மாயம் 33
“யமுனா நீ ஆதிராவைத் தூக்கிட்டு உள்ளே வா” என்று தன் அறைக்குள் சென்றான் தேவ். அவனை பின்னால் இருந்து முறைத்த யமுனா மனதில், ‘மத்தவங்க கதையைப் பார்க்க இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கு. ஆனால் நம்ம கதையைப் பார்த்தா பயமா இருக்கே’ என்று எண்ணியவள் ஆதிராவைத் தூக்கச் சென்றாள். ஆனால் ஆதிரா அவளிடம் வராமல் அழுதாள்.
என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த யமுனா, ஆதிராவிடம் சென்று, “ஆதிரா குட்டி, நீங்க இப்போது அம்மா கிட்ட வந்தா நான் நிறைய கதைகள் சொல்லுவேன். சாக்லேட் தருவேன், வெளியே கூட்டிட்டு போவேன்” என்று கூறியவுடன், “நீங்கள் உண்மையாகத் தான் சொல்றீங்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்ட குழந்தையை, தன் கைகளில் அள்ளிக் கொண்டாள் யமுனா.
“நிஜமாத்தான் சொல்றேன் செல்லம்” என்று கன்னத்தில் முத்தமிட்டவள், இரண்டு வருடம் கழித்து தன் வயிற்றில் பெறாத மகளை ஏந்திய சந்தோஷத்தில், அவளுக்கு ஆனந்தக் கண்ணீரே வந்தது. தேவ்வின் அறைக்குச் செல்கின்றோம் என்ற எண்ணத்தை மறந்தவள், ஆதிரா தன் கைக்குள் வந்த சந்தோஷத்தில் தேவ்வின் அறைக்குள் சென்றாள்.
***
யமுனா ஆதிராவை அழைத்துக் கொண்டு உள்ளே செல்லும்போது, தேவ் அவனுடைய அறையில் லாப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான். யமுனா ஆதிராவுடன் உள்ளே வருவதைக் கண்ட தேவ், மனதில் நிம்மதியுடன் தன் வேலையைத் தொடர்ந்தான். யமுனா ஆதிராவை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு, அவளிடம் சிண்ட்ரெல்லா கதையைச் சொல்லத் தொடங்கினாள்.
தன் வேலையில் கவனமாக இருந்தாலும், தேவ்வின் செவி யமுனா ஆதிராவிடம் கதை கூறிய விதத்தை ரசிக்கத் தவறவில்லை. தன் அழகிய முட்டக் கண்களை விரித்து யமுனா ஆதிராவிடம் கதை கூறிக் கொண்டிருந்த போது, “சிண்ட்ரெல்லா யாரை மாதிரி இருக்கும்?” என்று ஆதிரா தன் போர்வையைப் போர்த்திக் கொண்டு கேட்டாள்.
“யமுனா சத்யதேவ் மாதிரி சிண்ட்ரெல்லா இருக்கும்” என்று தேவ் கூற, யமுனாவிற்கு அவ்வளவு ஆத்திரம், ‘இப்போது எதற்கு தன்னைத் தேவை இல்லாமல் வம்பிழுக்கிறான்?’ என்று நினைத்தவள், “ஆனால் சிண்ட்ரெல்லாவின் பிரின்ஸ் சத்யதேவ் இல்லை” என்று கடுப்பாக அவள் கூறும்போது ஆதிரா தூங்கியே விட்டாள். ஆனால் தேவ்வின் முகம் தான் கடுமையானது.
தன் லாப்டாப்பில் வேலை செய்துகொண்டிருந்த தேவ் டிஸ்ப்ளேவை பார்த்துக் கொண்டே, “குழந்தை கிட்ட என்ன பேசணும்னு பேசிக் சென்ஸ் கூட உனக்கு இல்ல யமுனா. இரண்டு வருஷம் ஆனாலும் உன் மூளை வளரவே இல்லை. கொஞ்சமாவது மெச்சூர்டா நடந்துக்கோ” என்று கூறியவனை வெறித்துப் பார்த்தாள்.
“என்னை சைட் அடிச்சது போதும் போய் தூங்கு” என்றான் தேவ். ‘பேசினாலும் வம்பிழுக்கிறான் பேசாமல் இருந்தாலும் வம்பிழுக்கிறான்’ என்று ஆதிராவின் பக்கத்தில் படுத்த யமுனா, தேவ்விடம் ஏதோ வித்தியாசம் இருப்பதை உணர்ந்தாள்.
‘இரண்டு வருடங்கள் முன்னாடி இருந்த தேவ் துன்புறுத்துவான். ஆனால் தேவை இல்லாமல் பேச மாட்டான். ஆனால் இப்பொழுது இருக்கும் தேவ், தேவை இல்லாமல் தன்னை வம்பிழுத்துக்கொண்டே இருக்கிறான்’ என்று நினைத்தவளுக்கு, தேவ்வுடன் ஒரே அறையில் இருப்பது தூக்கம் வரவில்லை.
தேவ் தன் வேலைகளை முடித்தவன், ஆதிராவின் பக்கத்தில் படுத்துக் கொண்டான். அவன் தூங்கிய பின்னரே கண் அயர்ந்த யமுனா, காலையில் எழும்போதே கீழே சத்தம் கேட்டது.
விக்ரமிற்கும் மனிஷாவிற்கும் பெரிய வாக்குவாதம் போய்க்கொண்டிருந்தது. அங்கே பாவம் போல நின்று கொண்டிருந்த கிஷோரையும் பார்த்த யமுனா, நேரே தன் மாமியாரிடம் சென்றாள்.
“அத்தை, உங்கள் மகன் எங்கே? வெளியே பெரிய கலவரம் நடக்கிறது” என்று கூறியவளிடம், “உன் புருஷன் தான்மா இந்த கலவரத்தையே உண்டு பண்ணான். கிஷோரையும் வரவழைத்து விட்டு, அவசரமாக அலுவல் வேலை என்றுவிட்டு வெளியே சென்றுவிட்டான். நீ குளிச்சிட்டு வாம்மா. சில சமயங்களில் வாக்குவாதம் நடந்தால் தான் பிரச்சனை முடியும்” என்ற மாமியாரை ஒப்புதலாக பார்த்துவிட்டு, வெளியே வரும் போதே கிஷோர் யமுனாவை அழைத்தான்.
“சாரி யமுனா, நீங்கள் தேவ்வின் மனைவி என்று தெரிந்திருந்தால் இப்படி நடந்திருக்காது” என்று தயங்கியவனிடம், “பரவாயில்லை கிஷோர், உங்க பியான்சி மனிஷா என்ன சொல்றாங்க?” என்று மனிஷாவின் பிடிவாதத்தை மனதில் வைத்துக் கொண்டு அவனிடம் கேட்டாள்.
“என்ன யமுனா பண்றது? சின்ன பொண்ணு தானே சரி ஆயிடுவாள்” என்றவனிடம், “சரி நீங்க இங்க…” என்று இழுத்தவளிடம், “அது உங்களுடைய கணவன் தேவ்வின் மாஸ்டர் பிளான் தான். இப்போது விக்ரம், மனிஷாவை எங்கள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு செல்லவிருக்கிறோம்” என்றவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள் யமுனா.
“ஆமாங்க, எங்களுடையது பெரிய குடும்பம். மனிஷா குடும்பம் என்றால் என்னவென்று கூட பார்த்திருக்க மாட்டாள். அதனால் கல்யாணம் வரை என்னுடனே வைத்திருந்தால் என்னை பிடிக்க வாய்ப்பு அதிகம்” என்று கூறியவனிடம், “இந்த பிளான் தேவ்வுடையதாகத் தான் இருக்கும்” என்றாள் யமுனா.
“எப்படி யமுனா கரெக்டா சொல்லிட்டீங்க?” என்று ஆச்சரியப்பட்டவனிடம், “இந்த மாதிரி கிரிமினல் பிளான் எல்லாம் அவர் தானே கொடுப்பார்” என்ற யமுனாவிற்கு கடுப்பாக இருந்தது.
“மனிஷா, உனக்கு இன்னும் அரை மணி நேரம் அவகாசம் கொடுக்கிறேன். நீ இப்போது என்னுடன் கிளம்பி வரவில்லை, அப்புறம் கிஷோரை மணக்க சம்மதிக்கவில்லை என்றால், நான் தூக்கு மாட்டி இறந்து விடுவேன்!” என்று விக்ரம் தீர்மானமாகக் கூறினான்.
“நீங்கள் சொல்வதைப் போல் செய்கிறேன் அண்ணா” என்று அழுத முகத்தோடு கூறியவள், அங்கு நின்று கொண்டிருந்த கிஷோரை முறைத்து விட்டு, தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வந்தாள்.
‘இவளை சமாளிப்பது ரொம்ப கஷ்டம் போல’ என்று நினைத்த கிஷோர் காருக்குள் சென்றான். மனிஷா மற்றும் விக்ரம் சீதாலட்சுமியிடம் விடைபெற்று விட்டு, விக்ரம் யமுனாவிடம் பேசிய பின்னர், ஆதிரா தூங்கிக்கொண்டிருந்ததால் அவளை அப்படியே கொஞ்சிவிட்டுச் சென்றனர் விக்ரம் மற்றும் மனிஷா.
அவர்கள் சென்ற பின் குளித்து விட்டு வந்த யமுனா, தூங்கி எழுந்த ஆதிராவிடம் நேரத்தை செலவழித்தாள். காலை பதினொன்று மணி ஆன சமயத்தில் வீட்டிற்குள் நுழைந்த, தேவ்வைக் கண்ட யமுனா ஸ்தம்பித்துப் போனாள். தன் படர்ந்த தாடியை ட்ரிம் செய்துவிட்டு, பழைய தேவ் போல் வந்தவனைப் பார்த்த யமுனா, ஆதிராவுடன் கலரிங் பண்ணி கொண்டு இருந்தாள்.
“என்னப்பா தேவ், இந்த நேரத்தில் வந்திருக்க?” என்ற தாயிடம், “மனிஷா கிளம்பிட்டாளா அம்மா?” என்று சோஃபாவில் கம்பீரமாக உட்கார்ந்தான். “ஏம்பா கிளப்பி விட்டுட்டு நீயே இப்படி கேட்கிறியே?” என்று சிரித்தவர், அவனின் தோற்ற மாற்றத்தைக் கவனித்து, “இப்போ தான் என் பையன் மாதிரி இருக்க” என்று காஃபியை மகனிடம் கொடுத்தார்.
“மனிஷாவுக்கு எல்லாம் இந்த மாதிரி ட்ரீட்மெண்ட் தான் கரெக்ட்மா, அப்புறம் உங்கள் மருமகள் என்ன பண்ணா காலையில் இருந்து?” என்று ஆதிராவுடன் கலரிங் பண்ணிக்கொண்டு இருந்த யமுனாவை வம்பிழுத்தான்.
“அவளுக்கு ஆதிராவோடு நேரம் சரியா இருக்குப்பா” என்ற அன்னையிடம், “ஆதிராவை பள்ளியில் சேர்க்க வேண்டும். யமுனா, நாளைக்கு காலை அட்மிஷன் போடணும் ரெடியா இரு” என்று கூறிவிட்டுத் தன் காரை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு விரைந்தான்.
காரில் விக்ரம் மற்றும் கிஷோர் பேசிக்கொண்டு வந்திருந்த போது, வெறுப்பில் வெளியே வெறித்துக்கொண்டிருந்த மனிஷாவை கண்ணாடியில் பார்த்தான் கிஷோர். அதைக் கண்டறிந்த மனிஷா, கிஷோரை முறைத்துவிட்டு மறுபடியும் திரும்பிக்கொண்டாள். ‘இவள் ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங்கான கேரக்டரா இருப்பா போல’ என்று மெலிதாக சிரித்துக்கொண்டவன், காரை ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
கிஷோரின் கார் அவனின் பங்களாவில் நின்றது. விக்ரம் மற்றும் மனிஷாவை வரவேற்க, கிஷோரின் வீட்டில் அனைவரும் வெளியே ஆரத்தி தட்டுடன் காத்திருந்தனர். காரில் இருந்து இறங்கிய மனிஷா, ‘இவ்வளவு நபர்கள் குடும்பத்தில் இருக்கிறார்களா?’ என்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் இறங்கினாள்.
***
“மனிஷா, விக்ரம் பேட்டா ஆவோ” என்ற குல்தீப்பிடம், “அப்பா, மனிஷாக்கு தமிழில் பேசுறது தான் கம்பர்ட்” என்ற மகனை, “சரிப்பா நம்ம வாழுறதே தமிழ்நாட்டில் தான, நம்மளை வாழ வெச்ச நாடு” என்று சிரித்தவர், மனைவியை ஆரத்தி எடுக்க சொல்லிவிட்டு உள்ளே கூட்டிச் சென்றார்.
மனிஷா மற்றும் விக்ரம் பூர்வீகம் ஹிந்தியாக இருந்தாலும், தமிழே அவர்களுக்கு பிரதானமாக இருந்தது. கிஷோர் தங்களுக்காக அப்படி பேசியது மனிஷாவிற்கு இதமாக இருந்தது. உள்ளே வந்த பின் அவர்கள் மனிஷாவிற்கு மற்றும் விக்ரமிற்கு என்று ஒதுக்கப்பட்ட அறையை காட்டிவிட்டு, அவர்களுக்கு பருக பழச்சாறு கொடுத்தனர்.
“ஆன்ட்டி ஆன்ட்டி… நீங்கள் தான் கிஷோர் சாச்சாவை ஷாதி பண்ண போறிங்களா?” என்று கேட்ட அந்த குடும்பத்து குழந்தைகளின் கன்னத்தை வருடிய மனிஷாவிற்கு, ஆதிராவின் ஞாபகம் தான் வந்தது.
“பாயல், குஷி, ஆன்ட்டிக்கு ரெஸ்ட் குடுங்க” என்று வந்த கிஷோரின் அம்மா, “மனிஷா பேட்டா, நான் உனக்கு அம்மா மாதிரி நினைச்சிக்கோம்மா. இங்கே இவ்வளவு பேர் இருக்கோம்னு பயந்துராத. உனக்கு இட்லி, தோசை தான் பிடிக்குமாமே, அதனாலே வீட்டில் உனக்கு இட்லி, தோசை தான். வேற என்னலாம் பிடிக்கும்னு சொன்னேனா, நம்ம அதையே பண்ணிடலாம்மா” என்றவரிடம்,
“தாங்க்ஸ் ஆன்ட்டி, எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்” என்று கூறியவளிடம், “தாராளமா பேட்டா” என்று வெளியே சென்றுவிட்டார்.
அன்று இரவு தேவ் வரும்போது யமுனா சமையல் செய்து கொண்டிருந்தாள். ஆதிரா டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். சீதாலட்சுமி பூஜை அறையில் இருந்தார். தேவ் வந்ததை அறியாத யமுனா, இரவு உணவைத் தயார் செய்து கொண்டிருந்தாள்.
“ஆது பாப்பா, யமுனா அம்மா எங்கே?” என்று குழந்தையிடம் மண்டியிட்டு கேட்டவனிடம், “உள்ளே” என்று தன் பிஞ்சு விரலால் கிச்சனைக் காட்டினாள். தன் அறைக்குச் சென்று சின்ன குளியல் போட்ட தேவ், தனது இரவு உடையான பைஜாமாவை அணிந்து கொண்டு, கீழே வரும் போதும் யமுனா கிச்சனில் தான் இருந்தாள்.
‘புருஷன் வந்தது கூட தெரியாமல் அப்படி என்ன சமையல் இவளுக்கு?’ என்று உள்ளே சென்றவனுக்கு யமுனாவின் முதுகே தெரிந்தது. ஆரன்ஜ் வண்ண சல்வார் அணிந்த பெண்ணவளைக் கண்டவன், அவளை பின்னாடி இருந்தே இறுக்கமாக அணைத்து, “நான் வந்தது கூட தெரியாமல் அப்படி என்ன உனக்கு சமையல் மேல் அக்கறை? முதலில் கணவன் மேல் அக்கறை காட்டு” என்று தன்னை அணைத்துக் கொண்டு இருப்பவனின் செயல், அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“இன்னொரு ஆம்பளையை தேடிப் போவேன் என்று என் மேல் குறைந்த அளவு கூட நம்பிக்கை இல்லாமல் இருந்த உங்களுக்கு, இப்போது என்ன திடீரென்று கணவன் என்ற உரிமையில் இப்படி செய்றீங்க? உங்களுக்கு வெக்கமா இல்லையா?” என்று கூறிய யமுனாவின் முடியை கோபத்தில் கையில் கொத்தாக பிடித்தவன்,
“பழசை பேசி என்கிட்ட அடி வாங்கியே செத்துராத யமுனா, இப்போது இருக்குற வாழ்க்கையை அனுபவிச்சு வாழ கத்துக்கோ. அதான் உனக்கு நல்லது” என்று அவளை விடுவித்தவன், “இன்னும் ஐந்து நிமிஷத்துல என் அறையில் காஃபி இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.
கருத்துகள்
கருத்துரையிடுக