மாயம் 37
அப்படியே நீண்ட நேரம் ஷவரில் அமர்ந்து அழுதவள், “யமுனா… கதவைத் திற, எவ்வளவு நேரமாய் குளிச்சிட்டு இருக்க?” என்ற தேவ்வின் சத்தத்தைக் கேட்டு பதறியவள், மடமடவென ஷவரை ஆஃப் செய்துவிட்டு கண்களைத் துடைத்தாள். அங்கு இருந்த டவலை தலையில் கட்டி, உடையை அணிந்து கதவின் மேல் கையை வைத்தவள், எப்படி தேவ்வை எதிர்கொள்ள போகிறோம் என்று நினைத்து ஒரு பெருமூச்சுவிட்டு கதவைத் திறந்தாள்.
“என்ன பண்ணிட்டு இருந்த யமுனா இவ்வளவு நேரம்? ஏன் உன் முகம் ஒருமாதிரி இருக்கு?” என்று யமுனாவை தேவ் நெருங்கும் போதே, “அது... ப்ளீஸ் தேவ், உங்களிடம் நான் கொஞ்சம் பேசவேண்டும்” என்று தன் வாயைக் கை வைத்து மூடினாள். அப்போதே தேவ்விற்கு கோபம் சுர்ரென்று ஏறியது.
கோபத்தில் தன் நெற்றியில் கை வைத்து தடவியவன், “நேற்று இரவு நீதான என்கூட இருந்த, அப்போ எதுக்கு இப்படி வியர்டா பிஹேவ் பண்ற?” என்று தன் கைகளைக் கட்டி திமிராகக் கேட்டவனின் கேள்வியில் யமுனாவிற்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனெனில் காயப்படுத்தாமல் இருந்தால் அது தேவ் இல்லையே! அவனுக்கு இப்போது எப்படி புரியவைப்பது என்பது தான் யமுனாவிற்கு சவாலாக இருந்தது.
“தேவ் ப்ளீஸ், இப்படி என்னை வார்த்தையால வதைக்காதீங்க” என்று அவள் கூறும் போதே தேவ்விற்கு கால் வந்தது.
“ம்ம் சொல்லு குணா, நாளைக்கு பிளைட்ல வந்திருங்க எல்லாரும்” என்று காலை கட் செய்துவிட்டு திரும்பும் போது, யமுனா பால்கனியில் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே தலையை துவட்டினாள்.
உண்மையாக தேவிற்கு யமுனாவிடம் சண்டைப் போட தோன்றவில்லை. ஏனெனில் தன்னுடைய தொடுகைக்காக யமுனா ஏங்குகிறாள் என்று தெரிந்தபின், அவள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்பதை ஆராயாமல் குளிக்கச் சென்றுவிட்டான்.
இன்று எப்படியாவது தேவ்விடம் பேசிவிட வேண்டும் என்று தீர்மானித்த யமுனா, தேவ் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்த சமயத்தில் தேவ் வெறும் டவலுடன் வெளியே வந்தான். யமுனாவிற்கு தேவ்வின் இச்செயல் கடுப்பாக இருந்தது. இவ்வளவு நாள் தேவ் இப்படி யமுனாவிடம் தோற்றம் அளிக்கவில்லை.
யமுனாவின் முகபாவனையை எளிதாக கண்டுபிடித்த தேவ், “நேற்று இரவு தான் எல்லாத்தையுமே பார்த்துட்டியே? அப்போது எதுக்கு இப்படி முகத்தை சுளித்து சீன் கிரியேட் பண்ற? நான் நல்ல மூடுல இருக்கேன், இந்த மாதிரி ரியாக்ட் பண்ணி கடுப்பேத்தாத” என்று அவள் முன்னாடியே, வேண்டும் என்றே உடையை மாற்றினான்.
இவனிடம் பேசி ஜெயிக்க முடியாது, வீட்டிற்குச் சென்று பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தவள், தேவ் உடை மாற்றி கிளம்பும் வரை மொபைலைப் பார்ப்பதுபோல் திசை மாற்றினாள்.
“என்னை பார்க்கக் கூடாதுன்னு ரொம்ப செல்ஃப் கண்ட்ரோல் பண்ற போல... ம்ம் நாட் பேட். பட் என்கிட்ட தான் நீ விழுந்திட்டியே யமுனா, இதற்குப் பிறகு நீ தப்பிக்க முடியாது…” என்று வசீகரமாகச் சிரித்தவன், “கிளம்பு” என்று சொல்லிவிட்டு கார் கீயை எடுத்தான்.
யமுனாவிற்கு தேவ் கூறியது தன்னை மிகவும் குறைச்சலாய் எடை போட்ட மாதிரி உணர்ந்தாள். ‘அதான் நான் தொட்டவுடன் என்கூட வந்து படு*** என்னைப் பார்த்தால் மறுபடியும் என்னோடு படு*** என்ற பயத்தில் திசை மாத்த செல்ஃப் கன்ட்ரோல் பண்றியா?’ என்பது தான் அவன் கூறியது என்று, யமுனா அந்த நிமிடம் தன்னையே கொன்றுவிடலாமா என்று கூட யோசித்தாள்.
தேவ் யமுனாவிடம் வம்பிழுக்க வேண்டும் என்றே அவ்வாறு பேசினான். அவன் யமுனா தன்னைப் பார்க்க வெட்கப்பட்டு இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று நினைத்தான். நேற்று இரவிலிருந்து தேவ்விற்கு ஒரு விதமான புத்துணர்ச்சி கிடைத்தது.
தனக்கானவள், தனக்கே தனக்காகப் பிறந்தவள், தன்னிடம் ஈருடல் ஓர் உயிராய் சங்கமிக்க முப்பத்தி ஓர் ஆண்டுகள் ஆகிவிட்டதே, இனி ஒவ்வொரு நாளும் யமுனாவைத் தூங்க விடக்கூடாது என்று மனதில் மெலிதாக சிரித்தவன், காரை எடுத்தான். வீடு வரும் வரை, காருக்குள் காதல் பாட்டின் சத்தம் மட்டுமே இருந்தது. வேண்டும் என்றே காதல் பாடல்களைப் போட்ட தேவ்வின் மனது குஷியாகவே இருந்தது.
“யமுனா, நாளைக்கு டெல்லியில் இருந்து, குணா, திவ்யா மற்றும் நிதின் வராங்க. குணாவின் குடும்பம் ஒன் மன்த் இருப்பாங்க. அப்புறம் பிரியா, உன் மாமா, அத்தை அடுத்த வாரம் வராங்க. திவாகருக்கு வேலை இருக்காம், ஒரு தடவை வரேனு சொல்லிருக்கான். இப்போ நீ ஹாப்பி தான?” என்று நேராக பார்த்துக்கொண்டே கேட்டான்.
‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோஜனம்? அதான் என்னை இழந்தாச்சே! இனி அவங்க வந்து என்ன ஆகப் போகுது?’ என்று மனதில் நினைத்தவள், “சரி” என்று மட்டும் தன் ஒப்புதலைத் தெரிவித்தாள்.
வீட்டிற்கு வந்த யமுனா மற்றும் தேவ்வை சந்தோஷத்துடன் வரவேற்றார் சீதாலட்சுமி. அவருக்கு மகன் மற்றும் மருமகள் கணவன் மனைவியாக வந்தனர் என்று, தேவ்வின் புத்துணர்ச்சியான முகத்தைப் பார்த்தே கண்டு விட்டார். யமுனா அறைக்குள் சென்று தன் உடையை மாற்றி விட்டு ஆதிராவைக் காணச் சென்றாள். ஆதிரா இப்போது யமுனாவிடம் கொஞ்சம் நெருக்கமாகத் தான் பழக ஆரம்பித்தாள்.
டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆதிராவிடம் “ஆது குட்டி செல்லம், சாப்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.
“நான் சாப்பிட்டேன் யமுனாம்மா, எனக்கு மொத்தம் எவ்வளவு அம்மா?” என்று விவரம் தெரியாமல் யமுனாவிடம் கேட்டாள். யமுனாவிற்கு ஆதிராவின் கேள்வி விளங்கவில்லை.
“என்ன சொல்ற ஆது குட்டி?” என்று கேட்கும்போதே, “யமுனாம்மா, நான் சொல்றேன். நேற்று மாலை கார்டனில் ஆதிரா விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது பிரியா ஃபோனில் இருந்ததால் நம் வீட்டுக்கு வேலைக்கு வரும் செல்வியை பார்த்துக்கச் சொல்லிவிட்டுச் சென்றேன்.
அப்போது செக்யூரிட்டி பாத்ரூம் சென்றிருந்த சமயம், பிரனிதா உள்ளே வந்து ஆதிரைவைக் கொஞ்சிக் கொண்டு, ‘நான் தான் உன் அம்மா’ என்று ஆதிரா பிறந்தபோது தன் தாய் தந்தையுடன் ஆதிரைவை மடியில் வைத்து எடுத்த ஃபோட்டோவைக் காட்டி, ‘என்னோடு வந்திரு’ என்றிருக்கிறாள். நான் வருவதற்குள் சென்று விட்டாள். பின்பு செல்வி தான் யாரோ வந்து ஆதிராவிடம் இப்படி பேசினார் என்றாள். நான் உடனே சிசிடிவியில் பார்த்தேன் மா, அதில் பிரனிதா தான் இருந்தாள்” என்றார் கவலையாக.
“அய்யோ அத்தை என்ன இது…? உங்கள் மகனிற்கு இதைப் பற்றி சொல்லிட்டீங்களா?” என்று கேட்ட யமுனாவிடம், “சொல்லியாச்சு மா, தேவ் யோசிக்கத் தொடங்கிவிட்டான்” என்று பெருமூச்சுவிட்டு சென்றார்.
***
தேவ் தன் அறைக்குள் வந்து தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். பிரனிதாவை இலகுவாக நினைக்க அவனுக்கு இப்போது தோன்றவில்லை. அவள் ஏதோ முடிவுடன் தான் வந்திருக்கிறாள் என்று நினைத்தவன், தன்னைத் தேடி பிரனிதா வருவாள் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று ஆபிஸிற்குக் கிளம்ப ஆயத்தமானான்.
தேவ்வின் மனதில் ஆதிரா இருந்தாலும், அவன் யமுனாவிற்கு முதல் உரிமை கொடுக்க நினைத்தான். அப்போது தான் கிஷோரிடம் இருந்து கால் வந்தது. “தேவ், வர வெள்ளிக்கிழமை கல்யாணம். கண்டிப்பா குடும்பத்துடன் வந்திடு” என்றான். அந்த சமயத்தில் யமுனா காஃபி எடுத்துக்கொண்டு வந்ததால், இவர்களின் உரையாடலை யூகிக்க முடிந்தது.
“சரி, கல்யாணம் எப்படி? சங்கீத், மெஹந்தி எல்லாம் இருக்கா?” என்று கேட்டான் தேவ்.
“இல்லை, மனிஷாக்காக தமிழ் முறைப்படி தான்” என்று அமைதியாகக் கூறிய கிஷோரிடம்,
“கிஷோர் நீ இவ்வளவு மனிஷாவிற்கு அடங்கி போகணும் என்று அவசியமே இல்லை. அவளும் உங்கள் பூர்வீகம் தான, அப்போ எதுக்கு கல்யாண முறையில் எல்லாம் இறங்கிப் போற? மனிஷா உனக்கு அடங்கவில்லை என்றால் அவளை அடக்கி உட்கார வை” என்று கூறிய தேவ்வை அனல் தெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் யமுனா.
‘ச்சி இவர் கொஞ்சம் கூட மாறவே இல்லை. இவரெல்லாம் எப்போ திருந்துவார் என்றே தெரியலை’ என்று நினைத்த யமுனா அப்படியே நின்றாள்.
“தேவ், எனக்கு மனிஷாவை அடக்கி ஆளவேண்டும் என்று ஆசை இல்லை. எனக்கு அவள் அன்பு வேண்டும், அதற்காக என்ன வேண்டுமானாலும் பண்ணுவேன்” என்று கூறினான் கிஷோர்.
“ம்ம் நான் சொன்னதைக் கேட்டா மனிஷா உன்னைக் கண்டுகொள்வாள், அப்புறம் உன் இஷ்டம்” என்று சிறிது நேரம் பேசிவிட்டு, பின் ஃபோனை அணைத்தான் தேவ்.
யமுனா அங்கு காஃபியோடு நிற்பதைக் கண்டவன், டிரேவில் இருந்து எடுத்துக்கொண்டு, “டயர்டா இருக்கா?” என்று அவளை நெருங்கி நின்றவாறு கேட்டான்.
தேவ் தன் பக்கத்தில் வந்தது, யமுனாவிற்குத் தான் மூச்சடைத்தது. தன் கைகளில் டிரேவை ஏந்திக்கொண்டு நின்றவள் பின்னாடி சென்று, “அ... அதெல்லாம் இல்லை” என்று தடுமாறினாள்.
“ம்ம்… அப்போ நேற்று நடந்தது போதவில்லை போலயே, இன்னிக்கு டயர்ட் ஆயிடுவ” என்று காஃபி கப்பை அவள் கையைப் பிடித்து டிரெயில் வைத்தவன், அவளின் நெற்றியில் முத்தமிட்டு சென்றான்.
தேவ் சென்ற பின், ‘ஐய்யோ கடவுளே! இவர் ஏன் இப்படி லவ் டார்ச்சர் பண்றார்? என்னை காப்பாற்றுங்கள் முருகா!’ என்று நினைத்தபடி காலை சிற்றுண்டி செய்யச் சென்றாள்.
தேவ் சாப்பிட அமர்ந்த சமயம் யாருடனோ ஃபோனில் இருந்தான். யமுனா அவனுக்கு சாப்பாடு வைத்துவிட்டு சீதாலட்சுமியிடம் தேவ்வை பார்க்கச் சொல்லிவிட்டு, ஆதிராவிற்கு சாப்பாடு கொடுக்கச் சென்றாள்.
ஆதிரா ஒருவிதமாத குழப்பத்திலேயே இருந்தாள். “ஆது பாப்பா, என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கீங்க செல்லம்?” என்று அவளை மடியில் தூக்கி வைத்தாள் யமுனா.
“யமுனாம்மா எனக்கு யார் தான் அம்மா?” என்று கேட்ட குழந்தையை அதிர்ச்சியுடன் பார்த்த யமுனா அவளை சமாளிக்க, “நான் தான் ஆதிரா பாப்பாவிற்கு அம்மா” என்று கன்னத்தில் முத்தமிட்டு கூறினாள்.
“ஆதிரா, உன் அம்மா யமுனா இல்லை, பிரனிதா” என்றான் தேவ். இந்த பதிலைக் கேட்ட யமுனா மற்றும் ஆதிரா அதிர்ச்சி அடைந்தனர்.
“இனி ஆதிராவிடம் மறைத்து பிரயோஜனம் இல்லை யமுனா, இந்த உண்மை அவளுக்கு இப்போது தெரிவதே நல்லது. ஏனெனில் பிரனிதா நம்மை நெருங்கி விட்டாள்” என்று பெருமூச்சு விட்டவன்,
“ஆது பாப்பா, நேற்று வந்தாங்களே அவங்க தான் உன் அம்மா, பிரனிதா” என்று அவளைத் தூக்கினான்.
“அப்போ ஏன் அப்பா இந்த அம்மா வீட்டில் இருக்காங்க?” என்று யமுனாவை கைகாட்டி கேட்ட குழந்தையிடம், “ஏன்னா இவங்க என் மனைவி” என்றான்.
தேவ் கூறியதை புரிந்து கொள்ள முடியாத ஆதிரா, “அப்பா புரியவில்லை” என்று கூறும் போதே, “தேவ் ஸ்டாப் இட். சின்ன குழந்தைகிட்ட இதெல்லாம் பேசுறது நல்லா இல்லை” என்றாள் கொஞ்சம் கோபத்தோடு.
கருத்துகள்
கருத்துரையிடுக