மாயம் 31
தேவ்வின் அறை எங்கே என்று சீதாலட்சுமியிடம் கேட்டு, யமுனா தேவ்வின் அறைக்கு வந்து முதலில் குளித்து விட்டு, உடையை மாற்றி ஒரு காஃபி குடித்தாள். ஆதிரா மனிஷாவோடு விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவளைக் கண்ட மனிஷா இவளை முறைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
‘இது என்ன வம்பா போச்சு, என் புருஷனை இவள் கல்யாணம் பண்ண நினைச்சு என்னை முறைப்பாளாம், என்ன பெண்ணோ இவள்? முன்னாடி மாயா இப்போது இவளா?” என்று சலிப்பாக நினைத்தவள், ‘நாம் ஏன் தேவ்வின் பின்னால் பெண்கள் சுத்தினால் இவ்வளவு யோசிக்க வேண்டும்? இது நமக்கு தேவை இல்லாத உணர்வு’ என்று மனதை வேறு பக்கம் திருப்பினாள் யமுனா.
***
தேவ் மற்றும் விக்ரம், கிஷோரை சந்திப்பதற்காக அந்த பிரபல நட்சத்திர ஓட்டலில் காத்துக்கொண்டிருந்தனர். “விக்ரம், நீயும் உன் தங்கையும் வீட்டை விட்டு கிளம்புறது தான் நல்லது” என்றான் தீர்மானமாக.
‘நாம் யமுனாவுடன் பேச நினைப்பதற்குள், இவன் அந்தப் பெண்ணை மிரட்டி வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான். இவனிடம் இப்போது என்ன பேச நினைத்தாலும் பயமாக இருக்கிறது’ என்று நினைத்தவன்,
“இல்லை தேவ், இன்னும் ஒரு பத்து பதினைந்து நாள் பொறுத்துக்கோ. மனிஷாவின் மனது மாற வேண்டும். அதுவரை ப்ளிஸ்… எப்படி இருந்தாலும் நீ யமுனாவையே நடிப்பதற்குத் தானே கூட்டிக்கொண்டு வந்தாய். அதை மனிஷா பார்த்தால் தானே வெறுப்பு அடைவாள்” என்று பாயிண்டைப் பிடித்தான் விக்ரம்.
அவனை ஒருமுறை ஆழமாக முறைத்த தேவ், விக்ரம் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து அமைதி ஆனான். கிஷோர் வந்தவுடன் தேவ் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“தேவ், வெரி சாரி. யமுனா உன்னுடைய மனைவி என்று எனக்குத் தெரியாது. ஏன் கல்யாணம் ஆனப் பெண் என்று கூட எனக்குத் தெரியாது. நான் மனிஷாவை கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறேன்” என்று அவன் கூறி முடித்த பின்தான், தேவ்வின் முகத்தில் இருந்த கடுமை குறைந்தது.
“எது பண்ணாலும் சீக்கிரம் பண்ணு. மனிஷாவின் தொல்லை தாங்க முடியவில்லை. என் பொறுமை ரொம்ப நாள் நிலைக்காது கிஷோர், என் பொண்ணுக்கு ஒரு நல்ல கேர் டேக்கராக இருக்கிறாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் என்னைத் திருமணம் செய்யத் தான் இப்படி நடித்தாள் என்று இப்போதல்லவா தெரிகிறது” என்று கடுப்பில் இருக்கையை விட்டு எழுந்தான் தேவ்.
இம்முறை விக்ரமால் தலை நிமிர முடியவில்லை. ஆனால் அத்தகைய சூழ்நிலையிலும் அந்த சந்தர்ப்பத்தை மென்மையாக கையாண்டான் கிஷோர்.
“தேவ், மனிஷா, அப்பா, அம்மா இல்லாமல் வளர்ந்த பெண். அவளுக்கு நல்லது கெட்டது மற்றும் உலகம் என்ன என்பதை அறிய நேரம் எடுக்கும். நான் அவளை பார்த்துக் கொள்கிறேன்” என்றான் கிஷோர்.
***
‘ஆதிரா தன்னோடு எப்படி எல்லாம் பழகினாள். ஆனால் இப்போது அவள் என் பக்கம்கூட திரும்பாமல் இருக்கிறாளே?’ என்று அந்த ஹாலை ஒட்டி அமைந்த சோஃபாவில் அமர்ந்த யமுனாவைக் கவனித்த சீதாலட்சுமி, அவளின் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.
“ஏன் யமுனா பார்க்கவே டல்லா இருக்க, காயம் வலிக்குதாம்மா?” என்று பேச்சுக் கொடுத்தார். தன் கண்களில் தன்னை மீறி வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைக்காமல், “இதெல்லாம் எதற்கு அத்தை?” என்று தேவ் கட்டிய தாலியை எடுத்துக்காட்டினாள்.
“என்னை தான் வேண்டாம் என்று துரத்தி விட்டுட்டாரே, இந்த இரண்டு வருடங்கள் நல்லா தான இருந்துருக்காரு. முன்னை விட திமிரு அவருக்கு அதிகமாகவே கூடியிருக்கு. அப்போ ஏன் மறுபடியும் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துட்டு வந்து, யாரோ ஒரு மனிஷாவின் கல்யாணத்திற்காக மறுபடியும் இந்த தாலியை என் விருப்பம் இல்லாமல் கட்டி… என்னைப் பார்த்தால் அவருக்கு விளையாட்டுப் பொருள் மாதிரி தெரிகிறதா அத்தை?
கேட்க நாதி இல்லை என்ற தைரியத்தில் தானே இப்படி செய்கிறார் உங்கள் மகன்… ஆதிரா என்னைப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்கிறாள். யாருக்கும் என்னை பிடிக்காத பட்சத்தில் நான் ஏன் இங்கே இருக்க வேண்டும்?” என்று அழுதாள் யமுனா.
யமுனாவின் கேள்வியில் உள்ள நியாயத்தை உணர்ந்த சீதாலட்சுமிக்கு பதில் தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. “ஒரு நிமிடம் இரும்மா, வந்துடறேன்” என்று பேச்சை மாற்றியவர், மடமடவென தன் அறைக்குள் சென்று திவ்யாவிற்கு கால் செய்து பேசிவிட்டு, மறுபடியும் யமுனாவிடம் அமர்ந்து, அவளின் மாமா சேகரைப் பற்றிப் பேசினார்.
“ஆதிரா உன்னோடு நெருக்கமாக இருந்த போது வயது இரண்டு, இப்போது நான்கு. அவளுக்கு இப்போது விவரம் தெரிகிறது. அப்போது உன்னுடன் இருந்தது, உன்னை நேசித்தது, அவளுக்கு ஞாபகம் இல்லை. இது இயற்கையான செயல் தான்மா. இப்போது நீ வந்துவிட்டாய் அல்லவா, இனி உன்னிடம் பேசுவாள்” என்றார் சீதாலட்சுமி.
சீதாலட்சுமியின் பதில் அவளை சமாதானம் படுத்தவில்லை. “அத்தை, நான் இங்கு பக்கத்தில் அஷ்டலட்சுமி கோவிலுக்கு சென்று வருகிறேன்” என்று எழுந்தாள்.
“நீ தனியா எங்கும் செல்ல உனக்கு அனுமதி இல்லை யமுனா. நானும் உன்னுடன் கோவிலுக்கு வருகிறேன்” என்று வீட்டில் நுழைந்த தேவ் கூறினான்.
படர்ந்த தாடி, சிகரெட் பிடித்து கறுத்த தேவ்வின் உதடுகள், அவன் குடிப்பதையும் அறிந்து கொண்ட யமுனாவிற்கு, அவன் மீது அருவருப்பு தான் இருந்தது. “அத்தை, நான் உங்களோடு வேண்டுமானால் வருகிறேன்” என்று முகத்தை திருப்பிக் கொண்டவளிடம், “ஓகே உன் இஷ்டம்” என்று மாடிப்படி ஏறி உள்ளே சென்றான்.
‘எப்போதும் நான் ஏதாவது பேசினால், நம்மிடம் முரட்டுத்தனமாக நடக்கும் இவன், இன்று அமைதியாகச் செல்கிறான். ஒருவேளை பலமாக ஏதோ செய்யத் திட்டம் வைத்திருக்கிறானோ?’ என யோசித்தவள், தன் மாமியாருடன் பக்கத்தில் இருக்கும் புகழ் வாய்ந்த பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்ததை மாடியிலிருந்து கண்டான் தேவ்.
‘உன்னை நிறைய காயப்படுத்திருக்கேன், காயப்படுத்துறேன் யமுனா… ஏன் உனக்கு என்னை பிடிக்கவில்லை? நீ கொஞ்ச நேரம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று தான் உன்னை அம்மாவுடன் செல்ல ஒத்துக் கொண்டேன்’ என்று மனதில் நினைத்த தேவ், குளிக்கச் சென்றான்.
இங்கு கிஷோரின் வீடே கோலாகலமாக இருந்தது. தாங்கள் சொன்ன பெண்ணையே அவன் மணம் புரிய ஒப்புக் கொண்டது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கும் போதே, “அத்தை, மாயா என்ன ஆனாள்?” என்று ஒரு ஆர்வத்தில் கேட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.
“அது ஒரு பெரிய கதைம்மா, தேவ்வின் அப்பா தவறிய பின் ஒருநாள் நாங்கள் அனைவரும் காரியம் முடிந்தவுடன் கோவில் சென்று வந்தோம். அப்போது தேவ் சீக்கிரமே வீடு திரும்பினான். அன்று மாயாவிற்கு கோவிலுக்கு வர முடியாத சூழ்நிலை. அப்போது நாங்கள் வீடு திரும்பும் போதே வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடந்தது. அங்கே மாயா நெற்றியில் இரத்த காயத்தோடு அழுது கொண்டிருந்தாள்.
என்ன ஏது என்று பதறினோம். அப்போது அங்கு வந்த தேவ், மாயா தன்னிடம் உடலுறவுக்கு அழைத்ததாக கூறி, இவனிடம் அடி வாங்கி அப்படி இருக்கிறாள் என்று கூறியவன், கையோடு அவளை இழுத்துக்கொண்டு பனிமலரிடம் சென்று, ‘பெண்ணைப் பெற்றால் மட்டும் போதாது அத்தை, அவளை நன்றாக வளர்க்க வேண்டும். உங்கள் பெண்ணை ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வையுங்கள்’ என்று கூறி மாயாவின் குடும்பத்தை அன்றே பெங்களூரிற்கு அனுப்பினான்மா. நாங்களும் அதன் பின் குணாவிடம் பொறுப்பை ஒப்படைத்து லண்டன் போயிட்டோம்” என்று முடித்தார் சீதாலட்சுமி.
‘இவன் என்ன பெரிய மன்மதனா? இப்படி பொண்ணுங்க இவனை அடைய நினைக்குறாங்க. ஆனால் மாயாவாவது சுமாரா இருந்தாள். ஆனால் இந்த மனிஷா நல்லா பார்க்கவே கொலு பொம்மை மாதிரி இருக்கா. இவளிடம் நம்ம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்’ என்று யமுனா நினைத்தபோதே கோவிலை அடைந்தனர். பின் அம்மனை சேவித்து, சிறிது நேரம் கடல் காற்றின் சுகத்தை அனுபவித்து விட்டு வீட்டுக்குச் சென்றனர்.
***
மனிஷாவிற்கு மனதிற்குள் வெறுமையாக இருந்தது. ‘யமுனாவின் கதையே முடிந்து விட்டது என்று நினைத்தால், திடீரென மனைவி என்று வந்து தாலியுடன் நிற்கிறாள். இதற்கு பின்னும் நாம் தேவ்வை மணக்க நினைப்பது தவறு தானே, ஒரே குழப்பமாக இருக்கிறதே’ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போது, கீழே இரண்டு மூன்று பேர் பேசும் சத்தம் கேட்டது.
அங்கு கீழே சேகர் மற்றும் விஜயலட்சுமி, யமுனாவைக் காண வந்தனர். எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாய் இருந்த தங்கை மகளைக் கண்டு கவலையாக இருந்தார் சேகர்.
“என்னை மன்னிச்சிரு யமுனா, உன்னுடைய நிலைமைக்கு காரணம் நாங்கள் தான்… இப்போது நாங்கள் திருந்திவிட்டோம். உனக்கு முறைப்படி வேற கல்யாணம் பண்ணி வைக்கிறோம்மா” என்று தயங்கி தயங்கிக் கேட்டார். யமுனா எதற்குமே அசைவில்லாமல் உட்கார்ந்திருந்தாள்.
“உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லுமா, முன்னாடி எல்லாம் மாமா கிட்ட எப்படியெல்லாம் கலகலவென்று பேசுவ, இப்போது ஏன்மா அமைதியா இருக்க. உன்னை இப்படி பார்க்க மனது கஷ்டமாக இருக்கிறதுமா” என்று துடித்தார் சேகர்.
உண்மையாகவே யமுனாவிற்கு மனது விட்டுப் போனது. ‘இவர்களிடம் என்ன சொல்வது? கல்யாணம் என்பது விளையாட்டு காரியமா? எப்படி சுலபமா இன்னொரு கல்யாணம் என்று சொல்றாங்க? இவர்களுக்குத் தைரியம் இருந்தால் இதை தேவ் இருக்கும் பொழுது கேட்க வேண்டும்.
ஏற்கனவே அவன் மனதில் என்னை இன்னொரு ஆம்பளைக்கு அலைவதாய் நினைத்துக் கொண்டு இருக்கிறான். இதில் இவர்கள் வேற’ என்று யமுனா சலிப்படைந்த போது, தேவ் குளித்து விட்டு தன் இரவு உடையை அணிந்து கொண்டு வந்தான். இங்கு நடப்பவை அனைத்துமே மேலே நின்று மனிஷா கவனித்துக் கொண்டு இருந்தாள்.
தேவ் வந்தபின் தானாக எழுந்து நின்றனர் சேகர் தம்பதிகள். எப்படி இருந்தாலும் அவர்கள் வயதில் பெரியவர்கள் மற்றும் பிரியாவின் மாமனார், மாமியார். அதனால் ஒரு புன்னகையோடு வரவேற்று, அவர்களை அமரச் சொல்லிவிட்டு, யமுனாவின் பக்கத்தில் கம்பீரமாய் உட்கார்ந்தான் தேவ்.
எப்படி என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்தவர்கள், பேசித் தான் ஆக வேண்டும் என்ற முடிவோடு, “தம்பி, அது வந்து… உங்களுக்கும் யமுனாவுக்கும் ஒத்து வரவில்லை. நீங்கள் பெரிய பணக்காரர், உங்களுக்கு பெண் குடுக்க ஆயிரம் பேர் வருவார்கள். ஆனால் எங்கள் பெண் யமுனாவிற்கு வாழ்க்கை துணை வேண்டும் அல்லவா? இப்படி அழகும் இளமையும் இருக்கும் போது தான் அவளுக்கு மாப்பிள்ளை கொடுப்பார்கள். அதனால் அவளை எங்களோடு அழைத்துச் செல்ல வந்தோம்” என்று விஜயலட்சுமி முடிக்கும் போது, யமுனாவின் முகம் கலக்கத்தில் இருந்தது. தேவ்வின் முகம் கொழுந்து விட்டு எரிந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக