மாயம் 27
கொட்டிவாக்கத்தில் இருக்கும் கிஷோரின் வீட்டிற்குச் சென்ற தேவ் மற்றும் விக்ரமை வரவேற்றார் குல்தீப் சிங். அவரைப் பார்த்தவுடன் தேவ்விற்கு ஏதோ சந்தேகமாகவே இருந்தது. ஆனாலும் நடப்பதைப் பார்ப்போம் என்று அமைதியாக உள்ளே சென்றான்.
“அங்கிள் உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று விக்ரம் சொன்னான். ஆனால் நீங்கள் பார்க்க நல்லா தான் இருக்கீங்க?” என்று வெளிப்படையாகவே கேட்டான் தேவ்.
“ஹாஹா நீ நம்பர் ஒன் பிசினஸ் டைகூன்னா சும்மாவா, நல்ல புத்திசாலி தான் நீ தேவ்” என்று சிரித்தவர், “நீ சொல்றது உண்மை தான் தேவ், என் உடம்பில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் மனது பிரச்சனையாக இருக்கிறது” என்று வருத்தப்பட்டார் குல்தீப்.
“என்ன ஆச்சு அங்கிள், கிஷோர் எங்கே?” என்று கேட்டான் விக்ரம்.
“ஹே தேவ்… விக்ரம்… வாட் அ சர்ப்ரைஸ்! நீங்கள் எப்படி இங்க?” என்று சந்தோஷமாகக் கேட்டான் கிஷோர்.
“மாதாஜி… தேவ், விக்ரம் வந்திருக்காங்க” என்று தன் அன்னையை அழைக்க உள்ளே சென்றான்.
“தேவ், விக்ரம் நான் உங்களிடம் இப்போது கூறிய விஷயம் கிஷோருக்கு தெரியக் கூடாது” என்று அமைதியாகக் கூறினார் குல்தீப் சிங்.
***
‘என்ன இங்க நிலைமை முன்னுக்கு முரண்பாடாக இருக்கிறது’ என்று யோசித்த தேவ்வின் முன் பழச்சாற்றுடன் வந்தார் கிஷோரின் அன்னை சாந்தி தேவி.
“ஆவோ பேட்டா” என்று ஹிந்தியில் ஆரம்பித்தவர், தமிழில் அவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தார். சென்னையிலேயே இருந்ததால் கிஷோரின் குடும்பத்திற்கு தமிழ் சரளமாகவே வரும்.
கிஷோரின் குடும்பம் ஒரு பெரிய குடும்பம். ஹிந்தி சீரியலில் வருவதைப் போல் பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி என்று பெரிய குடும்பம் மற்றும் இளவயது பட்டாளங்கள் சூழ்ந்து நிறைந்திருக்கும் வீட்டில், விக்ரம் தன் தங்கையை திருமணம் செய்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தான்.
சிறிய வயதில் இருந்தே அண்ணனின் ஆதரவு மற்றும் அரவணைப்பில் மட்டும் இருந்தவளுக்கு, இந்த குடும்பத்தை மிகவும் பிடித்துவிடும் என்று சந்தோஷக் கனவில் இருந்தவனைக் கலைப்பதுப் போல் கிஷோர் விக்ரமிடம், “என் தந்தை உங்களிடம் ஏதாவது சொன்னாரா?” என்று கேட்டவனிடம், “இல்லை” என்று சமாளித்தான் விக்ரம்.
“ம்ம் அப்பாக்கு போன வாரம் நெஞ்சுவலி வந்து, டாக்டரை எல்லாம் வர வெச்சு பார்த்து, அவர் இது அதுன்னு சொன்னாரு, அதில் இருந்து அப்பா என்னை கல்யாணம் பண்ண சொல்லி வற்புறுத்திட்டே இருக்காரு. நான் என் ஆபிஸில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அப்போது எப்படி என்னால் அவளை மறந்து வேறு ஒரு பெண்ணை மணக்க முடியும்?” என்று சொன்னவனின் முன், கஷ்டப்பட்டு தன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டான் விக்ரம்.
தேவ்விற்கும் இந்த விஷயம் அதிர்ச்சியைத் தந்தாலும், ‘ஏன் கிஷோரின் தந்தை காதலை ஒப்புக் கொள்ளவில்லை? தனக்குத் தெரிந்த வரை குல்தீப் அங்கிள் காதலை எதிர்க்கும் ரகம் இல்லையே!’ என யோசித்தவன் நேராக குல்தீப்பிடம் சென்றான்.
“அங்கிள், கிஷோர் மனதில் வேறு ஒரு பெண் இருக்கும் போது, நீங்கள் ஏன் தேவை இல்லாமல் விக்ரம் மனதில் ஆசையை வளர்த்தீர்கள்? அவன் உங்களை நம்பி தன் தொழிலை விற்று இந்தியா வந்துள்ளான். அதுமட்டும் இல்லாமல் நெஞ்சு வலி என்று பொய் வேற” என்று ஆவேசமாக கேட்ட தேவ்விடம்,
“தேவ், நீ கேட்கும் கேள்விகள் ரொம்பவே நியாயமானது. ஆனால் நான் காதலை எதிர்ப்பவன் இல்லை. அந்தப் பெண் ஏழையாகவே இருந்தாலும் அவளை கிஷோருக்கு பிடித்திருந்தால் மனது சந்தோஷத்துடனே அழைத்துக் கொண்டு வந்திருப்பேன். ஆனால் கிஷோர் விரும்புவது, ஏற்கனவே திருமணம் நடந்து, அது தோல்வியில் முடிந்த பெண்ணை. அவளை எப்படி இவனுக்கு திருமணம் செய்து வைப்பேன்?
அதனால் தான் எப்படியாவது விக்ரம் தங்கையை இங்கு வரவழைத்து திருமணத்திற்காக பேச வேண்டும் என்று, முதலில் நெஞ்சு வலி என்று ஒரு பொய்யை உருவாக்கி, கிஷோரை ஒரு வாரம் அலுவலகம் செல்ல விடாமல் என்னுடனே வைத்திருக்கிறேன்” என்றார் குல்தீப் சிங்.
எந்த ஒரு பெற்றோராலும் தன் மகன் ஏற்கனவே திருமணமான பெண்ணை காதலிக்கிறேன், மணம் முடிக்க வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தேவ்வின் மனதும் ஒப்புக்கொண்டது.
மேலும் தொடர்ந்த குல்தீப், “அந்தப் பெண் கம்பெனியில் சேரும் பொழுதே அவளுடைய பையோடேட்டாவில் மேரிட் என்ற பாக்ஸில் டிக் செய்திருக்கிறாள். ஆனால் கழுத்தில் தாலி இல்லை. தங்குறதும் ஹாஸ்டல் தான். அவளுடைய டீம் மேட்ஸிடமும் தன் இல்லற வாழ்க்கையைப் பற்றிக் கூறவில்லை.
ஒரு நாள், கம்பெனியின் சேர்மென் என்னும் முறையில், நான் அந்தப் பெண்ணை தனியாகச் சந்தித்து, ‘மேரிட்னு உன்னுடைய பையோடேட்டாவில் இருக்கிறது. ஆனால் உன்னுடைய கழுத்தில் தாலி இல்லை. நாங்கள் ரொம்ப ஆர்த்தோடெக்ஸான வழிமுறைகளை பின்பற்றுகிற பெண்களை மட்டுமே இந்த கம்பெனியில் வெப்போம்மா’ என்று கேட்டுப் பார்த்தேன்.
முதலில் கடுப்பான அப்பெண் பின், தான் திருமணம் ஆனவள், ஆனால் அந்த திருமணம் தோல்வி அடைந்தது என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டாள். அந்தப் பெண்ணும் கிஷோரை காதலிக்கிறாளா என்று தெரியவில்லை. இந்த விஷயத்தை இப்போது எப்படி கொண்டு செல்வது என்றும் புரியவில்லை. விக்ரமிடம் சொல்லி அவனை ஆறுதல் படுத்த வேண்டும்” என்றார் குல்தீப்.
“அவன் அந்தப் பெண்ணை மணக்கவில்லை என்றாலும், எப்படி மனிஷாவை மணந்துக் கொள்வான் என்று நம்பிக்கையாக இருக்கிறீர்கள்?” என்று கேள்வி கேட்டான் தேவ்.
“நாங்கள் பார்க்கிற பெண்ணை தான் நீ மணக்க வேண்டும் என்று நேற்றே கிஷோரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவன், முடியாது அவன் காதலிக்கும் அந்தப் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று நிற்கிறான்” என்று குல்தீப் கவலையாகக் கூறும்போதே,
“தேவ், பேசாமல் நாம் இருவரும் அந்தப் பெண்ணிடம் பேசிப் பார்க்கலாமா?” என்றான் விக்ரம்.
“விக்ரம் எப்போது இங்கே வந்த?” என்று அதிர்ச்சியாய்க் கேட்டார் குல்தீப்.
“நீங்கள் பேசும்பொழுதே வந்துவிட்டேன்… தேவ், அந்தப் பெண்ணை நாம் மிரட்டி விடலாம். அவள் மனதில் கிஷோர் இல்லை என்றால், கிஷோர் ஏன் அந்தப் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று கூறப்போகிறான்? எனக்குத் தெரிந்து கிஷோரின் பணபலம் தெரிந்து, அவள் அவனை விடாமல் இருப்பாள். நாம் ஏதாவது மிரட்டி செட்டில் பண்ணி வைத்தால் விலகிப் போய் விடுவாள்” என்றான் விக்ரம்.
“ஒரு பெண்ணைப் பற்றி முழுதாக தெரியாமல் இப்படி பேசாதே விக்ரம், அந்த பெண்ணுடைய தலையீடு இந்த விஷயத்தில் எவ்வளவு இருக்கிறது என்று தெரியாமல் அவளை நாம் நோவது தவறு” என்றான் தேவ் தீர்மானமாக.
“ஆனால் ஒன்று தேவ், அந்தப் பெண் மிகவும் தைரியசாலி. யாருக்கும் அஞ்சுகிற வகை இல்லை” என்றார் குல்தீப்.
“அப்போது கண்டிப்பா நான் அவளை பார்த்தே ஆக வேண்டும் தேவ், நீ எனக்காக இல்லை என்றாலும், மனிஷாவிற்கு இந்தத் திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டாவது, என்னோடு வா. ஏனென்றால் நீ இருந்தால் எனக்கு ஒரு பக்க பலமாக இருக்கும். இந்த மிரட்டல், அதட்டல் எல்லாம் உனக்கு கைவந்த கலை” என்றான் விக்ரம் கெஞ்சுதலாய்.
சிறிது நேரம் யோசித்த தேவ், மனிஷா கல்யாணம் செய்தால் தான் தன் மேல் இருக்கும் காதல் போகும் என்பதால், தேவ்வும் இதற்கு ஒப்புக் கொண்டான். அப்போது அந்த இடத்திற்கு கிஷோர் வந்தவுடன், இருவரும் பேச்சை மாற்றினர்.
“நீங்க வந்ததும் நல்லதா போச்சு, நாளைக்கு என்னுடைய காதல், ஐ மீன் நான் காதலிக்கும் பெண்ணிற்கு பிறந்தநாள். அவளை உங்களுக்கு நாளை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நீங்களும் என்னோடு நாளை காலை அலுவலகத்திற்கு வாருங்கள்” என்றான் கிஷோர்.
‘இதுவும் நல்ல சந்தர்ப்பம் தான், அந்தப் பெண் எப்படிப்பட்டவள் என்பது கிஷோருடன் இருக்கும் போது நன்றாக கணிக்க முடியும்’ என்று நினைத்த விக்ரம், “ஆம் நானும் தேவ்வும் நாளை உன்னோடு அலுவலகத்திற்கு வருகிறோம்” என்றவன், தேவ்வின் புருவ சுளிப்பைக் கண்ட பின் அவனிடம், ‘ப்ளீஸ்’ என்பது போல் பாவனை செய்தான். முதலில் அவனை முறைத்த தேவ், நீ என்னமோ பண்ணு என்பது போல் கிஷோரிடம், “வருகிறோம்” என்று கூறினான்.
அடுத்த நாள் விடியலில், யமுனாவிற்கு இன்றோடு இருபத்தி மூன்று வயது ஆனது. அவளுடன் படித்த பெண்கள் வீட்டிலெல்லாம் இப்போது தான் கல்யாணத்திற்கு மாப்பிள்ளை தேடவே ஆரம்பித்திருப்பார்கள். ஆனால், ‘தனக்கு இருபத்தி ஒரு வயதில் கட்டாயக் கல்யாணம் நடத்திய அவன்… அவனே நம்மை துரத்தியும் விட்டுவிட்டான். என்ன மனிதன் அவன்? ஒரு பெண்ணின் வாழ்க்கை அவனுக்கு அவ்வளவு கீழ்த்தனமாக போச்சா?’ என்று தன்னை மீறி வந்த அழுகையை தன் இரு கைகளையும் வைத்து துடைத்தாள். தன் படுக்கையை விட்டு எழுந்து, தன் அன்றாட நாளைப் போல் அன்றும் ஒரு காட்டன் சல்வாரை அணிந்து கொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பினாள்.
தன் அலுவலக தளத்திற்கு வந்த யமுனாவின் முன், அவளுடைய டீம் மேட்ஸ் ஐவரும் வந்து, “ஹாப்பி பர்த்டே யமுனா…” என்று ஆரவாரப்படுத்தினர்.
‘எப்படி இவர்களுக்கு தன்னுடைய பர்த்டே தெரியும்?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த தளம் முழுவதும் விலை உயர்ந்த பலூன்களாலும், கலர் பேப்பர்களிலும், ‘ஹேப்பி பர்த்டே யமுனா’ என்று அவர்கள் தளத்தில் கிளாஸின் வேலைப்பாட்டில் ஆன கதவில் அழகாகப் பொருத்தப்பட்டிருந்தது. இதெல்லாம் கேசி வேலையாகத் தான் இருக்கும் என்று நினைத்த யமுனாவிற்குக் கடுப்பாக இருந்தது.
‘இன்று கேசியைப் பார்த்தால், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கிற மாதிரி வெளிப்படையாக பேசிவிட்டு, பேப்பர் போட்டு விட வேண்டும். வேறு வேலை இப்போது கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. என் படிப்பு மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு. இரண்டு மூன்று வலைதளத்திலும் ரெஸ்யூம் அப்லோட் பண்ணிருக்கோம். கண்டிப்பாக கிடைக்கும்’ என்று நம்பிக்கையோடு இருந்தாள் யமுனா.
***
அத்தியாயம் 23
தன் இடத்தில் வந்து அமர்ந்த யமுனாவிற்கு கடுப்பாக இருந்தது. தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரும் தன்னையும் கேசியையும் சேர்த்து வைத்துப் பேசிக் கொண்டிருந்தனர். தன் மனதை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தவள், ‘இவர்களிடம் சண்டை போட்டு பிரயோஜனம் இல்லை. நாம் இன்று கேசியிடம் பேசுவது தான் சரி’ என்று தன் வேலையைத் தொடங்கினாள்.
தன் வீட்டில் தன்னை அழகுபடுத்திக் கொண்டிருந்த கிஷோரை பார்த்து, ஹாலில் காத்துக் கொண்டிருந்த தேவ் மற்றும் விக்ரமிற்கு கடுப்பு வந்தது. ‘அப்படி என்ன ஒரு திருமணம் ஆனப் பெண் மீது இவனுக்கு காதல்?’ என்று தேவ் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, விக்ரமிடம், “கிஷோருக்கு அவனுடைய காதலிக்கு ஏற்கனவே கல்யாணமான விஷயம் தெரியுமா?” என்று கேட்டான்.
கருத்துகள்
கருத்துரையிடுக