்த்தானோ?’ என்று ஏகப்பட்ட கேள்விகளை மனதில் சுமந்தவளுக்கு தலை கனக்க ஆரம்பித்தது. அப்போது தான் உள்ளே வந்தனர் சுஜித் மற்றும் ரேஷ்மி.
“இரண்டு பேரும் ஏன் கோயிலுக்குப் போயிட்டு வர இவ்வளவு லேட்?” என்று கேட்டார் ஷிரீஜா.
“அம்மா ரேஷ்மியுடைய பிரண்ட் அம்முவை கோயிலில் பார்த்துட்டோம். அந்த பொண்ணு அவங்க வீட்டுற்கே கூட்டிட்டுப் போய் இவ்வளவு நேரம் மொக்கை போட்டு இப்போது தான் கிளம்புனோம்” என்று சலித்தவனை,
“ஏய், அம்மு ஒன்னும் மொக்கை போடலை. உனக்கு பரிட்சயம் இல்லாதங்க பத்தி இப்படி பேசாத சுஜூ ஏட்டா” என்றாள் ரேஷ்மி.
“என்ன ஏட்டாவா?” என்று கண்களை விரித்தார் ஷிரீஜா. “சரி எங்களுக்கு தூக்கம் வருது” என்று நகர்ந்தனர் சுஜித் மற்றும் ரேஷ்மி.
“சரியான வால் பசங்க” என்று சிரித்துக்கொண்டே வந்த ஷிரீஜா, யமுனா கையைப் பிசைந்து கொண்டு நின்ற விதத்தைக் கண்டு, “என்ன யமுனா ஆச்சு, பதற்றமாக நிக்குற?” என்றார்.
“இல்லைம்மா, நாளைக்கு ஆடிட் பண்ண நோட்ஸ் எடுத்துட்டு போகணும், அதைப் பற்றி யோசிக்கிறேன்” என்று பொய்யைக் கூறிவிட்டு நகர்ந்தாள்.
ரேஷ்மியிடம் தேவ் வந்ததைப் பற்றிக் கூற வேண்டும் என நினைத்த யமுனா, ரேஷ்மி தூங்கச் சென்ற பின் அவளை எழுப்ப மனமின்றி சோர்வாகப் படுத்தாள்.
தன் பக்கத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஆராதனாவைப் பார்த்து, “யாரை பார்க்கக் கூடாது என்று நினைத்தேனோ, அவரே இன்று என் முன்னாடி வந்து நிற்கிறார் ஆராதனா. அம்மா நல்லா மாட்டிக்கிட்டேன் செல்லம்... என்னுடைய சந்தோஷம், துக்கம், கவலை எல்லாமே நான் உன்கிட்ட மட்டும் தான் பகிர முடியும்” என்று துயிலில் இருந்த குழந்தையிடம் கூறியவளின் கண்களில், அந்தக் கண்ணீர் எதற்காக வந்தது? என்பதை அறியும் முன்னரே துயிலிற்குச் சென்றாள் யமுனா.
திருச்சூரில் உள்ள அந்த பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அறையில் உள்ள ஜன்னலை வெறித்துப் பார்த்தான் தேவ். தன் மொபைலில் இருந்த யமுனாவின் ஃபோட்டோவைப் பார்த்தவன், அவளைப் பார்த்து கோபம் அடைந்து, அந்த ஃபோனை தூக்கி எறிந்துவிட்டு, “யமுனா யூ ஆர் டன்” என்று அறைக்குள்ளேயே கேட்குமாறு கத்தினான்.
அடுத்த நாள் சீக்கிரம் விழித்த யமுனா, ஆராதனாவை குளிப்பாட்டி விட்டு சாப்பாடு செய்யச் சமையலறைக்குள் சென்றாள். “ஏ ரேஷ் நீ என்ன இங்க?” என்று யமுனா வியந்து கேட்கும்போது,
“உனக்கு ஆபீஸ் போகணுமாமே, அதான் அத்தை நேற்று இரவே என்னைச் சமைக்கச் சொல்லிட்டாங்க. நீ ஆபிஸிற்குக் கிளம்பு யமுனா. அந்த கம்பெனியை வாங்க வந்த தேவ் வேற ரொம்ப டெரர் போலயே, அத்தை சொன்னாங்க” என்று கூறினாள் அடுப்பை கவனித்துக் கொண்டே.
“பாப்பாவை நாங்க பார்த்துக்கிறோம், நீ நிம்மதியா கிளம்பு டீ” என்று தன் வேலையில் முனைப்பாக இருந்தவளிடம், ‘வந்த அந்த டெரர் தேவ், என் கணவன் தேவ் தான்’ என்று சொல்ல நினைத்தபோது, “கார் வந்திருச்சு யமுனா கிளம்பு” என்று பின்னாடியே வந்தார் ஷிரீஜா.
ஒருவேளை இவர்களிடம் இப்போதே உண்மையை கூறியிருந்தால், யமுனா தேவ்விடம் சித்திரவதை அனுபவிக்கப் போவதை தடுக்க வாய்ப்பு இருந்திருக்கலாம். ஆனால் தேவ்விடம் மாட்டிக் கொள்ளவே யமுனா பிறந்ததால், நடப்பதை மாற்ற கடவுளே விரும்பவில்லை போல.
ஒரு கறுப்பு நிற சுடிதாரை அணிந்த யமுனா, நெற்றியில் கருப்பு பொட்டு வைத்துக்கொண்டு, வேண்டா வெறுப்பாக செல்கிறேன் பேர்வழி என்று காட்ட நினைத்தாள். ஆனால் அவளின் அழகிற்கு கருப்பு நிறம் மேலும் அழகு சேர்க்கும் என்றதை உணரவில்லை. காரில் ஏறியவள் ஃபைல்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொண்டே வருகையில் அலுவலகமும் வந்துவிட்டது.
கிட்டத்தட்ட இதுவரை மூன்று நான்கு தடவை மட்டுமே அலுவலகத்திற்கு வந்தவள், வீட்டிலேயே வேலை பார்த்ததால், இன்றும் ஆபிஸிற்கு முதல் முறை வருவது போல் உணர்ந்தாள். ஆனால் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவருக்கும், யமுனா ஷிரீஜாவிற்கு நெருங்கியவள் என்று தெரியும்.
யமுனா உள்ளே செல்லும்போது மணி ஒன்பது. அவசரமாக அக்கவுன்ட்டர் சீட்டில் உட்காரும் போதே அங்கே எச்ஆராக இருக்கும் ஷீபா, “சத்யதேவ் சார் உங்கள் வரச் சொன்னார்” என்று ஷிரீஜாவின் அறையைக் காட்டி ஆங்கிலத்தில் கூறிவிட்டு தன் சீட்டிற்குச் சென்றாள்.
‘வந்த உடனேவா கடவுளே! பயத்தில் அழுகையே வந்துவிடும் போலயே, அது ஏன் தேவ்வை எப்போது தனியா பார்க்க நேர்ந்தாலும் படபடனு அடிக்குது?’ என்று மனதில் நினைத்து டாக்குமென்ட்ஸை எடுத்துக் கொண்டாள்.
ஷிரீஜாவின் அறையில், சத்யதேவ் நேம் பிளேட்டைப் பார்த்து, ‘இன்னும் கம்பெனியே வாங்கல, அதுக்குள்ள எம்டி சீட்ல இருக்காரு. பணம் பத்தும் செய்யும்’ என்று நினைத்தவள், “மே ஐ கம் இன் சார்” என்று தேவ்விற்கு மட்டும் கேட்குமாறு கூறினாள்.
தன் லாப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தவன், யமுனாவை அழுத்தமாகப் பார்த்து, “கம் இன்” என்று கூறிவிட்டு லாப்டாப்பை மூடி வைத்தான்.
“சார்… நீங்கள் கேட்ட ஃபைல்ஸ் கொண்டு வந்திருக்கேன்” என்று அவனின் முகத்தைப் பார்க்காமல் குனிந்து கொண்டே பேசினாள்.
“என் கண்ணைப் பார்த்து பேசு, கீழே குனிஞ்சு பேச நான் ஒன்னும் உன்னைப் பொண்ணு பார்க்க வரவில்லை மிஸஸ் யமுனா” என்று அழுத்தமாகக் கூறியவன், “லாஸ்ட் ஒன் இயரோட இன்கம், எக்ஸ்பென்சஸ் அண்ட் பேலன்ஸ் சீட் எக்செலில் ரெடி பண்ணி எடுத்துட்டு வா” என்றான்.
***
தன் ஃபைல்களை எடுத்துக்கொண்டுச் சென்றவளை வெறியாகப் பார்த்தவன், கண்களை மூடிக்கொண்டு தன் குஷன் இருக்கையில் சாய்ந்தான். கஷ்டப்பட்டு லெட்ஜர் நோட்டில் இருந்ததை எக்செலிற்கு மாற்றி கொண்டு வருவதற்குள், யமுனாவிற்கு போதும் போதும் என்றாகி விட்டது.
மணி பன்னிரண்டு இருக்கும் சமயத்தில், யமுனா தேவ்வின் அறைக்குள் பெர்மிஷன் கேட்டுக்கொண்டு உள்ளே வந்து, தான் செய்ததைக் காட்டினாள். அதை தேவ் பார்த்துக்கொண்டிருந்தபோதே யமுனாவிற்கு பால் கட்டி உடை நனைய ஆரம்பித்தது. தன் துப்பட்டாவை வைத்து யமுனா மறைக்க நினைத்தாலும் தேவ்வின் கண்ணில் அது நன்றாகவே பட்டது.
தேவ் போகச் சொல்லிவிட்டால், பாத்ரூம் சென்று கட்டியதைக் கொட்ட வேண்டும் என்று நினைத்த தாயுள்ளம், ஆராதனாவை நினைத்து துடித்தது. அவள் பிறந்ததில் இருந்து ஒரு நாளும் ஒரு பொழுதும் தாய்ப்பால் கொடுக்காமல் தவறியதில்லை. அதை நினைத்து கொண்டிருக்கையில் யமுனாவின் செல், “உன்னாலே எனக்குள் உருவான உலகம் பூகம்பம் இன்றி சிதறுதடா” என்று பாட்டுடன் ஒலித்தது.
ரேஷ்மி தான் கால் செய்திருந்தாள். கால் வந்தவுடன் யமுனாவின் பார்வை செல்லில் படிந்ததை தேவ் அழுத்தமாகப் பார்த்தான். தேவ்வின் மேல் உள்ள பயத்தில் மடமடவென கட் செய்தாள். ஆனால் மறுபடியும் ரேஷ் கால் செய்தாள். இம்முறை கடுப்பான தேவ் யமுனாவைப் பார்த்து, “அட்டென்ட் பண்ணு” என்றான்.
கருத்துகள்
கருத்துரையிடுக