மாயம் 30
அந்த சின்னப் பெண்ணைப் பார்த்த உடனே, அவள் ஆதிரா என்று கண்டு கொண்ட யமுனா, “ஆதிரா…” என்று சந்தோஷத்துடன் கத்தினாள்.
‘ஓ இவள் தான் யமுனாவா?’ என்று ஆதிராவை தன் கையில் பிடித்து நடந்து வந்த மனிஷாவைப் பார்த்த யமுனா, ‘யார் இந்தப் பெண்? ஆதிராவை உரிமையோடு கை பிடித்து நடந்து வருகிறாளே, ஒருவேளை தேவ்வின் மனைவியா?’ என்று மனதில் ஆயிரம் குழப்பம் மற்றும் கேள்விகளுடன் பார்த்தாள்.
“ஆதிரா உன்னுடைய யமுனாம்மா வந்துட்டாங்க பாரும்மா” என்று சீதாலட்சுமி ஆதிராவைத் தன்னோடு அமர வைத்தாள்.
மிகவும் ஆவலாக ஆதிராவின் கன்னத்தைக் கொஞ்சியவளிடம், “யார் நீங்க? டோன்ட் டச் மீ. மனிஷா ஆன்ட்டி யார் இவங்க?” என்று மனிஷாவிடம் கேட்ட ஆதிராவை, அதிர்ச்சியுடன் பார்த்தாள் யமுனா.
ஆதிராவிடம் இதை எதிர்பார்க்காத யமுனா, அதிர்ச்சியில் உறைந்து இருந்தாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மனிஷாவிற்கு வெற்றிப் புன்னகை வந்தது. அதை கவனித்த யமுனாவிற்கு மனதில் ஒரு பதற்றம். ‘ஒருவேளை இவள் தேவ்வின் தாரம் தானோ? அதான் ஆதிரா என்னை மறந்ததில் சந்தோஷப்படுகிறாள்’ என்று நினைக்கும் போதே, யமுனாவின் இருதயம் நிற்பது போல் இருந்தது.
படபடத்த மனதைக் கட்டுப்படுத்த முடியாத யமுனா, “இவங்க யாரு அத்தை?” என்று நேரடியாகவே கேட்டுவிட்டாள். சீதாலட்சுமி வாயில் இருந்து என்ன வரும் என்பதை ஒரு பயத்தோடு எதிர்பார்த்து கொண்டிருந்த யமுனாவிற்கு, “இந்த பொண்ணு தேவ்வின் நண்பன் விக்ரமுடைய தங்கை. ஆதிராவிற்கு இரண்டு வருஷம் இவள் தான் கேர் டேக்கர். மிகவும் துறுதுறுப்பானப் பெண்” என்று அவர் முடிக்கும் பொழுது தான் யமுனாவிற்கு மூச்சே வந்தது.
யமுனாவை நேரில் கண்ட மனிஷாவிற்கு ஒரு இனம் புரியாத கோபம். யமுனாவிடம் தேவ்வைப் பற்றிப் பேச வேண்டுமென காத்துக்கொண்டிருந்தவள், வேண்டும் என்றே, “ஆதிரா மேல் பாசம் சுத்தமா உங்களுக்கு இல்லை போல, அதான் அம்போனு விட்டுட்டு போய்ட்டீங்க” என்று சீண்டினாள்.
“மனிஷா ஸ்டே இன் யுவர் லிமிட்ஸ், யமுனா என்னுடைய மனைவி. ஆதிராவுடைய அம்மா. எங்களுடைய குடும்ப விஷயத்தில் நீ தலையிடக் கூடாது” என்று மனிஷாவின் முன் வந்து, அவளை அதட்டிய தேவ், “வெளியே போ” என்று அவளை அறையை விட்டு வெளியே அனுப்பினான்.
இதைப் பார்த்த யமுனா, மனிஷாவிடம் தேவ் பேசியதை நினைத்து ஆறுதல் அடைந்தாள். அசிங்கப்பட்ட மனிஷா வெளியே சென்றாள்.
***
அத்தியாயம் 26
“அம்மா, நான் யமுனாவிடம் பேசவேண்டும். நீங்கள் கொஞ்சம் வெளியே இருங்கள்” என்று கூறிவிட்டு யமுனா அமர்ந்திருந்த கட்டிலில் அமர்ந்தான்.
“தேவ், யமுனா பாவம்ப்பா. அவளை எதுவும் காயப்படுத்தாதேப்பா. அவளின் கைக்கு மருந்து வேற போடணும்ப்பா” என்று தயங்கினார்.
“அம்மா, நான் அவளை ஒன்னும் செஞ்சிட மாட்டேன். அவளுக்கு மருத்துவமனை போய் மருந்து போட்டு தான் கூட்டிட்டு வந்தேன்” என்று அமர்த்தலான கோபத்துடன் கூறி, தன் தாயை வெளியே அனுப்பி கதவைச் சாற்றினான்.
‘ஐய்யயோ! இவனுடன் இருந்தாலே பயமா இருக்கு. இதில் தனியா இருந்தால் நெஞ்சே படபடப்பாக இருக்கே’ என்று யமுனா மனதில் நினைக்கும் போதே, அவளின் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்த தேவ், “மாத்திரை எல்லாம் மறக்காம சாப்பிடு. எல்லாமே ஆன்டிபையோடிக் மாத்திரைகள்” என்றான்.
மேலும், “இப்போ போன மனிஷா என்னுடைய நண்பன் விக்ரமுடைய தங்கை. இவள் தான் ஆதிராவை இரண்டு வருஷம் கேர் டேக்கராக பார்த்துக்கொண்டாள். மனிஷா சின்ன வயதில் இருந்தே அம்மா, அப்பா இல்லாமல் வளர்ந்த பெண். அவளுக்கு எல்லாமே விக்ரம் தான். அவள் கேட்டு விக்ரம் மறுத்தது என்று எதுவும் இல்லை. அவள் கேட்டதை எல்லாமே வாங்கி கொடுத்த விக்ரமிற்கு, ஒன்று மட்டும் முடியவில்லை” என்று புதிராக முடித்தவன், யமுனாவை கூர்மையாகப் பார்த்தான்.
‘இவன் எதுக்கு இந்த கதையை எல்லாம் நம்ம கிட்ட சொல்றான்? விஷயம் இல்லாமல் பேசுற பழக்கமே இவனுக்கு இல்லையே. நம்ம கூட தான் அம்மா, அப்பா இல்லாமல் வளர்ந்தோம். ஒரு நாள் கூட எனக்காக இவன் பேசியது இல்லை. இன்னிக்கு இந்த மனிஷாக்காக இவ்வளவு பேசுறானே’ என்று யமுனா யோசிக்கும் போதே, அவள் முன் சொடக்கிட்டான் தேவ்.
“நான் இங்க பேசிட்டு இருக்கும் போது உனக்கு என்ன அப்படி ஒரு சிந்தனை?” என்று அமர்த்தலான கோபத்தில் கேட்டான்.
“அது இல்லை, உங்களுடைய நண்பன் விக்ரமினால் அப்படி என்ன வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன்” என்று சமாளித்தாள்.
“சத்யதேவ்…!” என்றான் தேவ்.
‘இவன் என்ன சொல்றான்?’ என்று மலங்க மலங்க விழித்தாள் யமுனா.
“மனிஷா என்னை இரண்டு வருடங்களாக விரும்புகிறாள். இந்த விஷயம் விக்ரம் சொல்லி தான் எனக்குத் தெரியும். அப்பா தவறிய பின், நான் இரு வருடங்களாக லண்டனில் இருந்தேன். அந்த இரு வருடங்களும் மனிஷா தான் ஆதிராவை ஒரு அம்மாவை போல் கவனித்துக் கொண்டாள்” என்று அழுத்தமாகக் கூறியவன், மேலும் தொடர்ந்தான்.
“மனிஷா என்னிடம் எப்போதும் அளவாகவே வந்து பேசுவாள், சின்னப்பெண் ஏதோ விளையாட்டுத்தனமாக இருக்கிறாள் என்று நினைத்தேன்” என்று இடத்தை விட்டு எழுந்தவன், ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
“ஆனால் அவள் என்னை தீவிரமாக காதலிக்கிறாள். கிஷோர், நான் மற்றும் விக்ரம் நல்ல நண்பர்கள். கிஷோரின் தந்தை கிஷோருக்கே தெரியாமல் லண்டனில் இருக்கும் விக்ரமிற்கு கால் செய்து, கிஷோருக்கு மனிஷாவைப் பெண் கேட்டார். கையோடு இங்கு தங்கையை அழைத்து வந்த விக்ரமிற்கு, கிஷோர் உன் மீது இருந்த காதல் என்றது முதல் ஏமாற்றம். அடுத்து மனிஷா என்னிடமே அவள் காதலை சொல்லி திருமணம் செய்யக் கேட்டாள்.
நீ என் வாழ்க்கையில் இல்லை என்பது அவளுடைய ஆணித்தனமான கருத்து. அதை வைத்தே என்னை மணந்துக் கொள்ள கேட்கிறாள். இல்லையேல் தற்கொலை செய்வேன் என்று அவள் அண்ணனை மிரட்டுகிறாள்” என்று சொல்லி முடித்தவன், யமுனாவின் முக பாவனையைக் கவனித்தான்.
அதிர்ச்சியில் எந்த ஒரு உணர்ச்சியும் கொடுக்காத யமுனா, தேவ் தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, “இப்பொ இதெல்லாம் எனக்கு ஏன் சொல்றீங்க?” என்று கேட்டாள்.
அவள் சொன்னதைக் கேட்ட தேவிற்கு வந்த கோபத்தில், சிகரெட்டை ஒரு பார்வை பார்த்து, மறுபடியும் யமுனாவைப் பார்த்தவன், “என்ன வாங்குன காயம் பத்தலையோ?” என்று நக்கலாகக் கேட்டான்.
‘ஆனாலும் யமுனா, உனக்கு சனி வாயில் தான் இருக்கு. அவனோடு மல்லு கட்ட உன்னால் முடியாது’ என்று யோசித்தவள். “ம்ம் சொல்லுங்க” என்று இழுத்தாள்.
“எனக்கு இப்போ ரீசண்டா வந்த நியூஸ் என்னனா, கிஷோரும் மனிஷாவை மணக்க சம்மதிச்சிட்டான். சோ பிரச்சனை இப்போ மனிஷா தான்… மனிஷா உன்னிடம் பேச வேண்டுமாம், இனியும் நம்முடைய கணவன், மனைவி வாழ்க்கை தொடருமா?” என்று கேள்வியாய் யமுனாவைப் பார்த்தான்.
‘நாம் எப்போது கணவன் மனைவியாய் வாழ்ந்தோம்?’ என்று கேட்கத் துடித்த நாவை கட்டுப்படுத்தியவள், “இப்போது என்ன சொல்ல வர்றீங்க என்று எனக்கு புரியவில்லை” என்று விழித்தாள்.
“நீ கொஞ்ச நாட்கள் என்னோடு மனைவியாய் நடிக்க வேண்டும். குறைந்தபட்சம் மனிஷா, கிஷோரை கல்யாணம் செய்யும் வரை” என்று தீர்மானமாக முடித்தான்.
இம்முறை கோபத்தில் தன் நாவை அடக்க மறந்த யமுனா, “என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது தேவ்? அதான் என்னை வேண்டாம் என்று தானே இரண்டு வருடங்கள் முன்னாடி இதே ஊரில் விட்டுட்டு போனீங்க… இப்போது அந்த மனிஷா பெண் உங்களை விரும்புகிறாள் என்றால், அது உங்கள் பிரச்சனை.
உங்களுக்குத் தான் மற்றவர் விருப்பம் இல்லாமல் மிரட்டி பணிய வைப்பது கை வந்த கலை ஆச்சே, ஏதாவது ஒரு பெண்ணை அப்படி பணிய வைத்து, உங்களுக்கு மனைவி ஆக்க வேண்டியது தான” என்று சொல்லி முடிக்கும் போதே, அவளின் வாயை அழுத்தமாக மூடினான் தேவ்.
“இன்னும் ஒரு வார்த்தை இந்த மாதிரி பேசுனா… உன்னை கொன்னுடுவேன். நான் யாரை எப்போது கல்யாணம் பண்ணணும் என்று எனக்குத் தெரியும். அதைப் பற்றி நீ பேசாதே, என்னால் யாரையும் எனக்கு பணிய வைக்க முடியும். ஆனால் இப்போது நீ தான் எனக்கு பணிய வேண்டும். நான் கட்டிய தாலி உன் கழுத்தில் இப்போது இல்லை என்று தானே ஆட்டம் போடுகிறாய்” என்று தன் பாக்கெட்டில் இருந்து ஒரு மங்கள நாண் எடுத்து, இம்முறையும் யமுனாவின் விருப்பம் இல்லாமல் தாலி கட்டினான்.
“இனி நீ என்னை மீறி எதுவும் பண்ணக் கூடாது. மனிஷா உன்னிடம் பேசுவாள், அப்போது நாம் இருவரும் சேர்ந்துவிட்டோம், கணவன் மனைவியாய் வாழ்கிறோம் என்று மட்டும் சொல்லு. அதை மீறி அவளிடம் எந்த கதையும் அளக்காதே. இனி ஆதிரா உன் பொறுப்பு. அவளிடமிருந்து முதலில் ஆதிராவைப் பிரிக்க வேண்டும்... உன் திங்க்ஸ் எல்லாம் என் ரூமில் இருக்கிறது. இனி உன் வாழ்க்கை என்னோடு தான்…” என்று இடைவெளி விட்டு, “மனிஷா கிஷோர் கல்யாணம் முடியும் வரை” என்று அழுத்தமாகக் கூறிவிட்டுச் சென்றான்.
அவன் கூறிவிட்டுச் சென்ற பின் பிரம்மை பிடித்தது போல் ஆனாள் யமுனா. ‘வந்தான் எப்போயும் போல் திமிராகப் பேசினான். தாலியைக் கட்டினான். கண் இமைக்கும் நொடியில் மனிஷா கல்யாணம் வரை என்னோடு தான் வாழ்க்கைன்னு பொடி போட்டு பேசிட்டு போறான்.
என்னைப் பார்த்தால் அவனுக்கு ரொம்ப எளக்காரமாக இருக்கிறது. அவனுக்கு நான் வேண்டும் என்றால் அவனின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான், வேண்டாம் என்றால் குப்பை போல் தூக்கி போட்டுருவான்’ என்று தன் தாலியைக் கையில் எடுத்துப் பார்த்தவள், “இதை இரண்டு வருடங்கள் முன்னர் கழட்ட சொன்னவனே, இப்போது கட்டிட்டு போறான். இவனுடைய கர்வம், திமிரு, மனைவி இல்லன்னா கூட அடங்க மாட்டேங்குது ச்ச” என்று அந்த கட்டிலில் சோர்வாக அமர்ந்தாள்.
விஷயம் சேகருக்கும், டெல்லியில் இருப்போருக்கும் சீதாலட்சுமியால் எட்டிவிட்டது. அனைவருக்கும் யமுனா கிடைத்தது பெரிய சந்தோஷம் என்றால், சேகருக்கு மட்டும், தேவ்வின் பிடியில் யமுனா மறுபடியும் சிக்கி விட்டாள் என்று மனது படபடப்பாக இருந்தது. திவாகருக்கும் இதே எண்ணம் தான் இருந்தது. தன் தந்தையிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என முடிவு எடுத்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக