மாயம் 34
யமுனாவிற்கு மனசு ஆறவில்லை. ‘எப்படி ஒருவரால் அவர்கள் பேசிய சுடு சொல் துன்புறித்தியதை எல்லாம் மறந்து, அவருடன் நிகழ்காலத்தில் வாழ முடியும்? அதுவும் இதுவரை தேவ்வின் வாயில் இருந்து அவன் யமுனாவிற்கு செய்த கொடுமைகளை மனதில் நினைத்து, ஒரு சாரி கூட வராமல் இருக்கும் நிலையில், தேவ்வின் இந்த அணைப்பு மற்றும் அவன் தற்போது கூறிய வார்த்தைகள் யமுனாவிற்கு எரிச்சலாக இருந்தது.
தேவ்வின் அறைக்கு அவள் காஃபி எடுத்துச் சென்ற போது, அவன் ஏதோ ஆங்கில நாவலை படித்துக் கொண்டிருந்தான். அவனிடம் காஃபியைக் கொடுத்துவிட்டு அங்கேயே நின்ற யமுனா, “எனக்கு என் மாமா, அத்தை கூட கொஞ்ச நாள் இருக்க வேண்டும் போல இருக்கு” என்று கூறிவிட்டு தேவ்வின் பதிலுக்காக நின்றாள். யமுனாவிற்கு தேவ்விடம் இருந்து விடுபட வேண்டும். அவளால் இந்த திமிர் பிடித்த, தவறை உணராத தேவ்வுடன் இருக்க பிடிக்கவில்லை.
“இரண்டு வருடம் நீ எங்கே இருக்கனு கூட உன் மாமா, அத்தைக்கு சொல்லவில்லை. இப்போது என் கண்ணில் மாட்டுனதுனால இங்கே இருக்க, இல்லன்னா இப்போதும் தலை மறைவாக தான இருந்திருப்ப?” என்றவனின் கூற்றில் நக்கல் இருந்தது. தேவ்விற்கு யமுனா சற்று முன்னர் பேசிய பேச்சில் அவளை வதைக்க வேண்டும் என்றே இவ்வாறு குத்தினான்.
“நான் என்னமோ ஓடிப்போய் நீங்கள் என்ன கண்டுபிடிச்ச மாதிரி பேசுறீங்க… தாலியை கழட்ட சொன்னது நீங்கள், என்னை அம்போன்னு சென்னையில் விட்டுவிட்டு போனது நீங்கள், அதற்கு பிறகும் இந்த இரண்டு வருஷம் நீங்கள் என்னைத் தேடவில்லை. நம்ம விதி நம்மளை மறுபடியும் பார்க்க வெச்சிடுச்சு” என்று கோபமாகக் கூறிய யமுனாவிடம்,
“உன்னை அடிக்க வெச்சு என்னை மிருகம் ஆக்க முயற்சி பண்ணாத யமுனா... உன் அத்தை, மாமா கூட உன்னை விட முடியாது. அடுத்த வாரம் டெல்லியில் இருக்கும் அனைவரும் இங்கே இருப்பாங்க” என்று கூறியவன் அவளை கூர்ந்து பார்த்தான்.
“இன்னும் எதற்கு நிக்குற? நீ கேட்டதுக்கு பதில் கொடுத்தாச்சு கிளம்பு, இன்னும் இப்படி நின்னுட்டு இருந்தா நான்…” என்று தேவ் எழுந்து யமுனாவின் பக்கத்தில் வந்தவுடனே, யமுனா மடமடவென அறையை விட்டு வெளியே வந்து விட்டாள். ‘ஐய்யோ கடவுளே! இன்னும் இரண்டு நிமிஷம் அறைக்குள் இருந்திருந்தால் என்ன நடந்துருக்குமோ?’ என்று யமுனாவின் இதயம் படபடத்தது.
யமுனா வெளியே சென்ற பின் மெலிதாக புன்னகைத்த தேவ், ‘இன்னும் எவ்வளவு நாள் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்? என்கிட்ட இருந்து உன்னால் தப்ப முடியாது யமுனா. ஆனால் இம்முறை நீ என்னிடம் காதலோடு வரவேண்டும், வர வைப்பேன்’ என்று மனதில் கர்வமாக நினைத்தவன், ஆதிரைவைக் காணச் சென்றான்.
“ஆது குட்டிக்கு நாளைக்கு பள்ளி ஆரம்பிக்க போகுது, சோ நாளையில் இருந்து பாப்பா சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்” என்று ஆதிராவை தன் மடியில் வைத்துக் கொண்ட தேவ் டிவி பார்த்துக்கொண்டிருந்தான். இதை கிச்சனில் இருந்து கவனித்த யமுனா, ‘பட் தேவ் யூ ஆர் கிரேட், உங்களுக்கு பிறக்காத குழந்தையை உங்களுடைய சொந்தக் குழந்தையைப் போல் பார்க்குறீங்க’ என்று மனதில் மெச்சினாள்.
அன்று இரவு யமுனா அறைக்குள் செல்லும் போதே தேவ் தூங்கிவிட்டிருந்தான். ஆதிராவை தூங்க வைத்துவிட்டு யமுனா தூங்க செல்லும் போது, துயிலில் இருந்த தேவ்வின் முகத்தைக் கண்டவள், ‘அழகு நிறைய இருக்கு, பார்த்தா முப்பத்தி ஒரு வயசு ஆள் மாதிரியே இல்லை. அந்த கம்பீரத்துக்கு தகுந்த மாதிரி திமிரும் இருக்கு. அந்த திமிரும் நல்லாத்தான் இருக்கு. ஆனால் பிடிவாதம். தப்பை ஒத்துக்கணும் தேவ், நீங்க ஒரு சாரி மட்டும் கேட்டுட்டீங்கன்னா, உங்கள் தப்பை உணர்ந்துட்டீங்கனா போதும்’ என்று மனதில் நினைத்தவள், பெருமூச்சு விட்டு தூங்கச் சென்றாள்.
அடுத்த நாள் காலை யமுனா ஆறு மணிக்குள் எழுந்து, ஆதிராவை பள்ளிக்குச் சேர்க்கத் தயாரானாள். கண்ணாடியின் முன் தன் கண்களுக்கு மையிட்டுக் கொண்டிருக்கும் போது எழுந்த தேவ், தன்னுடைய கையைத் தலையில் வைத்து சாய்வாக படுத்து யமுனாவை பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் மனதில், ‘யமுனா இது உன் குழந்தை இல்லை. ஆனால் இவ்வளவு பொறுப்பா காலையில் எழுந்து, அவளை உன் உயிராக நேசிக்குற. அதே மனதில் எனக்கும் இடம் கொடுப்பாயா?’ என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தான்.
“இன்னிக்கு இரவு நம்ம இரண்டு பேரும் மட்டும் வெளியே போறோம்” என்று அழுத்திக் கூறியவனைத் திரும்பிப் பார்த்த யமுனாவிற்கு, ‘இவன் எப்போது எழுந்தான்? எவ்வளவு நேரமாக தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறான்?’ என்று தெரியாமல் விழித்தாள்.
“இப்போது எதுக்கு உன் முட்ட கண்ணை வைச்சு இப்படி முழிக்குற?” என்று சாதாரணமாகக் கேட்டவனிடம், “ஆன்… ஒகே” என்று நகர்ந்தாள்.
***
ஆதிரைவை எழுப்பிவிட்டு யமுனா கிளம்பும் போதே, தேவ் கிளம்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஆதிராவிற்கு சாப்பாடு கொடுக்கும் போதே மணி ஆகி விட்டதால், யமுனா சாப்பிடாமலே கிளம்பினாள். இதை தேவ்வும் கவனிக்கவில்லை. சீதாலட்சுமியும் கவனிக்கவில்லை.
யமுனா ஆதிரைக் கிளப்பிவிட்டு, தேவ் சாப்பிட்டு முடித்தவுடன், “நாங்கள் கிளம்பிட்டோம்” என்று தேவ்வின் முன் வந்து நின்றாள். தேவ், யமுனா, ஆதிரா, சீதாலட்சுமியிடம் விடைபெற்று விட்டு பள்ளிக்குச் சென்றனர்.
தேவ்வின் கார் வந்து நிறுத்திய பள்ளியைக் கண்டு யமுனா அதிர்ந்தாள். அது ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் படிக்கும் பள்ளி. ‘ஏன் இங்கு வந்திருக்கிறான்? ஒருவேளை தான் பெற்ற குழந்தை இல்லை என்பதால் இப்படிச் செய்கிறானா?’ என்று மனதில் நினைத்தவள் முன் சொடக்கிட்டு, “இறங்கு” என்றான்.
தேவ், யமுனா மற்றும் ஆதிராவை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றான். “வாங்க மிஸ்டர் சத்யதேவ், ப்ளீஸ் சிட், அண்ட் மிஸஸ் சத்யதேவ் நீங்களும் உட்காருங்க” என்று தலைமை ஆசிரியர் பார்வதி அமரச் சொல்லிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.
“சத்யதேவ், உங்களுக்கு இருக்கும் வசதிக்கு நீங்கள் இங்கே வருவதற்கு ஏதாவது காரணம் இருக்கணுமே?” என்று கேட்டே விட்டார்.
“மேடம், எனக்கு ஆதிராவுடைய பாதுகாப்பு ரொம்ப முக்கியம். ஆதிராவிற்கு சொத்து பணம் அதிகம் இருந்தாலும், இந்த மாதிரி நடுத்தர பள்ளியில் படித்தால் தான் வாழ்க்கை அனுபவம் கிடைக்கும். மத்தவங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு தெரியும். அண்ட் மோர்ஓவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளி இது தான். ஆதிரா நல்லபடியா வளரணும் மேடம், அதான் எனக்கு வேணும்” என்று கூறியவனை திருப்தியாகப் பார்த்தார் தலைமை ஆசிரியர். ‘பொண்ணு மேல எவ்வளவு அக்கறை இருக்கு’ என்று வியந்தாள் யமுனா.
ஆதிராவிடம் ஏபிசிடி மற்றும் குழந்தைகள் பாடலை பாடச் சொல்லி கேட்ட தலைமை ஆசிரியரிடம் பாடி காட்டிய ஆதிரா, “யமுனாம்மா தான் சொல்லிக் கொடுத்தாங்க” என்று மழலையில் கூறினாள். தேவ்விற்கு யமுனாவின் மீது மரியாதை வந்தது. யமுனா ஆதிராவிற்காக மெனக்கெடுவது புரிந்தது.
இரண்டு வாரங்கள் கழித்து பள்ளி தொடங்கும் என்ற நிலையில், ஆதிராவிற்கு புத்தகங்களை வாங்கி விட்டு திரும்பும் போது, யமுனாவிற்கு மயக்கம் வருவது போல் இருந்தது. இன்று காலை சாப்பிடாமல் இருந்ததின் விளைவு அவளுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. ஆனாலும் வீடு வந்துவிடும் என்ற தைரியத்தில் அமைதியாய் காரில் ஏறியவளுக்கு தேவ்வின் வீடு நெருங்கும் போது தலைசுற்றல் சற்று அதிகமாக இருந்தது.
இதை காரின் கண்ணாடியில் கவனித்த தேவ், “யமுனா, என்ன ஆச்சு? ஆர் யூ ஓகே?” என்று கேட்டான். “ஐ அம் ஃபைன்” என்று யமுனா கூறும் போதே காரை நிறுத்திய தேவ், ஆதிராவை அவளிடம் இருந்து வாங்கி வெளியே தோட்டத்தில் நின்று கொண்டிருந்த தன் தாயிடம் கொடுத்து விட்டு, யமுனாவிடம் வந்தான்.
“யமுனா என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி பண்ற?” என்று பதற்றமாகக் கேட்டான்.
“அது அஃக்சுவலி நான் காலையில் சாப்பிடவில்லை. அதான் குமட்டி, ஒரு மாதிரி தலை சுற்றுகிறது” என்று அவள் கூறிய மறு நிமிடமே காரை வேகமாக எடுத்த தேவ், பக்கத்தில் இருக்கும் அந்த நவீன ஃபைவ் ஸ்டார் ஹோட்டலிற்குச் சென்றான்.
இருக்குற தலை சுற்றில் தன்னை எங்கே அழைத்துச் செல்கிறான் என்று கவனிக்காத யமுனா, கார் சீட்டிலேயே சாய்ந்து இருந்தாள். அவளை தூக்கித் தன் கைகளில் ஏந்திய தேவ், அவளை அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்று, அங்கு உள்ளேயே இருந்த ரெஸ்டாரன்டிற்கு யமுனாவை தூக்கியவாறே சென்றான்.
யமுனாவிற்குத் தான் சங்கடமாகிப் போனது. அங்கு இருந்ததே மொத்தம் நான்கு ஐந்து பேர் தான். ஆனாலும் தன்னை இப்படி எடுத்துச் செல்கிறானே என்று அவள் நினைக்கும் போதே, சாப்பாடு மேஜையின் சோஃபாவில் அவளை அமர வைத்து விட்டு, தானும் அவள் எதிரே அமர்ந்து, வைட்டரை கால் செய்து உடனடியாக சாப்பாடு எடுத்துக்கொண்டு வருமாறு பணித்தான்.
‘சாப்பாடு வாங்கிக் கொடுக்கத் தான் இவ்வளவா? அதுக்கு பேசாமல் வீட்டிற்கே போயிருந்தால், சாப்பிட்டு இந்நேரம் தூங்கியிருப்பேனே’ என்று அவள் மனதில் நினைக்கும் போதே சுடச் சுடத் தோசை வந்தது. பசியின் மயக்கம் மடமடவென சாப்பிட்டாள்.
அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த தேவ், “ஏன் யமுனா?” என்று மட்டும் மொட்டையாகக் கேட்டான். “என்ன? நீங்கள் கேட்கிறது புரியவில்லை” என்று விழித்தாள்.
“ஏன் காலையில் சாப்பிடவில்லை?” என்று மெனு கார்ட்டில் கண்களை வைத்துக்கொண்டே கேட்டவன், இப்போது யமுனாவின் கண்களை நோக்கினான்.
“அது காலையில் பள்ளிக்கு நேரமாச்சு அதான்” என்று இழுத்தாள். இப்போது கார்டை ஓரமாகப் போட்ட தேவ், “லுக் யமுனா, நீ இன்னிக்கு மார்னிங் சிக்ஸ்கே எழுந்திருச்சிட்ட, நம்ம கிளம்பும்போது மணி எட்டரை. அது வரைக்கும் என்ன பண்ண?” என்று அமர்த்தலாகக் கேட்டவனை, பரிதவிப்பாகப் பார்த்தவள்,
“எழுந்து குளிச்சிட்டு காலையில் பிரேக் ஃபாஸ்ட் அப்புறம் ஆதிராவிற்குப் பூரி செஞ்சேன். அவள் சாப்பிடவில்லை, அதனால் அவளுக்கு விளையாட்டு காட்டி கொடுத்துவிட்டு, அவளுக்கு டிரஸ் பண்ணிட்டு ஒரு தடவை ஏபிசிடி, ரைம்ஸ் சொல்லச் சொல்லும் போதே மணி ஆச்சு, அதான் சாப்பிட முடியவில்லை” என்று அவனின் கண்களைப் பார்க்க முடியாததால், குனிந்துகொண்டே அமைதியாகக் கூறினாள்.
“யமுனா, உன்னை ஏன் வீட்டிலேயே சாப்பிட வைக்காமல் இங்கே கூட்டிட்டு வந்தேன்னு ஏதாவது ஐடியா இருக்கா?” என்று அமைதியாகக் கேட்ட கணவனை விசித்திரமாகப் பார்த்தாள் யமுனா.
“ஓகே சாப்பிட்டு முடிச்சிட்டல, என் கூட வா” என்று எழுந்து சென்றவனை பின் தொடர்ந்த யமுனாவிற்கு, ஒரே குழப்பம் மற்றும் பீதி இருந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக