மாயம் 35
அந்த ஹோட்டலின் இரண்டாம் தளத்திற்குச் சென்றவனின் பின் பயத்தோடு சென்றவள், தேவ் ஒரு அறையைத் திறந்துகொண்டு உள்ளே சென்ற பின், அந்த அறைக்குள் செல்லாமல் வெளியே நின்றாள்.
“நம்முடைய முதல் சந்திப்பில் பயந்துட்டு வெளியே நின்ன மாதிரி, இப்போதும் பயந்துட்டு நிக்குறியா?” என்று நக்கலாகக் கேட்டவனிடம், “இல்லை உள்ளே வரேன்” என்று நுழைந்தாள். பணக்காரர்கள் தங்கும் பிரிமீயம் அறை போல் தோற்றம் அளித்தது அந்த அறை.
உள்ளே யமுனா வந்ததும், அவளைத் தாண்டி வந்து கதவைச் சாற்றிய தேவ் யமுனாவிடம் திரும்பி, “போய் உட்காரு, நம்ம எப்படியோ இன்று இரவு இங்கே தான் தங்கப் போறோம். அதுக்கு முன்னாடி உன்கிட்ட பேச வேண்டிய விஷயம் இருக்கு, உட்காரு” என்று கூறியவனை பிரம்மை பிடித்தது போல் பார்த்தவள், சோஃபாவில் அமர்ந்தாள்.
அவளுக்கு எதிரே அமர்ந்த தேவ், “யமுனா, நீ ஆதிராவின் மேல் உயிரையே வெச்சிருக்க. பட் நீ ஆதிராவை கவனிக்கிறேன்னு உன்னை கவனிக்காமல் இருக்க. சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். ஆதிரா முக்கியம் தான், ஆனால் அதற்காக உன்னை நீ கவனிக்காமல் இருக்காத, அண்ட் மோர் ஓவர், ஆதிராவை ஒரு நாள் பிரிய நேரிடலாம்” என்று தேவ் கூறும்போது, யமுனாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.
“என்ன சொல்றீங்க தேவ்? எனக்கு புரியவில்லை. ஆதிரா ஏன் என்னை விட்டு பிரியப் போகிறாள்?” என்று பதறினாள் யமுனா.
“யமுனா ரிலாக்ஸ், உன்கிட்ட இந்த விஷயத்தை எடுத்துட்டு வரவேண்டாம் என்று தான் நான் நினைச்சேன். பட் எப்படி இருந்தாலும் உனக்கு இந்த விஷயம் ஒருநாள் தெரிய வரும். நீ வேற ஆதிராவின் மேல் உயிரையே வெச்சிருக்க” என்றவன் இடைவேளி விட்டு, “பிரனிதா நேற்று என் அலுவலகத்திற்கு வந்தாள்” என்று கூறும்போதே, யமுனாவின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
“பிரனிதாவிற்கு ஆதிரா வேண்டுமாம். அவளுக்கு அவளுடைய குழந்தை வேண்டும் என்று என்னிடம் நேற்று கையேந்தி நின்றாள்.”
“நீங்கள் என்ன சொன்னீங்க தேவ்?” என்று யமுனா இம்முறை பயத்துடன் கேள்வியாய்க் கேட்டாள்.
“யமுனா, நேற்று பிரனிதாவிடம் நான் எதுவும் பதில் கூறவில்லை. என் காலைப் பிடித்துக் கூட கெஞ்சினாள். அவளை செக்யூரிட்டியை வைத்து வெளியே அனுப்பி விட்டேன். ஆனால் அவள் மறுபடியும் குழந்தையைக் கேட்டு வருவாள்” என்று தீர்மானமாகக் கூறினான் தேவ்.
“தேவ் என்ன சொல்றீங்க?” என்று கூறும் போதே யமுனாவிற்கு அழுகை வந்து விட்டது. “யமுனா அழாத, எனக்குத் தெரிஞ்ச யமுனா ரொம்ப போல்டான பொண்ணு. இப்படி நீ எமோஷனலா அழுறது உன் கேரக்டருக்கு செட் ஆகலை” என்று தேவ் யமுனாவின் அழுகையை கட்டுப்படுத்த முயற்சித்தான்.
“யமுனா, பிரனிதா என்னைப் பார்த்துவிட்டுச் சென்றபின், அவளின் நிலைமையைப் பற்றி எனக்கும் அவளுக்கும் இருக்கும் காமன் பிரண்ட் மூலம் தெரிஞ்சிக்கிட்டேன். அவளை ஒருவன் ஏமாற்றிவிட்டுச் சென்று விட்டானாம். அவளின் பெற்றோர்கள் கூட அவளை வீட்டிற்குள் சேர்க்க மறுக்கிறார்களாம். அதனால் இப்போது ஏதோ கம்பெனியில் மாத சம்பளத்திற்கு வேலை பார்க்கிறாளாம்.
நான் இரண்டு நாள் முன்னாடி குணாகிட்ட பிசினஸ் கால் பேசும்போதே, பிரனிதா என்னைத் தேடி வீட்டிற்கு வந்தான்னு சொன்னான். அப்போவே அவள் என்னைத் தேடி வருவாள் என்று தெரியும்” என்று சோஃபாவை விட்டு எழுந்தவன், “நான் ஆதிராவிற்கு பயாலாஜிக்கல் ஃபாதர் இல்லை யமுனா. அது உனக்கே தெரியும். அப்படி இருக்கும் போது என்னால் எப்படி ஒரு தாயையும் மகளையும் பிரிக்க முடியும்?” என்று உணர்வற்று கூறும் தேவ்வை, அதிர்ச்சியுடன் பார்த்தாள் யமுனா.
***
தன் இருக்கையில் இருந்து எழுந்த யமுனா, “தேவ் நீங்களே இப்படி சொல்றீங்க, நீங்கள் நினைச்சா இதை கண்ட்ரோல் பண்ணிடலாமே. பிரனிதா எல்லாம் உங்களுக்கு ஒரு விஷயம் இல்லை” என்று தேவ்வின் பதிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள் யமுனா.
“யமுனா நான் இதெல்லாம் யோசிக்காம இருந்திருப்பேனு நீ நினைக்கிறியா? இப்போது பிரனிதா மாறிட்டா, அவள் முன்ன மாதிரி இல்லை. ஆதிராவை நல்லா வளர்ப்பா, அதுவும் இல்லாமல் என்னுடைய கண்கள் எப்போதும் அவள் மீது இருக்கும், அவள் ஆதிராவை எப்படி வளர்க்கிறாள், என்ன செய்கிறாள், எல்லாமே எனக்கு தெரிந்து தான் நடக்கும்” என்றான்.
“தேவ் நீங்கள் ஏன் ஆதிராவை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே பேசுறீங்க? அப்போ இவ்வளவு நாள் ஆதிரா மேல் பாசம் வைத்தது எல்லாம் நடிப்பா?” என்று யமுனா கேட்கும் போதே அவளை அறைந்தான் தேவ்.
“நீ என்ன லூசா யமுனா…? நான் என்ன ஜடமா, என்னால் யார் மேலையும் பாசம் வைக்கவே முடியாதா? உன்னால தான்டி இப்படியொரு முடிவை கஷ்டப்பட்டு எடுத்தேன் டாம் இட்... பிரனிதா நேற்று கிளம்பும்போதே குழந்தையை கொடுக்கவில்லை என்றால் கோர்ட்டுக்கு போவேன் என்று கூறிவிட்டுத் தான் சென்றாள். அவள் கோர்ட்டுக்கு போனாலும், நான் ஆதிராவின் தந்தை இல்லை என்று அவளின் வாயில் வராது. நானும் ஆதிராவின் எதிர்காலம் கருதி உண்மையைச் சொல்ல மாட்டேன்.
அப்போது கோர்ட் எய்தெர் இரண்டு ஆப்ஷன்ஸ் தான் கொடுக்கும், ஒன்னு குழந்தை அம்மாவிடம் இருக்க வேண்டும், இல்லை நானும் பிரனிதாவும் சேர்ந்து வாழ்ந்து குழந்தையை வளர்க்க வேண்டும். எனக்கு ஆதிரா முக்கியம் யமுனா, ஆனால் அதை விட நான் கட்டுன தாலியை சுமந்துட்டு நிக்குற நீ முக்கியம்! உன்னை எப்படிடீ என்னால விட்டுக்கொடுக்க முடியும்?” என்று கூறும்போது தேவ் பால்கனியில் வெறித்துக் கொண்டிருந்தான்.
தேவ்வின் பதில் யமுனாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. தனக்காக தேவ் யோசிக்கிறானா? அப்போது தன்னை விட்டு அவனால் இருக்க முடியாது என்று கூறுகிறானா? என்று யமுனாவால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. அதற்குப் பின், அந்த அறையில் இருக்க பிடிக்காமல் தேவ் வெளியே சென்றான். யமுனாவிற்கு தலைவலியே வந்துவிட்டது போல் ஆனது. அதனால் கொஞ்சம் நேரம் தூங்கலாம் என்று மெத்தையில் படுத்து அப்படியே தூங்கிவிட்டாள்.
தேவ் நேராக அங்கே இருக்கும் பாருக்கு வந்தவன், தன் ஆதங்கம் தீரும் வரை குடித்தான். தன் மேல் யமுனாவிற்கு துளி கூட மரியாதை மற்றும் நம்பிக்கை இல்லை என்றே அவனுக்கு நினைக்கத் தோன்றியது. “ஆதிராவின் மேல் தான் கொண்ட பாசத்தை போலி என்று கூறிவிட்டாளே! இவள் எப்படி என் காதலை புரிந்து கொள்ளப் போகிறாள்? உன்னைக் காதலிக்காமல் இருந்திருக்க வேண்டும் யமுனா. இப்போது என்னால் உன்னைவிட்டு வர முடியவில்லை. என்னை அவ்வளவு பாதிச்சிட்ட” என்று கூறியவன், அதற்கு மேல் குடிக்கவும் பிடிக்காமல் மறுபடியும் அறைக்குச் சென்றவனின் கண்களில், யமுனா உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தவன் குளிக்கச் சென்றான்.
குளித்து விட்டு வந்த தேவ், நீண்ட துயிலில் இருந்த யமுனாவைப் பார்த்தான். இங்கு வந்ததில் இருந்து ஆதிராவின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று யமுனா தன் தூக்கத்தையும் மறந்து, அவளுடன் நேரம் செலவழிப்பாள். ஆதிரா தூங்கும் நேரத்தில் வீட்டில் வேறு வேலை பார்த்துக் கொண்டிருப்பாள். அதனால் இன்றாவது யமுனா நீண்ட நேரம் தூங்கட்டும் என்று நினைத்த தேவ், லாப்டாப்பை எடுத்து தன் அலுவலக வேலையைத் தொடர்ந்தான்.
கிஷோரின் வீட்டில், மனிஷாவை சுற்றி கிஷோரின் உறவுகள் இருந்து கொண்டே இருந்தனர். விக்ரமும் அங்கு இருந்தே தன் அலுவலகத்திற்கு செல்லத் தொடங்கினான். மனிஷா அங்கு வந்ததில் இருந்து கிஷோர் அவளுடைய கண்ணில் படவே இல்லை. மனிஷாவும் நிம்மதியாக இருந்து விட்டாள்.
அன்று மனிஷா மாலை ஆறு மணிக்கு கார்டனில் உலாவிக்கொண்டிருந்தபோது, மலர்களின் அழகைப் பார்த்துக்கொண்டிருந்தவள், முன்னால் ஜாகிங் செய்து கொண்டு வந்திருந்த கிஷோரை கவனிக்கவில்லை. மனிஷா, கிஷோரின் மீது மோதிட, அவனை அங்கு கண்டதில் அதிர்ச்சியாக நின்றாள்.
“ஹாய் மனிஷா, வீடு பிடிச்சிருக்கா? எல்லாரும் உன்கிட்ட நல்லா பேசுறாங்களா?” என்று உண்மையான அக்கறையுடன் கேட்டவனிடம்,
“உங்களைத் தவிர எல்லாரையும் பிடிச்சிருக்கு” என்று முகத்தில் அடித்த மாதிரி கூறினாள்.
“ஹா ஹா பரவாயில்லை, ஆனால் எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சிரித்தான்.
“நீங்கள் சாப்பாட்டில் உப்பே போட்டு சாப்பிட மாட்டீங்க போல” என்று கேலியாக மனிஷா கேட்கும் போதே,
“ஸ்டாப் இட் மனிஷா, நான் உன்னை இப்படியா வளர்த்தேன்? கிஷோர் உன்னுடைய வருங்கால கணவர். அவரிடம் இப்படித் தான் பேசுவியா நீ?” என்று கோபமாகக் கேட்டான் அங்கு வந்த விக்ரம்.
“அண்ணா, இவருக்கு சூடு சுரணை இருந்திருந்தால், நான் வேறு ஒருவரைக் காதலிக்கும் விஷயம் தெரிந்த பின்பும் என்னைத் திருமணம் செய்யச் சம்மதித்திருக்கமாட்டார்” என்று கூறினாள் மனிஷா.
“இன்னும் மூன்று நாட்களில் உனக்கும் கிஷோருக்கும் திருமணம்! இப்போது தான் குல்தீப் அங்கிளிடம் பேசிவிட்டு வருகிறேன். ஏதாவது குளறுபடி பண்ண நினைச்சா, உன் அண்ணனைப் பிணமாகத் தான் பார்ப்ப” என்று தீர்மானமாகக் கூறினான் விக்ரம். இதைக் கேட்ட மனிஷாவிற்கு அழுகை வந்தது, கிஷோரை முறைத்துவிட்டு உள்ளே ஓடினாள்.
“இது எப்போடா, எனக்கே தெரியாமல்?” என்று வியந்தான் கிஷோர்.
“எல்லாம் தேவ் பிளான் தான்டா, அவன் தான் மூன்று நாட்களுக்குள் திருமணம் முடிய வேண்டும், இல்லையென்றால் மனிஷா அடம்பிடிப்பாள்” என்று கூறினான்.
“என்னமா பிளான் போடுறான் இந்த தேவ், அதான் உன் தங்கச்சி தேவ் மேல பைத்தியமா இருக்கா போல. ஹி இஸ் சோ கிளெவர் டா” என்றான் கிஷோர்.
“கிஷோர், தேவ் வந்து சினிமாவில் வரும் கதாநாயகன் மாதிரி, அவனைப் பிடிக்காத ஒரே ஜீவன் அவன் மனைவி யமுனா தான். ஆனால் நீ நான் எல்லாம் காமன் பீபில். சோ மனிஷா கல்யாணம் ஆன பிறகு உன்னைப் புரிஞ்சிப்பாள். கண்டிப்பா கவலைப்படாமல் புது மாப்பிள்ளையா ரெடி ஆகு” என்று கிஷோரை தேற்றினான் விக்ரம்.
யமுனா தூங்கி எழுந்திருக்கும் போது மணி எட்டு. கடிகாரத்தில் மணியைப் பார்த்தவள், “ஐய்யோ! இவ்வளவு நேரம் எப்படி தூங்குனோம்? தேவ் எங்கே?” என்று அவனைத் தேடும் போது தான், அந்த அறைக்குள் இருக்கும் அறையில் இருந்த சோஃபாவில், லாப்டாப்பை வைத்துக் கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
தன் முகத்தை அங்கு இருந்த சாம்பிள் சோப்பால் கழுவிய யமுனா டவலால் துடைத்துவிட்டு, அங்கு இருந்த சாம்பிள் பவுடர் மற்றும் பெர்ஃபூமை பயன்படுத்திவிட்டு, தன் கையில் ஒட்டிய கல் பொட்டை மறுபடியும் நெற்றியில் இட்டு, தேவ் இருந்த அறையை நோக்கிச் சென்றாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக