மாயம் 28


மாயம் 28

 “எனக்கும் அது தெரியவில்லை தேவ், போட்டு வாங்குறேன் என்றவன், கிஷோர் இன்னும் வரவில்லை என்றவுடன், “கிஷோர்… என்று கத்தினான். 

“சாரி சாரி போலாம், என் காரில் போலாம். உங்களுடைய கார் இங்கேயே இருக்கட்டும் என்றான்.

“இல்லை கிஷோர், விக்ரம் உன்னோடு வருவான். நான் என்னுடைய காரில் வருகிறேன் என்று இடத்தை விட்டு எழுந்தான் தேவ். பின் மூவரும் கிளம்பினர். 

கிஷோருடன் காரில் வந்து கொண்டிருந்த விக்ரம், “நீ காதலிக்கும் பெண்ணுடைய குடும்பம் பற்றித் தெரியுமா? என்று கேட்டுப் பார்த்தான்.

“காதலுக்கு எதுக்கு குடும்பம் பற்றி தெரியணும்? அவள் பார்க்க தேவதை போல் இருப்பாள், அது போதாதா? என்று சந்தோஷத்துடன் பாட்டை பாடிக்கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.

‘ஒருவேளை அப்பெண் திருமணம் ஆனவள் என்று தெரிந்தால், இவனே விலகிடுவானோ? என்று யோசித்த விக்ரம், ‘முதலில் அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசினால் தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நினைத்தான். 

மணி பதினொன்று இருக்கும் சமயத்தில், யமுனாவின் எக்ஸ்டென்ஷன் நம்பருக்கு கால் வந்தது. “ஏய் ஹாப்பி பர்த்டே, கம் டு மை ரூம் என்று காலை கட் செய்தான் கேசி. இப்போது அவனிடம் தெளிவாக பேசிவிட வேண்டும் என்று அவனின் அறைக்குள்ளே சென்றாள். 

“ஏய் யமுனா வா… விக்ரம் ஷி இஸ் யமுனா என்று அறிமுகப்படுத்தியவன், யமுனாவை அமரச் சொன்னான். ‘இன்னொருவர் முன் நாம் எப்படி நம் கதையைப் பேசுவது என்று அமைதியாக அமர்ந்திருந்தாள் யமுனா.  

“சோ விக்ரம், இவள் தான் நான் சொன்ன என்னுடைய காதல் என்று சொல்லும் போதே, அந்த அறைக்குள் நுழைந்தான் தேவ்.

‘இனி வாயை மூடினால் நல்லா இருக்காது என்று யமுனா பேச முற்பட்டபோது, “ஹே தேவ்… இவள் தான் நான் காதலிக்கும் பெண் யமுனா என்று கூறினான் கிஷோர் என்கிற கேசி. 

தேவ் என்ற பெயர் காதில் விழுந்ததுமே ஒருவித படபடப்புடன் இருந்த யமுனாவின் முன் வந்து நின்று, அவளை அனல் தெறிக்கும் பார்வையோடு எதிர்கொண்டான், அவளுடைய முன்னாள் கணவன் தேவ். 

தேவ்வைப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த யமுனா, தன்னை மீறி அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்தாள். யமுனாவின் செய்கை கிஷோருக்கும் விக்ரமிற்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. 

“நீ சொன்ன மாதிரியே இன்னொரு ஆம்பளைய தேடி பிடிச்சிட்ட… ஆனால் என்ன யமுனா, உன் கெட்ட நேரம் என்னை பார்த்துட்ட. இனி உன் ஆட்டம் செல்லாது என்று தன் இரு கைகளையும் கட்டிக் கொண்டவன், 

“மறந்துட்டியா யமுனா, நீ இன்னும் யமுனா சத்யதேவ் தான். இன்னும் நமக்கு டைவர்ஸ் ஆகவில்லை. அதற்குள் கிஷோர் கூட குடும்பம் நடத்த ஆரம்பிச்சிட்டியா? என்று கத்தியவன், அவளை அதட்டினான். 

இதைக் கேட்ட யமுனாவிற்கு கோபம் பயங்கரமாக வந்தது, அந்த வேகத்தில் தேவ்வின் கன்னத்தில் அறைந்து விட்டு வெளியே ஓடிவிட்டாள். யமுனா தன்னை அடித்த கோபத்தில், தேவ் யமுனாவின் பின்னே வேகமாக நடந்து சென்று, அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கிஷோரின் அறைக்குள் வந்தான். 

விக்ரமும் கிஷோரும் பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்ததைக் கண்டுகொள்ளாமல், யமுனாவை தன் கையில் இறுக்கமாக பிடித்துக் கொண்டு, “கிஷோர், இவளுக்கு ஏற்கனவே கல்யாணமாகி, அவளுடைய கணவன் நான் பக்கத்தில் இருக்கும் போதே, உன்னுடன் இங்கு ஜாலியாக இருக்கிறாள், இவள் கேவலமானவள்! என்றவன், யமுனாவின் கன்னத்தில் இரு முறை அறைந்தான். 

“இந்த தேவ்வின் மேல் கை வைத்ததுக்கு, உனக்கு இரண்டு அடிகள் பத்தாது என்று வேகமாக வெளியே சென்று விட்டான். 

“யமுனா… உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா? உன் கணவன் தேவ்வா! அதனால் தான் என்னுடைய காதலை மறுத்தாயா? என்று கேட்ட கிஷோரை, தேவ் அடித்துச் சென்ற இடத்தில் கையை வைத்து அழுது கொண்டிருந்த யமுனா முறைத்தாள்.

“அப்போது யமுனா உன்னை காதலிக்கவே இல்லையா? நீ தான் அப்போ ஒரு தலையா சுத்திட்டு இருக்கியா? தேவ் வேற தப்பா புரிஞ்சிக்கிட்டானே! யமுனா, நாங்கள் தான் தப்பாக புரிந்து கொண்டோம் சாரிம்மா என்றான் விக்ரம். 

“தேவ் என்னை எப்போதுமே நம்பியது இல்லை, இரண்டு வருடங்கள் கழித்து பார்க்கும் மனைவியை இதை விட யாராலும் கேவலப்படுத்த முடியாது என்று கிஷோரிடம் திரும்பியவள்,

“நான் வேலையை ராஜினாமா செய்யறேன் கேசி. இப்போது நான் வீட்டிற்கு கிளம்பறேன் என்று அவன் பதிலை எதிர்பாராமல், தன் கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

***

வெளியே வந்த யமுனா, ஒரு ஆட்டோவைப் பிடித்து, தன்னுடைய ஹாஸ்டலிற்குச் சென்று கொண்டிருந்தாள். செல்லும் வழியெங்கும் தேவ்வை நினைத்துக் கோபம் கொண்டாள். 

‘அவனுக்கு வயது ஏறினாலும் திமிரும் அவனொடு சேர்ந்து ஏறுகிறது. என்னுடைய பிறந்தநாள் அன்று என்னை பயங்கரமாக காயப்படுத்தி விட்டான். எப்படி அவனால் அவனுடைய மனைவியை இவ்வளவு கீழ்த்தரமாக யோசிக்க முடியும்? என்று நினைத்தவள், இனி தன் வாழ்க்கையில் தேவ்வினால் எத்தகைய பிரளயம் வரப்போகிறதோ? என்று நினைத்து பயந்தாள். 

தன்னுடைய ஹாஸ்டலுக்கு வந்து படுத்தவளுக்குத் தூக்கம் தான் வரவில்லை. கறுப்பு சட்டை மற்றும் ப்ளூ ஜீன்ஸ் அணிந்து வந்த தேவ்வின் முகத்தில் அடர்ந்து வளர்ந்த அவனுடைய தாடி, அவனின் முகத்தில் இருந்த அழுத்தம், யமுனாவை நெருடியது. தேவ்வின் முகத்தில் இருந்த அந்த கோபத்தின் வெப்பத்தை யமுனாவால் உணர முடிந்தது. மனது ஒரு விதமாக படபடப்பாக இருந்தது யமுனாவிற்கு. குளித்து விட்டு வந்தால் கொஞ்சம் நன்றாக இருக்குமோ? என்று தோன்றியது. அதனால் குளிக்கச் சென்று விட்டாள்.

யமுனாவை அடித்துவிட்டு தேவ் சென்ற இடம் பார். யமுனா தேவ்வை விட்டுச் சென்ற பின், தேவ் பழகிய பழக்கம் இது. தனக்கு கோபம் அல்லது மன அழுத்தம் இருக்கும் போது, சிகரெட் அல்லது குடிப்பழக்கத்தை மேற்கொண்டான். 

சென்னையில் உள்ள பிரபல பாரில் குடித்துக்கொண்டிருந்த தேவ்விற்கு கால் செய்தான் விக்ரம். அவன் காலை பார்த்து கோபத்தில் கட் செய்தவனுக்கு, பின் கிஷோர் கால் செய்தான். மேலும் மேலும் இருவரும் மாற்றி மாற்றி கால் செய்து கொண்டிருந்தனர். பொறுமையை இழந்த தேவ், விக்ரமின் காலை அட்டர்ன் செய்து அவனைக் கண்டபடி கத்தினான். 

“தேவ் ப்ளீஸ்கோபப்படாதே, நீ எங்கே இருக்க என்று மட்டும் சொல்லு. மத்தது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம் என்று தேவ் இருக்கும் இடத்தை அறிந்து, இருவரும் விரைந்தனர்.

பாரில் தேவ்வைக் கண்ட பின், முதலில் அவனிடம் பேசியது விக்ரம் தான். “தேவ், நீ ரொம்ப அவசரப்படுற, யமுனா ரொம்ப பாவம் என்ற விக்ரமை முறைத்தான்.

“ஐ அம் சாரி தேவ், எல்லா பிரச்சனைக்கும் காரணம் நான் தான்… யமுனா ஏற்கனவே திருமணம் ஆன பெண் என்று எனக்குத் தெரியாது. அதுமட்டும் இல்லாமல் என்னுடையது ஒருதலைக் காதல். ஒரு நிமிஷம் கூட யமுனா என்னைத் திரும்பிக் கூட பார்த்தது இல்லை. நீ தான் அவசரப்பட்டு எங்கள் இருவரையும் சேர்த்துப் பேசி தப்பு செய்துவிட்டாய் என்று கிஷோர் கூறி முடிப்பதற்குள், அவனை அடித்து கீழே தள்ளி விட்டான் தேவ்.

“நீ பேசாத, என் காதல், என்னுடைய காதல்னு சொன்னியே, அந்தப் பெண்ணிற்கு உன் மேல் காதல் இல்லை என்பதை நீ முன்பே தெரிவித்திருக்க வேண்டும். அது உன்னுடைய தப்பு. நான் செய்தது தவறு இல்லை. இருவரும் இதைப் பற்றி இனி என்னிடம் பேசாதீர்கள் என்று அந்த இடத்தில் இருந்து கிளம்பியவன், நேராக வீட்டிற்குச் சென்று விட்டான். 

அங்கு அவனுக்காக காத்துக்கொண்டிருந்த ஆதிரா மற்றும் அன்னையிடம் சென்றவன், அவர்கள் சாப்பிட்டார்களா என்று விசாரித்துவிட்டு குளிக்கச் சென்றான். தேவ் குடித்தது தன்னுடைய அன்னைக்கு தெரிந்தால், மனது வருத்தப்படுவார் என்று குளித்துவிட்டு, தான் குடித்த தடயத்தை மறைத்தான். 

குளித்து முடித்து விட்டு, தன் அறைக்குள் வந்து தன்னுடைய சோஃபாவில் அமர்ந்த தேவ், பச்சை வண்ண காட்டன் சல்வார் அணிந்து புதுப்பூ போல், இரண்டு வருடங்கள் முன்னதை விட, இப்போது மேலும் முகத்தில் அழகு கூடிக் கொண்டிருந்த தன் மனைவி யமுனாவை நினைத்துப் பார்த்தான். கண்களை மூடி அவளை நினைக்கும் போதே, தன்னை மீறி வந்த புன்னகை உடனே மறைந்தது. கோபத்தில் எழுந்தவன், மாடிக்குச் சென்றான். அங்கு மனிஷா ஏதோ யோசனையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். 

தேவ் அங்கு வந்ததைக் கண்டதும், அவனை எதிர்பார்த்தவளாக, “உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று தயங்கினாள். 

அவள் என்ன பேச நினைக்கிறாள் என்று யூகித்த தேவ், “என்ன? என்று கறாராக கேட்டான். 

“அது வந்து நான் உங்களை… வந்து ஆதிரா என்று திணறிக்கொண்டு இருக்கும் போது, 

“நாங்கள் இன்று தேவ்வுடைய மனைவி யமுனாவைப் பார்த்தோம் என்று அவசரமாகக் கூறினான், அங்கு வந்த விக்ரம். 

அவனை யோசனையாகப் பார்த்த தேவ்விடம் ஒரு தலையசைப்பு கொடுத்து விட்டு, “மனிஷா, இன்று தேவ்வினுடைய மனைவி யமுனாவைப் பார்த்தோம். சீக்கிரமே அவர்கள் இருவரும் சேர்ந்து வாழப் போகின்றனர் என்று திக்கிக் கூறினான். இதைக் கேட்ட மனிஷாவின் கண்கள் சிவப்பதை, தேவ்வினால் நன்கு உணர முடிந்தது. 

விக்ரம் சொன்னதை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்த மனிஷா, இப்போது நேரடியாக தேவ்விடம் திரும்பி, “நான் உங்களை காதலிக்கிறேன் தேவ்! உங்களைக் கல்யாணம் பண்ண நினைக்கிறேன் என்று கூறினாள். ‘இவளுக்கு ஆப்பு கன்பார்ம் என்று விக்ரம் நினைக்கும் போதே, அவளை ஓங்கி அடித்தான் தேவ். 

“என்ன பேச்சு பேசுற நீ, என் குழந்தையைக் கவனிக்கத் தான் உன்னை நியமித்தேன். என்னை கவனிப்பதற்காக இல்லை. உன் வயசு என்ன? என் வயசு என்ன? உன் வயதுக்குத் தகுந்தது போல் நடந்து கொள். என்னிடம் இனி நீ இப்படிப் பேசக் கூடாது என்றான். 

“நல்லா அடிங்க தேவ்… என் வயது கம்மினா அப்போது யமுனா என்னை விட சின்னவளா தான் இருக்கணும், நியாயப்படி நான் தான் உங்களுக்கு பொருத்தம் ஆனவள் என்றாள். 

ஏற்கனவே யமுனாவின் மேல் கடுப்பில் இருந்த தேவ்விற்கு, யமுனா தேவ்வை விட வயதில் மிகச் சிறியவள் என்பதை நினைவுப்படுத்தி, யமுனா தனக்கு பொருத்தமானவள் இல்லை என்று மனிஷா கூறியதும், அவ‍னுக்கு ஒருவிதமான வெறி வந்தது. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 8

மாயம் 2