மாயம் 32
‘இந்த அத்தை நல்லவங்க தான், ஆனாலும் நமக்கு பிரச்சனை தான், தேவ்வை உசுப்பேத்தி விட்டுட்டாங்க. இவன் சும்மாவே ஆடுவான், இப்போது என்ன சொல்லப் போறானோ?’ என்று மனதில் பதறியவள், தன் தலையைக் குனிந்து கொண்டாள்.
“நீங்க பிரியாவுடைய மாமனார், மாமியார் என்பதனால் தான் மரியாதை கொடுத்துப் பேசிட்டு இருக்கேன். என் பொண்டாட்டிக்கு நீங்க தாய்மாமாவாக இருந்தால் போதும், இந்த மாமா வேலை எல்லாம் என்னிடம் நடக்காது” என்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவன், “இந்த விஷயம் நீங்களா பேசினீர்களா? இல்லை யமுனா இப்படிப் பேசச் சொன்னாளா?” என்று ஆக்ரோஷமாகக் கேட்டான்.
இவன் இப்படித் தான் பேசுவான் என்று யூகித்த யமுனா இம்முறை, “நானே அப்படிப் பேசச் சொல்லி இருந்தாலும் என்ன தப்பு? உங்களுக்கு நான் பிடிக்காதவள் தான?” என்ற யமுனா, மனிஷா அங்கு இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை மறந்து விட்டாள்.
மேலே நின்று கொண்டிருந்த மனிஷாவைப் பார்த்த தேவ், யமுனாவிடம் நெருங்கி அவளுடைய இரு தோள்களையும் பற்றியவன், “நீ என்ன லூசா? மனிஷா கல்யாணத்திற்காக நடிக்க சொன்னா, இப்போ அவள் மேலே இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறாள். இப்படி பைத்தியம் மாதிரி பண்ணிட்டு இருக்க.
இப்போ நீ, எனக்கு என் கணவன் தேவ் தான் முக்கியம் என்று அவங்க கிட்ட நிரூபித்துக் காட்டணும், இல்லன்னா… உன்னை என்ன பண்ணுவேன் என்று எனக்குக் கூட தெரியாது. அவ்வளவு வெறியில் இருக்கேன்” என்று அவளின் காது பக்கத்தில் யாருக்கும் கேட்காதவாறு அழுத்தமாகச் சொன்ன தேவ், அவளின் இரு தோள்பட்டையை பயங்கரமாக இறுக்கினான்.
வலியில் துடித்த யமுனா சத்தமாக கத்த முடியாமல், “நான் எப்படி அதை நிரூபிக்கறது? எனக்கு தெரியவில்லை” என்று அவனுக்கு மட்டும் கேட்பது போல் திணறினாள்.
“இப்போது நீ என்னை கட்டிப்பிடித்து, என் கன்னத்தில் முத்தம் ஒன்று தர வேண்டும். அப்படி நீ இப்போது செய்யவில்லை என்றால், நான் மிருகமாய் மாறிடுவேன்” என்று அவன் கூறி முடிக்கும் போதே, ‘இவனிடம் மல்லு கட்ட முடியாது’ என்று நினைத்த யமுனா, அனைவரும் தங்களை பார்க்கிறார்கள் என்று தெரிந்தே, தேவ்வை இறுக்கமாக அணைத்தாள்.
அந்த அணைப்பு தேவ்வின் மிரட்டலுக்காக அவள் செய்தது என்று தேவ்வை ஏமாற்றலாம். ஏன் அவளைக் கூட ஏமாற்றலாம். ஆனால் உண்மையில் யமுனா தேவ்வை விருப்பப்பட்டு தான் அணைத்தாள். அதன் விளைவு, அவனை அணைத்து கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் ஆகியும் அவள் விலகாமல் அப்படியே இருந்தாள்.
இதைக் கண்ட மனிஷா, முகத்தைத் திருப்பிக் கொண்டுச் சென்றாள். சேகர் மற்றும் விஜயலட்சுமி இதற்குப் பிறகும் இங்கு அந்த விஷயத்தைப் பற்றிப் பேசினால், அது உசிதம் அல்ல என்று கிளம்பினர். தன் மகன் மற்றும் மருமகளை இப்படிப் பார்த்து சந்தோஷம் அடைந்த சீதாலட்சுமி அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி, அந்த இடத்தை விட்டு அகன்றார். இப்போது அந்த ஹாலில் தேவ் மற்றும் யமுனா மட்டுமே இருந்தனர்.
தன் கண்களை மூடி, தேவ்வின் மீது உள்ள மயக்கத்தில் இறுக்கமாக அணைத்திருந்தவளுக்கு, அனைவரும் அந்த இடத்தை விட்டு அகன்றது தெரியாது. ஆனால் தேவ் அனைவரும் சென்றதையும் கவனித்தவன், இன்னும் தன்னை கட்டிக்கொண்டு இருந்த யமுனாவை ஆர்வமாகப் பார்த்தான்.
இரண்டு வருடங்கள் கழித்து, தேவ்வின் மனதில் ஒரு சந்தோஷம் உண்டானது. உடைந்த நம்பிக்கை மறுபடியும் பூத்தது. ஒருவேளை யமுனாவிற்கும் தன் மீது விருப்பம் இருக்கிறதோ? என்று நினைத்தவன், ஆண்களுக்கு உருவாகும் உணர்ச்சிகள் பெருகி, புடவை கட்டி இருந்த யமுனாவின் வெற்று இடையில் தன் கையை வைத்து, அவள் இடையின் ஆழம் பார்த்தான்.
அதுவரை தேவ்வின் மீது மயக்கத்தில் இருந்த யமுனா, ஏதோ எல்லை மீறி போகும் உணர்ச்சி வந்து தன் கண்களைத் திறந்தாள். இப்போது தேவ் தன்னை என்ன செய்கிறான் என்று உணரவே, அவளுக்கு சில நிமிடங்கள் எடுத்தது. அவனின் அத்துமீறல் உணர்ந்த யமுனா பட்டென்று அவனிடம் இருந்து விலக நினைத்தாள். ஆனால் அவளின் எண்ணத்தை அவளின் உடலால் செயல்படுத்த முடியவில்லை. தேவ்வின் ஆண்மையான கட்டுக்கோப்பான உடலின் வலிமை அவளை ஆட்கொண்டது.
எப்படி இவனிடம் இருந்து விடுபடுவது என்று முயன்ற யமுனா திடீரென்று, “ஆதிரா…” எனக் கத்தினாள். அதில் அவளை விட்டு விலகிய தேவ், மகள் எங்கே என்று பார்த்தான். ஆனால் தேவ்விடம் இருந்து தப்பிக்கத் தான் யமுனா அப்படி பொய்யாக கத்தினாள். தேவ் அதை உணர்வதற்குள், யமுனா தன்னுடைய அறைக்கு ஓடிச்சென்று கதவைச் சாற்றி அழ ஆரம்பித்தாள்.
தன்னுடைய மனம் ஏன் தேவ்வின் தொடுகையை நாடியது. எவ்வளவு நேரம் அவனோடு நெருக்கமாக இருந்திருக்கிறாள் என்று தன்னையே நினைத்து அசிங்கப்பட்டவள், இனி தேவ் தன்னிடம் ஏதாவது முயற்சிப்பானோ? என்று அவளுடைய இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.
யமுனா தன்னை ஏமாற்றி தப்பித்தாலும், தேவ்விற்கு மனதில் ஒரு புது நம்பிக்கை உண்டானது. யமுனாவிற்கும் தன் மீது விருப்பம் இருக்கிறது, அது காதல் என்று தேவ் நினைக்கவில்லை. அவளுக்கு தன்னுடைய ஆண்மையான அம்சமான தோற்றத்தில் மயக்கம் இருக்கிறது. அதனால் தான் அவ்வளவு நேரம் தன்னை நெஞ்சோடு அணைத்திருந்தாள் என்று அவன் மனம் உறுதியாய்க் கூறியது.
***
‘இனி தேவ்விடம் நம்ம ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்று நினைத்த யமுனா அன்று இரவு சாப்பிடாமலே தூங்கிவிட்டாள். தன் அறைக்கு வந்த தேவ், குணாவிற்கு கால் செய்து, டெல்லியில் நடக்கும் கம்பெனி விடயங்களைப் பற்றி கேட்ட பின்பு, காலை கட் செய்து சாப்பிடச் சென்றான்.
மனிஷா மற்றும் ஆதிரா டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டு இருந்ததைக் கண்டவன் சீதாலட்சுமியிடம், “யமுனா சாப்பிடவில்லையா?” என்று கேட்டான்.
“இல்லப்பா, யமுனா கதவைத் திறக்க மாட்டிங்கிறாள். தூங்குறானு நினைக்கிறேன்” என்ற அன்னையிடம், “இதெல்லாம் என்கிட்ட சொல்ல மாட்டீங்களா அம்மா” என்று கோபத்தில் தன் கையைக் கழுவிவிட்டு யமுனாவின் அறைக்கு விரைந்தான்.
தேவ்விற்கு, யமுனா அந்த நெருக்கத்தின் பின் ஏதோ செய்து கொண்டாளோ! என்ற பயம் மனதில் தொன்றியதின் விளைவே, “யமுனா… யமுனா… கதவைத் திற…” என்று பலமாக தட்டினான்.
தேவ் ஏன் இப்படி கதவைத் தட்டுகிறான் என்று தூக்கத்தில் இருந்து பதறி எழுந்த யமுனா, கதவைத் திறக்கும் போதே, தேவ் மடமடவென உள்ளே வந்து கதவைச் சாற்றி, யமுனாவை இறுக்கமாக கட்டிப்பிடித்து விட்டு, “உனக்கு ஒன்னும் இல்லைல?” என்று அவளின் தலையை வருடினான்.
தேவ்வின் செயல் யமுனாவிற்குப் புரியவில்லை. “நான் நல்லா தான் இருக்கேன் தேவ், என்ன ஆச்சு?” என்று தேவ்வின் அணைப்பில் இருந்து விலகியவளை முறைத்த தேவ், “ஏன், என்னை கட்டிப்பிடிச்சா எங்க உன் கற்பை என்னிடம் இழந்திடுவனு பயந்து விலகுறியா?” என்று நக்கலாகக் கேட்டான்.
“ஆமாம் இவர் பெரிய மன்மதன். நாங்க அப்படியே இவர் தொடுகைக்காக ஏங்குறோம். தேவை இல்லாமல் கற்பனை பண்ணாதீங்க” என்று குத்தலாகப் பேசிய யமுனாவைப் பார்த்தவன், “ம்ம் இவ்வளவு நாள் அமைதியாய் இருந்த, இப்போது மறுபடியும் பழைய யமுனா வாய் வந்திடுச்சு போல” என்றவன், “இனி நீ என் அறையில் தான் தூங்க வேண்டும்” என்று கூறிவிட்டு, அவளைத் தன்னுடன் இழுத்துக்கொண்டு ஹாலிற்கு வந்தான்.
யமுனாவை டைனிங் டேபிளில் உட்கார வைத்து, “சாப்பிடு” என்று கூறிவிட்டு தான் சாப்பிடத் தொடங்கினான்.
யமுனாவிற்கு எரிச்சல் அதிகமாகவே இருந்தது. எதற்கு தன்னை சாப்பிட அழைத்துக்கொண்டு வந்தான் என்று யோசிக்கும் போது தான், தன் எதிரில் அமர்ந்திருந்த மனிஷாவைக் கண்டாள். ‘ஓ இவளுக்காகத் தான் இந்த ஆக்ட்டிங்கா’ என்று மனதில் நினைத்தவள் சாப்பிட ஆரம்பித்தாள்.
‘ஆனால் ஏன் தேவ் பதறி அடித்துக் கொண்டு தன்னை கட்டிப் பிடித்தான்? அவன் அறையில் தூங்கச் சொல்கிறான்?’ என்று யோசித்தவள், ‘இதுவும் பார்ட் ஆஃப் த டிராமாவா இருக்கும்’ என்று தலைவிதியை நினைத்து வெறுப்பில் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
தேவ், யமுனா திடீரென்று ஏதேனும் விபரீத முடிவு எடுத்துருப்பாளோ? என்று பயந்து அவள் மேல் உள்ள அக்கறையில் கட்டிக் கொண்டவன், இனி தினமும் தன்னோடு இருந்தால் அவள் தன் கண் பார்வையிலேயே இருப்பாள், எந்த பிரச்சனையும் வராது என்று நினைத்து அப்படிக் கூறினான்.
யமுனா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, “ஆதிரா, இனி நீ யமுனா கூட தான் இருக்கணும். அவங்க தான் உன் அம்மா. மனிஷா அக்காக்கு கிஷோர் மாமா கூட டும் டும் டும் நடக்கப்போகுது. அவங்க நம்ம வீட்டு கெஸ்ட் மட்டும் தான்” என்று அழுத்தமாகக் கூறியவனை, அதிர்ச்சியாகப் பார்த்தாள் மனிஷா. இதைக் கேட்ட யமுனாவிற்கு ஏனோ மனது இதமாக இருந்தது.
“தேவ் என்ன சொல்றீங்க? விளையாடாதீங்க” என்று அதிர்ச்சியாகக் கூறியவளை, “நான் சொல்றது உண்மைதான். நம்பிக்கை இல்லன்னா, இதோ உன் அண்ணன் வரானே கேளு” என்று திமிராகக் கூறியவனிடம் பேச முடியாது என்று, தன் அண்ணனிடம் திரும்பியவள், “அண்ணா என்ன இது?” என்று கேட்டாள்.
அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த விக்ரம் சலிப்பாக, “ஆமாம் மனிஷா, தேவ்வுடைய மனைவி வந்த பின்னர் நாம் இங்கே எப்படி இருக்க முடியும்? அதனால் நாளையே கிளம்புறோம், வேற வீடு பார்த்தாச்சு” என்று கூறினான்.
“அண்ணா, கிஷோருக்கும் எனக்கும் கல்யாணம் என்று தேவ் சொல்றாங்க?” என்று அவள் கோபத்தில் எழும் போதே, “ஆமாம், கல்யாணம் தான். நீ மட்டும் கிஷோரை திருமணம் செய்யவில்லை என்றால், உன் அண்ணன் விக்ரம் தூக்கு மாட்டி செத்துருவானாம்” என்று சொன்ன தேவ், மனிஷா பார்க்காத நேரம் பார்த்து விக்ரமிடம் கண் அடித்தான்.
‘அடேய்! என்னைய டெட் பாடி ஆக்கிடுவ போல’ என்று மனதில் நினைத்த விக்ரம் பாவமாக முகத்தை வைத்து, “அதான் என் முடிவை தேவ் சொல்லிட்டானே, அப்புறம் உன் வாழ்க்கை உன் முடிவு” என்று சோர்வாக கூறிய விக்ரம், சாப்பிடாமலே உள்ளே சென்றான்.
யமுனா நடக்கும் விடயத்தை நாடகம் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தவள், ‘தேவ் சரியான கில்லாடி தான், இந்த பொண்ணை எப்படி லாக் பண்ணிட்டான்’ என்று மனதில் மெச்சிய யமுனா, ‘இவனல்லாம் புகழக் கூடாது’ என்று தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். விக்ரம் அப்படி கூறுவான் என்று எதிர்பார்க்காத மனிஷா அழுது கொண்டே உள்ளே சென்றாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக