மாயம் 29
நேராக விக்ரமிடம் திரும்பியவன், “உன் தங்கையை இந்த இடத்தை விட்டு கிளம்ப சொல்லு விக்ரம், இல்லை என்றால்… நான் மனிதனாக இருக்க மாட்டேன்” என்றான் ஆக்ரோஷமாக.
மனிஷாவை இழுத்துக்கொண்டு விக்ரம், தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் சென்று அறிவுரை கூற ஆரம்பித்தான். “மனிஷா, அண்ணா சொல்வதைக் கேளு. யமுனா தேவ்வின் வாழ்க்கையில் இருப்பது தான் நியாயம். உனக்கு நான் ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்க்கிறேன். இல்லை நீ கூட வேறு ஒரு பையனைப் பிடித்திருந்தால் சொல்லு. ஆனால் தேவ்வின் மீது உள்ள உன் காதலுக்கு உயிர் இல்லை” என்றான் விக்ரம்.
“நீ என்ன சொன்னாலும் என் மனது மாறாது அண்ணா, எனக்கு தேவ்வின் மீது உள்ள காதல் மாறாது! அதான் தேவ்விற்கும் யமுனாவிற்கும் ஒத்து வரவில்லை என்று தானே பிரிந்திருப்பார்கள். ஆதிரைவை விட்டு அந்தப் பெண்ணால் செல்ல முடிந்தது என்றால், அவளால் திரும்ப வரவே முடியாது அண்ணா... நான் யமுனாவிடம் பேச வேண்டும். அந்தப் பெண்ணைப் பார்த்து பேச வேண்டும். அதற்கு நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும், இல்லை என்றால் நான் தற்கொலை செய்து விடுவேன்” என்று மிரட்டினாள்.
தன் தங்கையை எப்படி கட்டுப்படுத்துவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்த விக்ரம், மனிஷா மிரட்டிய பின் இவளை யமுனாவிடம் பேச வைப்பது தான் கடைசி வழி என்று, “சரி” என தங்கையிடம் ஒப்புக்கொண்டு, தேவ்வைப் பார்க்க மறுபடியும் மாடிக்கு விரைந்தான்.
அங்கு சிகரெட்டை பிடித்துக் கொண்டிருந்த தேவ்வினைக் கண்டவன், “என்னை மன்னிச்சிரு தேவ், என்னால் உனக்கு நிறைய பிரச்சனைகள். ஆனால் ஒன்று, கிஷோர் ரொம்ப வருத்தப்பட்டான். நீ சென்ற பின் இனி யமுனாவின் பக்கம் செல்ல மாட்டேன் என்று அவன் வீட்டிற்கு சென்று விட்டான்.
அம் சாரி தேவ், மனிஷா உன் மேல் ரொம்ப பைத்தியமாக இருக்கிறாள். அதான் யமுனாவின் பெயரை எடுத்தேன். இப்பொது மனிஷா யமுனாவைப் பார்த்து பேச வேண்டும் என்கிறாள் தேவ்” என்று தயங்கிக் கூறினான் விக்ரம்.
அவனை முறைத்த தேவ், எதுவும் பேசாமல் சென்றுவிட்டான். ‘இவன் என்ன பதில் கூறாமல் சென்றுவிட்டான். இவன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லையே’ என்று குழப்பத்தோடு இருந்தவன், யமுனாவைப் பார்த்துப் பேச முடிவு செய்தான் விக்ரம்.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று கிஷோரின் வீட்டிற்கே சென்று, எதற்காக இந்தியா வந்தோம், மனிஷா தேவ்வை காதலிப்பது, குல்தீப் அங்கிள் மனிஷாவை கிஷோருக்கு மணக்க கேட்டது முதல் அனைத்தையும் கூறி விட்டான். அனைத்தையும் கேட்ட கிஷோருக்கு தலையே சுற்றியது.
“இது என்ன இவ்வளவு பெரிய மாஸ்டர் பிளானா இருக்கு விக்ரம். ஆனால் நான் இப்போ ரொம்ப தர்மசங்கடமான நிலையில் இருக்கேன். தேவ் என்னை எப்படி நினைப்பான் என்று கூட புரிஞ்சிக்க முடியல. யமுனா ஏற்கனவே திருமணமான பெண் என்று தெரிந்திருந்தால், அவளைத் திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டேன் ச்ச” என்று தன் தலையில் அடித்தவன்,
“நான் உன் தங்கையை திருமணம் செய்ய ஒத்துக்கொள்கிறேன் விக்ரம். நான் மனிஷாவை மணந்தால் தேவ்வின் பிரச்சனை முக்கால்வாசி சரி ஆயிடும்” என்றான் கிஷோர்.
“என்னால் எப்படி இந்த சந்தோஷத்தை பகிர்வது என்று கூட தெரியவில்லை. ஆனால் மனிஷா தேவ்வின் மேல் பைத்தியமாக இருக்கிறாள் கிஷோர். அதை யமுனா நினைத்தால் மட்டும் தான் சரி செய்ய முடியும். எனக்கு யமுனாவின் ஹாஸ்டல் விலாசம் வேண்டும். மனிஷா வேற யமுனாவிடம் பேச வேண்டும் என்கிறாள். நீயும் கூட வந்தால் நல்லா இருக்கும் கிஷோர்” என்று பெருமூச்சு விட்டான் விக்ரம்.
“கண்டிப்பா வரேன் விக்ரம்… எனக்கு பைத்தியம் தெளிந்தது போல் மனிஷாவிற்கும் சீக்கிரம் தெளியும் கவலைப்படாதே” என்று அவனைத் தேற்றினான்.
முதலில் யமுனாவின் மொபைல் எண்ணிற்கு கால் செய்த கிஷோர் அவனும் விக்ரமும் அவளைப் பார்க்க வருவதாய் கூறினர். இவர்கள் ஏன் வருகிறார்கள் என்று யோசித்த யமுனா, அவர்களிடம் இனி பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தாள். சிறிது நேரம் கழித்து யமுனாவிற்கு ஹாஸ்டல் வார்டனிடம் இருந்து கால் வந்தது.
“உன்னை பார்க்க ஒருவர் வந்து இங்கு காத்துக்கொண்டு இருக்கிறார், சீக்கிரம் வா” என்று காலை அணைத்தார்.
‘கிஷோர், விக்ரம் இருவர் வருகிறார்கள் என்று தானே கூறினார்கள். ஆனால் இப்போது ஒருவர் மட்டுமே வந்திருக்காங்கனு சொல்றாங்க. சரி யார் என்றாலும் தெளிவாக சொல்லிவிடலாம், இனி தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று’ என்று தீர்மானித்தவள், விசிட்டர்ஸ் ஹாலிற்குச் சென்று கொண்டிருந்தாள்.
அங்கு நின்று கொண்டிருந்தவனைப் பார்த்தவள் அதிர்ந்தாள். ஏனெனில், தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு, அவளுடைய கண்களைத் தெளிவாக எதிர்கொண்டிருந்தது, சத்யதேவ்.
***
தேவ்வைக் கண்ட யமுனா அதிர்ச்சியில் தன் நடையில் பின் வாங்கினாள். அவள் பின்னே செல்ல செல்ல, வேகமாக எட்டுகளை முன்னே வைத்து அவளை நெருங்கினான் தேவ்.
“ஸ்டாப் இட் யமுனா, நான் ஒன்னும் உன்னை கடிச்சு சாப்பிட்ற மாட்டேன். ரொம்ப சீன் போடாமல் நில்லு” என்றவன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துவிட்டு, “உனக்கு அரை மணி நேரம் டைம் கொடுக்கிறேன், உன் திங்க்ஸை பேக் பண்ணு” என்று சிகரெட்டை பிடித்துக் கொண்டே கூறினான்.
இதைக் கேட்டு கடுப்படைந்த யமுனா, “உங்களுடைய மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? நீங்க போன்னா போறதுக்கும் வான்னா வரதுக்கும் நான் ஒன்னும் உங்கள் வீட்டு நாய் குட்டி இல்லை” என்று படபடப்பாகப் பேசினாள்.
அதைக் கேட்டு நக்கலாக சிரித்த தேவ், சிகரெட்டின் புகையை யமுனாவின் முகத்தில் விட்டு, “நீ நாய்க்கும் கீழ” என்று திமிராகக் கூறினான்.
தேவ்வின் செய்கை ஒவ்வொன்றும் யமுனாவிற்கு வித்தியாசமாக இருந்தது. அவள் அறிந்த தேவ் எப்போதும் ஷேவ் செய்பவன், சிகரெட் மற்றும் குடி பக்கம் போய் இவள் பார்த்ததில்லை. ஆனால் இப்போது அவனுடைய அடர்ந்த தாடி, சிகரெட், இதெல்லாம் யமுனாவின் மனதை வதைத்தது.
“நான் நாயை விட கீழேயே இருந்துட்டு போறேன். ஆனால் எனக்கு தன்மானம் உண்டு. முதலில் உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் கிஷோரைக் காதலிக்கவில்லை. ஆனால் நான் வேறு ஒருவரை காதலிப்பது என் விருப்பம். அதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை” என்று அவள் சொல்லி முடிக்கும் போதே, அவளின் கையை இழுத்தான் தேவ்.
அவளின் உள்ளங்கையை எடுத்து, தான் பிடித்திருந்த சிகரெட்டை, அவளின் பஞ்சு போன்ற உள்ளங்கையில் அந்த சிகரெட்டின் நெருப்பை வைத்து அழுத்தினான். வலி பொறுக்க முடியாமல் கதறிய யமுனாவின் குரலைக் கேட்டு, ஹாஸ்டலில் இருந்த அனைவரும் வந்தனர் வார்டன் உட்பட.
“தேவ் சார், பாவம் அந்த பொண்ணு” என்று பயந்து பயந்து கேட்டார் வார்டன்.
அவரை முறைத்த தேவ், “கொடுத்த பணம் பத்தலையா?” என்று எளக்காரமாகக் கேட்டான்.
“சாரி சார்” என்று யமுனாவுக்கு உதவ நினைத்தவர் பின் வாங்கினார். அங்கிருந்த மற்ற பெண்களுடன் யமுனா நட்பாக பழகாததால், எல்லாரும் யமுனா கதறிக் கொண்டிருப்பதை, ஒரு காட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘இவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? இவர்களும் பெண்கள் தானே, இவர்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு இப்படி நடந்தால் அமைதியாக இருப்பார்களா?’ என்று மனதில் குமுறிய யமுனாவை, தேவ் சட்டென தன் இரு கைகளிலும் தூக்கிவிட்டு, வார்டனை ஒரு பார்வை பார்த்ததிலேயே வார்டன் புரிந்து கொண்டார்.
“ஆ… சார், யமுனா திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி வீட்டிற்கு அனுப்பிடுறேன்” என்று பதுங்கி பதுங்கிக் கூறினார்.
தேவ்வின் கையில் இருந்த யமுனாவிற்கு வலியில் வார்த்தை வரவில்லை. மயக்கம் வரும் போல் இருந்ததால் அவனை எதிர்க்க முடியாமல், அவனுடைய நீண்ட அகலமான கைகளில் சுருண்டு கிடந்தாள். அவளை அப்படியே எடுத்துக்கொண்டு ரோட்டில் நடந்து சென்றான்.
பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று, அவளின் கையில் சிகரெட்டால் உருவான காயத்திற்கு நர்ஸ்ஸை வரவழைத்து, மருந்து இடச் செய்தான். அரை மயக்கத்தில் இருந்த யமுனாவிற்கு என்ன நடக்கிறது என்று கூடத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் நர்ஸ் ஒரு ஊசி போட்ட பின், முழுமையான மயக்க நிலைக்குப் போனாள்.
யமுனா கண் விழிக்கும் போது, அவள் ஓர் அழகிய அறையில் இருந்தாள். “யமுனாம்மா, முழிச்சிட்டியா? எப்படி இருக்கம்மா?” என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார் சீதாலட்சுமி.
அவரைக் கண்ட பின் மற்ற அனைத்தையும் மறந்த யமுனா, “அத்தை எப்படி இருக்கீங்க? மாமா எப்படி இருக்காங்க?” என்று அவள் சொல்லி முடிக்கும் போதே, சீதாலட்சுமியின் முகத்தை நன்கு கவனித்தாள். எப்போதும் பூவும் பொட்டுடன் இருக்கும் தன்னுடைய மாமியார், இப்போது பூவும் பொட்டும் இல்லாமல் விபூதியுடன் காணப்பட்டது, யமுனாவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
“அத்தை, மாமா?” என்று கதறி அழுத யமுனாவின் முன், சீதாலட்சுமியும் கதறி அழ ஆரம்பித்தார். “எவ்வளவு நல்ல மனிதன் அவர்” என்று அழுத யமுனா, சீதாலட்சுமியின் அழுகை கூடுதல் ஆவதைக் கண்டு, அவரைச் சமாதானம்படுத்தினாள்.
“எல்லாம் விதிம்மா, உனக்காக தான் நான் என் உயிரைக் கையில் பிடித்துக் காத்துக் கொண்டிருந்தேன். இது என்னம்மா கையில் இப்படி பொசுக்கி இருக்கிறது” என்று பதற்றமாகக் கேட்டார் சீதாலட்சுமி.
யமுனாவின் கையின் காயத்தை விட தேவ்வால் ஏற்படும் மனதின் காயம் பெரிதாக இருப்பதால், இந்த காயத்தைப் பற்றி அவள் யோசிக்கவில்லை. “அத்தை, இது உங்களுடைய மகன் செய்தது” என்று தன்னுள் எழுந்த அழுகையை அடக்கிக் கொண்டாள்.
“தேவ் இப்படிச் செய்தானா…?” என்று ஒரு நிமிடம் அமைதி ஆனவர், “தேவ் இப்போது முன்னால் மாதிரி இல்லை யமுனாம்மா, அவன் இப்போது என்னிடமே ரொம்பப் கோபம் படுகிறான். சிகரெட் பிடிக்கிறான். குடிக்கிறான்” என்று அழுதார்.
‘என்னவோ முன்னாடி மட்டும் தேவ் கோபம் இல்லாமல் இருந்த மாதிரி பேசுறாங்களே’ என்று யோசித்தவள், ‘ஆமாம், தேவ் முன்னாடி மாதிரி இல்லை. இரண்டு வருடங்கள் முன்னர் இருந்த தேவ் கோபம் கொண்டவர், ஆனாலும் அவரிடம் ஒரு நிதானம் இருந்தது. ஆனால் இப்போது இருக்கும் தேவ் மிருகம் போல் நடந்து கொள்கிறார். அவரை நினைத்தாலே பயமாக இருக்கிறது’ என்று அவள் நினைக்கும் போதே, அந்த அறைக்குள் ஒரு இளம் வயது பெண்ணும், அவளுடன் ஒரு நாலு வயது பெண்ணும் வந்தார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக