மாயம் 26
“அவங்க எல்லாரும் வந்தாலுமே, ஆதிராவுக்கு அன்னை பாசம் வேண்டும் இல்லையாப்பா? நானும் இன்னும் எவ்வளவு வருஷம் உயிரோடு இருப்பேன் என்று தெரியவில்லை. அதனால் யமுனாவை…” என்று அவர்கள் கூறி முடிப்பதற்குள், “அம்மா நிறுத்துங்க… அந்தப் பெயரைக் கூட என்கிட்ட சொல்லாதீங்க, எரிச்சலாக இருக்கிறது” என்று தன் அறைக்குச் சென்றான் தேவ்.
***
“அண்ணா, திடீரென்று இந்தியா கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் அதிர்ச்சியாக போச்சு. ஆனால் தேவ்வும் வருகிறார் என்று சொன்னதுக்கு அப்புறம் தான், நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றாள் மனிஷா.
“எப்படி இருந்தாலும் நம்ம சொந்த நாடு இந்தியாதான, குஜராத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, பிறகு லண்டன் வந்தோம். இப்போது மறுபடியும் நம்முடைய தாய் நாட்டிற்கு செல்லப் போகிறோம்” என்றான் விக்ரம்.
அடுத்த நாள் இரவு, லண்டனிலிருந்து அனைவரும் விமானத்தில் இந்தியாவிற்குக் கிளம்பினார்கள். விமானம் இந்தியாவை நோக்கி கிளம்பியதும், தேவின் மனதில் யமுனா வந்து வந்து போனாள். ‘நான் உனக்காக சென்னை வரவில்லை யமுனா. என் அம்மாவிற்காக தான் வருகிறேன். என் மனதில் உனக்கு என்றுமே இடமில்லை’ என்று தன்னிடம் மனதில் கூறிக் கொண்டிருந்தான்.
‘உன்னை நம்பி இனி ஏமாறுவதற்கு நான் தயாராக இல்லை. முதலில் உன்னை வற்புறுத்தி கல்யாணம் செய்து கொண்டது உண்மைதான். ஆனால் நாட்கள் செல்ல செல்ல உன்மேல் எனக்குள் காதல் வந்தது. ஆனால் உனக்கு இன்னொருவனைத் திருமணம் செய்வதில் தான் விருப்பம் இருந்தது. முதலில் உன்னிடம் இருந்து விலகினேன். ஆனால் நீ பிரியாவிடம் தேவ் தான் என்னுடைய பிரச்சனை என்று சொன்னதை என்னால் மறக்க முடியாது. மன்னிக்கவும் முடியாது. என்னைப் பொறுத்தவரை நீ ஒரு தூக்கி எறியப்பட்ட குப்பை!’ என்று மனதில் வஞ்சித்தான்.
அன்று இரவு லாப்டாப்பில் தன்னுடைய ரெஸ்யூமை அப்லோட் பண்ணி கொண்டு இருந்தாள் யமுனா. இரண்டு வருடங்களாக தன்னுடைய முகநூல் பக்கத்தை உபயோகிக்காத யமுனா, இப்போது உள்ளே சென்று பார்க்கலாமா? என்று யோசித்து, அந்த எண்ணத்தைக் கைவிட்டாள்.
ரொம்ப நேரம் தூக்கம் வராமல் கண்மூடி க்கொண்டிருந்த யமுனாவிற்கு, திடீரென்று தேவ் வேறு ஒரு திருமணம் பந்தத்தில் இணைந்திருப்பானோ? என்று சந்தேகம் வந்தது. என்னதான் தேவிற்கு இரண்டு கல்யாணங்கள் நடந்தாலும், அந்த இரண்டிலுமே பிரம்மச்சாரியாக இருந்தவனுக்கு, இன்னொரு கல்யாணம் பண்ணுவதில் பெரிய விஷயம் ஒன்றும் இல்லை.
ஒருவேளை தேவிற்கு மூன்றாவதாக ஒரு கல்யாணம் நடந்திருக்குமோ? என்று தன்னை குழப்பி, அவள் உடனடியாக தனது செல்லில் கூகுளில் சத்யதேவ் விக்கிபீடியா என்று தேடிப்பார்த்தாள். அதில் தேவிற்கு தற்போது மனைவி ஏதாவது இருந்தால் தெரியுமே என்ற ஆர்வத்தில் பார்த்தாள். ஆனால் விக்கிபீடியாவில், தேவிற்கு முதலில் கல்யாணம் ஆன வரை மட்டுமே அப்டேட் ஆகி இருந்தது. அதைப் பார்த்து ஏமாற்றமடைந்த யமுனா, “அப்போது தேவ்விற்கு நான் மனைவி இல்லையா? ஏன் விக்கிப்பீடியாவில் என் பெயர் வரவில்லை?” என்று நினைத்தவள் தன்னையே நொந்து கொண்டாள்.
“யமுனா இது உனக்கு நல்லது இல்லை. உனக்கு தேவின் மேல் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை, அது வரவும் கூடாது” என்று விடாபிடியாக கண் மூடி தூங்கிவிட்டாள்.
***
இரண்டு நாட்கள் ஓடிய பின்னர், தேவ், விக்ரம், மனிஷா, சீதாலட்சுமி மற்றும் ஆதிரா சென்னை வந்தடைந்தனர். தேவ்வியினுடைய தந்தை வழி தாத்தா, பாட்டி மற்றும் தாய் வழி தாத்தா, பாட்டி சென்னையில் தான் கால காலமாக வசித்து வந்தனர். தேவ்வின் தந்தை ஜெயக்குமார், டெல்லியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின் டெல்லியின் வானிலை பிடித்து இருந்ததால், அங்கே இருந்து விட்டார்.
ஜெயக்குமாரின் சொந்த தாய்மாமன் மகளான சீதாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், அதன்பின் டெல்லியில் தான் தன் தொழிலை வளர்த்தார். அந்த சமயத்தில் ஒரு வருடம் சீதாலட்சுமி சென்னையில் தன் தாய், தந்தையுடன் இருந்தார். அதற்குப் பிறகு தேவ், குணா மற்றும் ப்ரியா பிறந்த பின் கோடை விடுமுறைக்கு மட்டுமே வந்து சென்றனர். பெரியவர்கள் தவறிய பின், சென்னை வருவதை நிறுத்திக் கொண்டனர்.
சென்னையில் இரண்டு மூன்று வீடுகளைக் கொண்ட தேவ்வுடைய தந்தைக்கு, பெசன்ட் நகரில் இருக்கும் வீடு மிகவும் நெருக்கமானது. ஏனென்றால் தேவ்விற்கு அந்த கடல் அலையை ஒட்டி இருக்கிற வீட்டை மிகவும் பிடிக்கும். அதனால் ஜெயக்குமாரும் எப்போது சென்னை சென்றாலும், அங்கே தங்குவதற்கு தான் நினைப்பார்.
விக்ரம் மற்றும் மனிஷாவை முதலில் தன்னுடைய பெசன்ட் நகர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற தேவ், கொஞ்ச நாட்கள் அங்கு தங்குமாறு கூறினான். ஏனெனில், ஒரு நல்ல வீடு பார்த்து கிடைக்க, சுமார் ஒரு வாரமாவது ஆகும் என்று அவர்களைத் தங்க வைத்தான்.
தேவ்வின் சென்னை வீட்டைப் பார்த்த, மனிஷா மற்றும் விக்ரம் அசந்து போனார்கள். இருபது சென்டில் அமைந்த அந்த வீட்டின் முன், மரம் செடி கொடிகள் மற்றும் திறந்த புல்வெளி அமைந்திருந்த இடத்தை, ஏழுமலை என்கிற தோட்டக்காரர் பராமரித்துக் கொண்டிருந்தார். அவரின் மனைவி வத்சலா வீட்டு வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அவருடன் செல்வம் என்பவரும் வீட்டு வேலையைப் பார்த்துக் கொண்டார்.
மனிஷாவிற்கு மனது ரொம்ப இதமாக இருந்தது. இப்போதே தேவ்விடம் தன்னுடைய காதலைப் பற்றிக் கூறிவிடலாம் என்று யோசித்தவள், எதற்கோ ஒரு இரண்டு நாட்கள் காத்திருக்கலாம் என்று அமைதியாக இருந்தாள்.
சீதாலட்சுமி தேவ்வுடைய அறைக்கு வந்து அவனைத் தேடினார். ஆனால் தேவ் அங்கு இல்லை. எங்கு இருப்பான் என்று தேடி, கடைசியாக மாடிக்கு வந்தார். அங்கு தேவ் ஒரு சிகரெட்டைப் பிடித்துக் கொண்டிருந்தான்.
“தேவ் என்ன ஆச்சுப்பா? நீ என்ன புதுசா சிகரெட் எல்லாம் புடிக்கிற. என் மகன் தேவ் இப்படி இருக்க மாட்டேனேப்பா” என்று அழ ஆரம்பித்தார் அன்னை.
“அம்மா, நான் முன்னாடி இருந்த தேவ் இல்லை தான். ஆனால் உங்களுக்கு எப்போதும் உங்கள் மகன் தேவ் தான். மனிதனாக இருந்த என்னை ஒரு மிருகமாக மாற்றி விட்டுச் சென்றாள் அந்த யமுனா… அவளுக்கு நல்ல நேரம் என்று ஒன்று இருந்தால், என் முகத்தில் முழிக்காமல் இருக்க வேண்டும். அதையும் மீறி முழித்தால் என்றால், அவளுக்குக் கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்” என்று சிகரெட்டை டிரேயில் போட்டவன் கீழே சென்று விட்டான்.
தர்ஷியைக் குளிக்க வைத்து விட்டு, சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்த பிரியாவிற்கு, தன் மாமியாரிடம் இருந்து கால் வந்தது. “ஆன் சொல்லுங்க அத்தை, சென்னை போய் மூன்று நாட்கள் ஆகுது, கால் வரவில்லை என்று நினைத்தேன். யமுனாவை பார்த்தீர்களா?” என்று ஆவலாக கேட்டாள்.
“இல்லைம்மா, அதற்காகத் தான் இப்போது உனக்கு கால் செய்தேன். யமுனாவின் விடுதிக்குச் சென்றோம். ஆனால் அவள் ஒரு வருடம் முன்னதாகவே விடுதி மாறி சென்றுவிட்டாளாம். அதைக் கேட்ட பின் உன் மாமாவிற்கு நிம்மதியே இல்லை. அவள் எங்கு சென்றாள்? எப்படி இருக்கிறாள்? என்று ஒன்றும் புரியவில்லை” என்று வருத்தப்பட்டார் விஜயலட்சுமி.
“என்ன அத்தை இப்படி சொல்லிட்டீங்க? வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கலாம்” என்று காலை கட் செய்தவள், திவ்யாவிற்கு கால் செய்தாள்.
“திவ்யா அண்ணி, யமுனா அண்ணி இப்போது தேவ் அண்ணா சேர்த்த ஹாஸ்டலில் இல்லை. எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. யமுனா அண்ணியை கண்டுபிடிக்க எனக்குக் கிடைத்த கடைசி ஆப்ஷன் நீங்க மட்டும் தான். ஏதாவது உங்களுக்கு ஐடியா இருக்கா?” என்று கவலையாகக் கேட்டாள் பிரியா.
“நான் யோசிச்சிட்டு சொல்றேன் பிரியா… எனக்கும் ஒரே குழப்பமாக இருக்கு. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. யமுனாவிற்கு நாம் யாரும் தேவையில்லை. அதனால் தான் நம்மை விட்டு தூரமாகச் செல்ல துடிக்கிறாள்” என்றாள் திவ்யா.
“எனக்கு அப்படித் தோனவில்லை அண்ணி, யமுனா அண்ணி நம்மை நெருங்கிவிட்டார் என்றே தோன்றுகிறது. சரி பார்க்கலாம். நிதின் எப்படி இருக்கிறான்? அவனுக்கு தடுப்பூசி போட்டுவிட்டீர்களா?” என்று கொஞ்ச நேரம் பேசியவள், வேலை இருக்கிறது என்று காலை கட் செய்தாள்.
***
“குல்தீப் அங்கிள், நாங்கள் சென்னைக்கு வந்துவிட்டோம். ஆம், தேவ்வின் வீட்டில் தான் இருக்கிறேன்… சரி அங்கிள், நான் தேவ்விடம் பேசிவிட்டு வருகிறேன்” என்று காலை அணைத்தவன், தேவ்வின் அறைக்குச் சென்றான்.
தன்னுடைய லாப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தேவ் விக்ரமைக் கண்டதும், “வா விக்ரம், வீடெல்லாம் வசதியாக இருக்கிறதா? ஏதாவது பிரச்சனை என்றால் என்கிட்ட சொல்ல தயங்காதே. நான் நாளைக்கு சோழிங்கநல்லூரில் இருக்கும் என்னுடைய MNCயில் சிட்டிங் போடப் போறேன். உன் தொழில் என்ன ஆச்சு?” என்று கேட்டான்.
“அதெல்லாம் நல்லா போகுது தேவ், ஒரு நகைக் கடை ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன். டீலிங் கூட ஆல்மோஸ்ட் ஓவர். இப்போது பிரச்சனை அது இல்லை, குல்தீப் அங்கிள் எனக்கு இப்போது கால் செய்தாரு, என்னையும் உன்னையும் உடனே அவருடைய வீட்டிற்கு வரச் சொன்னாரு” என்றான் விக்ரம்.
“என்ன ஆச்சு விக்ரம்? எனி பிராப்ளம், ஏன் ஒரு மாதிரி பதட்டமாக இருக்க?” என்று கேட்ட தேவ் லாப்டாப்பை மூடி விட்டு எழுந்தான்.
“இல்லை தேவ், குல்தீப் அங்கிள் கொஞ்சம் பதட்டமாக தான் பேசினாரு. அதான்” என்று இழுத்தான்.
“சரி விக்ரம், நம்ம கிளம்புவோம்” என்று கொட்டிவாக்கத்தில் இருக்கும் கிஷோரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.
“விக்ரம், நம்ம சென்னை வந்தது கிஷோருக்கு தெரியும் தானே?” என்று தேவ் சந்தேகமாகக் கேட்டான்.
“எனக்கு அதைப் பற்றி விவரம் தெரியவில்லை தேவ்” என்ற விக்ரமிடம் வித்தியாசமாக ஒரு பார்வையை விட்டு, காரை ஓட்டினான் தேவ்.
திருவான்மியூரில் இருக்கும் அந்த வொர்கிங் விமன்ஸ் ஹாஸ்டலில், யமுனாவிற்கு காலை சோர்வாக விடிந்தது. இனி தேவ்வைப் பற்றி எண்ணங்கள் நம்மிடம் வரவே கூடாது என்று தன்னுள் உறுதி எடுத்தவள், இன்னும் ஓரிரு நாளில் தேவ்வைப் காணப் போவதை பாவம் அறியவில்லை.
அன்று அலுவலகத்திற்குச் சென்ற யமுனா கேசியைத் தேடினாள். ஆனால் அவன் இன்றும் வந்த பாடில்லை. அதனால் தன் வேலையில் மூழ்கி விட்டாள். இரண்டு நாளில் யமுனாவிற்கு பிறந்தநாள் எனப்படும் நிலையில், அவளுக்கு எதிலுமே நாட்டம் இல்லை. அவளுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கும் பொழுது, பிறந்தநாள் எல்லாம் ஏன் வருகிறது என்று கூட நினைத்தாள். ஆனால் கேசி யமுனாவின் பிறந்தநாளை மனதில் பதித்தவன், வேறு ஒரு பிளான் வைத்திருந்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக