மாயம் 40
“பிரனிதா, இதை தேவ் உன்னிடம் தரச் சொன்னான்” என்று செக்கைக் கொடுத்தவர், “ஆதிரா இனி உன்னோடு இருக்கட்டும்” என்று கூறும்போதே அவரின் கண்கள் கலங்கியது. வேறு வழி இல்லை என்று தெரிந்த பின்னர் மனதைக் கல்லாக்கிக் கொண்டு குழந்தையை அவள் கையில் வாங்கியவர், முத்தமிட்டு திரும்பி பிரனிதாவிடம் கொடுத்தார்.
‘தங்களின் கைக்குள்ளேயே வளர்ந்த குழந்தை, இப்போது தங்களைவிட்டு போகிறது என்றால் மனது எவ்வளவு கனமாக இருக்கும்? இன்னும் இந்த விஷயம் பிரியாவிற்கும் குணாவிற்கும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தால், எப்படி கஷ்டப்படுவார்கள்?’ என்று நினைத்தவர், ‘இது தான் விதி என்று இருக்கும்போது, அதை யாரால் தான் மாற்ற முடியும்?’ என்று குழந்தையை பிரனிதா கையில் கொடுத்தார்.
“ஆன்ட்டி தேவ் எங்கே?” என்று கேட்ட பிரனிதாவிடம், “அவன் அவசர வேலையாக வெளியே சென்றுவிட்டான். நீ கிளம்பும்மா, ஆதிராவின் படிப்பு செலவு அனைத்துமே அவளின் பெயரில் பாங்கில் இருக்கிறது. நீ பள்ளி செலவின் பில்லை தேவ்வின் ஆபிஸிற்கு தபாலில் மட்டுமே அனுப்ப சொல்லிருக்கான். அதே போன்று இனி நீ தேவ்வையும் எங்களையும் பார்க்க வரக் கூடாது. இது தேவ்வின் கட்டளை!” என்று உறுதி வாங்கிக் கொண்டார்.
“சரி ஆன்ட்டி, நான் இனி உங்கள் யாருக்கும் பிரச்சனையாக வர மாட்டேன். என் வாழ்க்கையே எனக்கு திருப்பி கொடுத்துட்டீங்க” என்று ஆதிராவை அணைத்து முத்தமிட்டவள், “தேவ்வின் மனைவி இருக்காங்களா? அவங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஆன்ட்டி. அவங்க நான் வந்ததும் இன்செக்யூர்டா ஃபீல் பண்ணிருப்பாங்க” என்றாள் உண்மையான வருத்தத்துடன்.
“யமுனா… கோயிலுக்கு போயிருக்காம்மா, நான் சொல்லிக்கிறேன்” என்றவரிடம், “நான் போயிட்டு வரேன் ஆன்ட்டி, இவ்வளவு நாள் ஆதிராவை இந்த வீட்டு தேவதையாக பார்த்துக்கிட்ட உங்கள் எல்லாருக்கும் பெரிய நன்றி” என்று கைக்கூப்பிவிட்டுச் ஆதிராவைத் தூக்கிக் கொண்டாள். அந்த வீட்டு வேலையாள் ஆதிராவின் டாய்ஸ் பேக், டிரஸ் பேக் என்று அனைத்தையும் தூக்கிக் கொண்டு வந்தாள்.
“அம்மா நம்ம எங்க போறோம்? இங்கேயே ஜாலியா இருக்கலாம்” என்ற ஆதிராவிடம், “நம்ம பார்க் போலாம் டா, திரும்பி வந்துரலாம்” என்று குழந்தையை ஒருவாறு சமாளித்தாள்.
“நம்ம காரிலேயே கிளம்பு மா… திங்க்ஸ் காரில் இருக்கு” என்று மனது வலியுடன், ஆதிராவை தேவ் மற்றும் அனைவரும் பிரிந்தனர்.
அடுத்த நாள் வந்த குணா மற்றும் திவ்யா தம்பதியருக்கு தலை சுற்றாத குறைதான். “குணா, யமுனாவைப் பார்த்து இரண்டு வருடங்கள் ஆச்சு ஆசையாய் வந்தேன். மறுபடியும் என்னை விட்டுட்டு போயிட்டா…” என்று அழுதவளிடம்,
“திவ்யா, இது உனக்கே ஓவரா இல்லை? யமுனா அண்ணி அவங்க கணவனையே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல உன்னை விட்டுட்டுப் போனது தான் முக்கியமா?” என்று சலிப்பாய் கேட்டான்.
“எப்படி இருந்தாலும் யமுனா இந்த பாழும் கிணற்றில் விழுவதற்கு நான் தான் காரணம்” என்று அழுதவளைக் கண்ட குணாவிற்கு கோபம் அதிகமாக வந்தது.
“பாழும் கிணறா? தேவ் அண்ணாவை கல்யாணம் பண்ண எல்லா பொண்ணுங்களும் கியூவில் நிக்குறாங்க, நீ என்ன ஓவரா பேசுற?” என்று கூறியவனைத் தடுத்தார் சீதாலட்சுமி.
“நீங்கள் இரண்டு பேரும் சண்டை போட்டு பிரயோஜனம் இல்லை, தேவ், யமுனா இருவர் மேலும் தப்பிருக்கு. ஆனால் அவங்கள் இருவரும் ஒருத்தர் மேல் ஒருத்தர் காதலை வைத்திருக்கிறார்கள். இரண்டு வருடங்கள் கழித்து எப்படி தேவ்வின் கண்களில் யமுனா தென்பட்டாளோ, அதே போல் விதி அவர்களின் காதலை மறுபடியும் சேர்த்து வைக்கும் என்று கடவுள் மீது பாரத்தைப் போட்டு விட வேண்டும்” என்றவர்,
“பிரியாவின் குடும்பத்திற்கும் விஷயம் எல்லாம் சொல்லியாச்சு. மாப்பிள்ளை பிரியாவிடம் ஒரே சண்டை. பிரியா அழுதுகொண்டே பேசுகிறாள்” என்றார் சீதாலட்சுமி கவலையாக. இப்படியே கண்ணீரும் கவலையுமாக ஒன்றரை வருடங்கள் சென்றது.
***
தனது ஒன்பது மாத குழந்தையுடன் வசித்து வந்த யமுனாவை, ரேஷ்மி ஒருமுறை காண வந்தாள். ஷிரீஜாவின் நிழலில் இருந்த யமுனா அவரை ஒரு தாயைப் போலவே பார்த்தாள்.
யமுனா ஷிரீஜாவின் கம்பெனியான, டுடே பப்ளிகேஷன் கம்பெனியின் வரவு செலவு மற்றும் அந்த பெரிய வீட்டின் பராமரிப்பை பார்த்துக் கொண்டாள். குழந்தை இருந்தாலும் பால் கொடுக்கும் நேரம் தவிர்த்து, ஷிரீஜாவிடமே இருக்கும் என்பதால் எல்லா வேலைகளையும் செய்தாள். யமுனாவை வீட்டிலேயே அக்கவுன்ட்ஸ் பார்க்குமாறு கூறினார் ஷிரீஜா. அதனால் அவளுக்கு வேலைப்பளு பெரிதாக இல்லை.
அன்று மாலை வெளிநாட்டில் இருந்து வந்தான் ஷிரீஜாவின் மகன் சுஜித். லண்டனில் மென்பொருள் பொறியாளராக இருக்கும் சுஜித், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கேரளா வருவான். சுஜித் வந்த உடனே யமுனா ஏதோ சங்கடமாய் உணர்ந்தாள்.
‘எப்படி இருந்தாலும் இன்னும் எவ்வளவு நாள் ஷிரீஜாவின் அரவணைப்பில் இருக்க முடியும்? ஒருநாள் வெளியே சென்று தானே ஆக வேண்டும்?’ என்று மனது இப்போது நினைக்கத் தொடங்கியது. ஷிரீஜா சுஜித்துடன் ஃபோனில் பேசும்பொதே, யமுனா இங்கு எப்படி வந்தாள் என்று அனைத்துமே அவனுக்கு தெரிவிக்கப்பட்டதால், யமுனாவைக் கண்டவன் சிநேகமாக புன்னகைத்தான்.
ஆராதனாவைத் தூக்கிக் கொஞ்சிய சுஜித் யமுனாவிடம், “ரொம்ப நன்றிங்க. நீங்கள் இங்கே இருப்பதால் தான் அம்மாக்கு பாதுகாப்பு மற்றும் சந்தோஷம் இருக்கிறது” என்றான்.
“ஷிரீஜா அம்மா தான் எனக்கு இப்பொது அடைக்கலம் மற்றும் பாதுகாப்பு சார்” என்றாள் யமுனா.
“சார் என்று கூப்பிடாதே யமுனா, இனி உனக்கு நான் அண்ணன்” என்று சொல்லும்போது தான் யமுனாவிற்கு மனதில் ஒரு இனம் புரியாத நிம்மதி.
“சரிங்க அண்ணா, அப்புறம் ரேஷ்மிக்கும் உங்களுக்கும் எப்போது கல்யாணம்?” என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தவன், “நான் ரேஷ்மியைக் காதலிப்பது ரேஷ்மியைத் தவிர யாருக்கும் தெரியாதே, இன்ஃபக்ட் அவளே என் காதலுக்கு விடை ஏதும் சொல்லவில்லையே?” என்று குழம்பினான்.
“ஆனா என்கிட்ட பதிலை சொல்லிட்டாள் அண்ணா, அவளும் உங்களைத் தான் விரும்புகிறாள்” என்றவளிடம், “உண்மையாவா யமுனா?” என்று ஆச்சரியப்பட்டான்.
“ஆமா அண்ணா, உங்ககிட்ட சொல்ல மேடமுக்கு வெட்கமாம். இந்நேரம் அவள் துபாயிலிருந்து ஃபிளைட் ஏறிருப்பாள்” என்றாள்.
“வாட்? ரேஷ் இங்கே வராளா? தாங்க் யூ சோ மச் யமுனா… எனக்கு ஏதோ கனவு மாதிரி இருக்கு” என்று சந்தோஷத்தில் ஆராதனாவைத் தூக்கிக் கொஞ்சியவன், பின் வெளியே சென்றான்.
ஷிரீஜாவிற்கு இந்த விஷயம் இப்பொதைக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்தனர் சுஜித் மற்றும் ரேஷ்மி. ஏனெனில் தெரிந்தால் உடனே கல்யாணம் பண்ண சொல்லி வற்புறுத்துவார். அதனால் யமுனாவும் ஷிரீஜாவிடம் எதுவும் சொல்லாமல் இருந்தாள்.
அடுத்த நாள் காலை ரேஷ்மி அங்கு வந்தடைந்தாள். எப்போதும் சுஜித்திடம் வாயடிக்கும் ரேஷ், காதல் வந்த பின்னர் அவனைப் பார்க்கவே வெட்கப்பட்டாள். “என்ன ரேஷ்மி திடீரென்று வந்திருக்க?” என்று மலையாளத்தில் கேட்ட அத்தையிடம், “சும்மா அத்தை சர்ப்ரைஸ்” என்றாள்.
“சரி நீயும் வந்துட்ட நல்லதா போச்சு, நான் நம்ம டுடே பப்ளிகேஷனை விற்கலாம் என்று இருக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி, யமுனா உட்பட.
“அம்மீ ஏன் இப்படி?” என்று கேட்ட மகனை, “நீ எப்படி இருந்தாலும் லண்டன் விட்டு வரமாட்ட, எனக்கும் வயசு ஏறிட்டே போகுது. இனி என்னால் தனியா சமாளிக்க முடியாதுடா” என்று கூறியவர்,
யமுனாவைப் பார்த்து, “யமுனா நீ கவலைப்படாதே, உன் வேலைக்கு எந்தவிதமான பிரச்சனையும் வராதவாறு தான் புது கம்பெனி ஓனரிடம் பேசுவேன்” என்றார்.
அடுத்த நாள் காலை தனது காட்டன் புடவையை அணிந்து தனக்கே உண்டான கம்பீரத்துடன் ஷிரீஜா ஆபிஸிற்குக் கிளம்பினார். ரேஷ்மி மற்றும் சுஜித் குருவாயூர் கோயிலுக்குச் சென்றிருந்ததால், யமுனா மட்டுமே குழந்தையுடன் வீட்டில் இருந்தாள்.
“அம்மா இன்னிக்கு சனிக்கிழமை தான, எதற்கு அலுவலகம் போறீங்க?” என்று கேட்ட யமுனாவிடம், “இன்று இரண்டு மூன்று பேர் நம் கம்பெனியை வாங்க கொட்டேஷனோடு வந்திருக்கிறார்கள் யமுனா. அதான் செல்கிறேன்” என்று காலையில் யமுனா செய்த இட்லி மற்றும் சட்னியைச் சாப்பிட்டு விட்டு, அங்கே தவழ்ந்து கொண்டிருந்த ஆராதனாவைக் கொஞ்சிவிட்டு சென்றார்.
அன்று மாலை ஐந்து மணியளவில் ஷிரீஜாவின் கார் அவர்களின் வீட்டிற்கு வந்தடைந்தது. ‘மதியம் வருகிறோம் என்று கூறிவிட்டுச் சென்ற சுஜித் மற்றும் ரேஷ்மி இன்னும் வரவில்லை. கால் செய்தாலும், ‘கால் யூ பேக்’ என்று மெசேஜ் வருகிறது. இப்போ ஷிரீஜா அம்மா வந்து அவர்களைக் கேட்டால் என்ன சொல்றது?’ என்று நினைக்கும் போதே ஷீரிஜா வீட்டிற்கு வரும் சத்தம் கேட்டு, ஹாலிற்கு விரைந்து கதவைத் திறந்தாள் யமுனா.
அங்கே ஷிரீஜாவுடன், மெரூன் கோர்ட் சூட் அணிந்து, கம்பீரமாக தாடியோடு நின்று கொண்டிருந்தான் தேவ். யமுனாவின் கணவன் சத்யதேவ்!
அவனை அங்கு எதிர்பாராத யமுனா, அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தாள். ஆனால் தேவ்வின் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியும் இல்லை. ஷிரீஜா தான் பதறியடித்துக் கொண்டு, யமுனாவின் மேல் தண்ணீர் தெளித்து எழுப்பினார்.
ஷிரீஜாவின் மனதில், முதல் முறை யமுனா கருவுற்று இருக்கும்போது மயங்கியதற்கும், இப்போது கதவைத் திறந்த பின் மயங்கியதற்கும் இவருக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமோ என்று நினைத்தார். ஆனால் தேவ்வின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் யமுனா மயங்கியதைக் கண்டுகொள்ளாமல் வீட்டை அளந்து கொண்டிருந்ததால், யமுனா எதேச்சையாக மயங்கிருப்பாள் என்று நினைத்து தண்ணீர் தெளித்து யமுனாவின் கன்னத்தில் தட்டினாள்.
கண்களை மெல்ல திறந்த யமுனா பதறிக்கொண்டு எழுந்தாள். “யமுனா என்ன ஆச்சு உனக்கு, டாக்டர் கிட்ட போலாமா?” என்று கேட்ட ஷிரீஜாவிடம், “இல்லை அம்மா, நேற்று இரவு சரியா தூங்கல அதான்…” என்று அவள் பம்மி பேசினாள்.
“சரி யமுனா, இவருடைய பெயர் சத்யதேவ். இவர் தான் நம்முடைய டுடே கம்பெனியை வாங்கப் போகிறார்” என்று ஷீரிஜா கூறிய பின், பெரிய இடியே தலையில் விழுந்தது போல் உணர்ந்தாள் பெண்ணவள்.
“தேவ் சார், இவங்க தான் நான் சொன்ன யமுனா… இவளுடைய கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். கம்பெனியை நீங்கள் வாங்கினாலும் இவளை மட்டும் அவள் பொறுப்பில் இருக்க வைக்க வேண்டும் சார்” என்று கூறிய ஷிரீஜா,
யமுனாவிடம் திரும்பி, “சார் நம்ம ரெஜிஸ்டரில் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் உன் பெயரைப் பார்த்தவுடன், நான் உன்னுடைய பொறுப்பைப் பற்றிச் சொன்னேன். உடனே பார்க்கவேண்டும் என்று கூறினார் யமுனா” என்று அவர்களை பரிட்சயமாக்க முயற்சித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக