மாயம் 24
“மன்னிச்சிடுங்க தேவ், எனக்கு வேலைக்கு வருவதற்கு விருப்பம் இருக்கு. இனி இப்படி கண்டிப்பா நடக்காது” என்ற மனிஷா, “சார், இன்னிக்கு என்ன சாம்பார்? வாசம் தூக்குது, சீதா ஆன்ட்டி காலையிலேயே சமையலை முடிச்சிட்டாங்களா?” என்று பேச்சை வளர்த்தாள். அவளிடம் அனாவசியமாக பேச்சை எப்போதும் வளர்க்காத தேவ், இம்முறையும் அவளுக்கு பதில் அளிக்காமல், தனது லண்டன் பிரான்சுக்குச் சென்று விட்டான்.
ஆதிராவுடன் விளையாடிக் கொண்டிருந்த சீதாலட்சுமியிடம், “ஆன்ட்டி, உங்களுடைய மகனுக்கு இன்னிக்கு என்ன ஆச்சு? சும்மாவே சிடுசிடு, இன்னிக்கு பயங்கர சிடுசிடு” என்று சொல்லி முடிக்கும் போதே, சீதாலட்சுமியின் அழுத முகத்தைக் கவனித்தாள் மனிஷா.
“ஆன்ட்டி என்ன ஆச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று விசாரித்தாள்.
“இன்னிக்கு தேவ்வுடைய அப்பா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அதான் மனசு கஷ்டமா இருக்கு” என்று அழுதார்.
“ஐ அம் சாரி ஆன்ட்டி, நீங்க தப்பா எடுக்கவில்லைன்னா, நான் ஒன்னு கேட்கவா?” என்று தயங்கினாள்.
“கேளும்மா” என்று தன் கண்ணைத் துடைத்துக் கொண்டார் சீதாலட்சுமி.
“அது வந்து… அங்கிள் எப்படி இறந்தார்?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள் மனிஷா.
அவள் கேட்டவுடனே, “தேவ் கிளம்பிட்டானா இல்லை வீட்டில் இருக்கானா?” என்று சீதாலட்சுமி இம்முறை தயங்கினார்.
“ஐய்யோ ஆன்ட்டி, உங்கள் மகன் அப்போவே கிளம்பிவிட்டார். இல்லை என்றால் நான் இவ்வளவு வாய் பேசுவேனா தைரியமா!” என்று சிரித்தாள்.
“எங்க யமுனா வீட்டை விட்டு சென்ற அடுத்த வாரம் தேவ்வுடைய அப்பாவிற்கு அதை நினைத்தே நெஞ்சு வலி வந்திருக்கு போல, அன்று காலையில் எப்போதுமே ஆறு மணிக்குள்ள எழுந்திருப்பவர், அன்றைக்கு மணி ஏழு ஆகியும் எழுந்திருக்கவில்லை. அப்படியே தூக்கத்தில் உயிர் போயிடுச்சு!” என்று அழுதார்.
“ஏன் ஆன்ட்டி? யமுனா… தேவ்வுடைய முன்னாள் மனைவியா?” என்று கேள்வியாகக் கேட்டாள்.
“தேவ்விற்கு எப்போதுமே யமுனா தான் மனைவிம்மா” என்று சீதாலட்சுமி கூறியதில், மனிஷாவிற்கு முகம் சுருங்கி விட்டது.
“ஏன் ஆன்ட்டி, அந்த யமுனா போனதில் தான அங்கிளுக்கு நெஞ்சுவலி வந்து இறந்தாரு. ஆனால் நீங்க அந்த பெண்ணையே எங்கள் யமுனாவென்று சொல்றீங்க?” என்று கடுப்பில் கேட்டாள்.
“யமுனா வீட்டை விட்டு போனதுக்கு அவள் மேல் எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. தேவ் தான் அவசரப்பட்டுவிட்டான். ஆனால், நாங்கள் இதைப் பற்றி தேவ்விடம் கேட்க மாட்டோம். ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். தேவ்விற்கும் யமுனாவிற்கும் ஏதோ கருத்து வேறுபாடு இருக்கிறது. அதான் பிரிந்திருக்கிறார்கள். சீக்கிரமே சேர்ந்து வாழ்வார்கள்” என்று நம்பிக்கையாகச் சொன்னார்.
“மனிஷா ஆன்ட்டி பசிக்குது” என்று ஆதிரா கூறியபின் காலை உணவை எடுத்துட்டு வரச் சென்றாள்.
***
திருவான்மியூரில், டைடல் பார்க்கில் வளர்ந்து நிற்கும், 'கேசி' எனப்படும் ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த யமுனாவிற்கு, அவளுடைய லேண்ட்லைன் எக்ஸ்டென்ஷன் நம்பருக்கு கால் வந்தது.
“ஹலோ யமுனா, கேசி ஹியர். கம் டு மை ரூம்” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் கேசி.
சலிப்பாகத் தன் இடத்தை விட்டு கேசியின் அறைக்குச் சென்ற யமுனாவிடம், “யமுனா, இன்னும் எவ்வளவு நாள் என்னை காத்திருக்க வைக்கப் போற?” என்று கேட்ட கேசியிடம், “கேசி நீங்க இந்த கம்பெனியுடைய சிஇஓ. ஒரு எம்பலாயி கிட்ட இப்படி நடந்துக்கிறது ரொம்ப தப்பு. உங்களுக்கு இந்த சொசைட்டியில் நல்ல நேம் இருக்கு. ப்ளீஸ் அதைக் கெடுத்துடாதீங்க” என்றாள் யமுனா.
“என்ன யமுனா, உன்னை காதலிக்கிறேன். கல்யாணம் செய்துக்க தானே கேட்கிறேன். ஆனால் நீ என்னை ஒரு கெட்டவன் ரேஞ்சிற்குப் பேசுறியே” என்று சிரித்தான் கேசி.
“கேசி ப்ளிஸ், எனக்கு இதில் விருப்பம் இல்லை. இதைப் பற்றி பேசத் தான் அழைத்தீர்களா?” என்று சலிப்பாகக் கேட்டாள் யமுனா.
“ம்ம் உன் மனதில் வேற யாராவது இருக்காங்களா யமுனா?” என்று கேசி கேட்ட நொடி, அவளின் கண் முன்னால் தேவ் வந்து சென்று கொண்டிருந்தான். அதை நினைத்து யமுனாவிற்கே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் அப்படியே சிலையாக நின்றிருந்தவளை தட்டி எழுப்பியது கேசியின் குரல்.
“ஏய் யமுனா! இப்போ ஏன் இவ்வளவு ஷாக் ஆகி அசையாமல் நிக்குற? சரி நீ கிளம்பு, நாம இன்னொரு நாள் பேசிக்கலாம்” என்று அவன் கூறிய பின் யமுனாவும், ரொம்ப நல்லது என்று அவளுடைய கேபினிற்குச் சென்று விட்டாள்.
கேபினில் வந்து அமர்ந்தவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. தேவ்வைப் பிரிந்து இரண்டு வருடங்கள் ஆனது. அவன் அவளை சென்னையில் விட்டுச் சென்ற அடுத்த நாளே, தேவ்வின் மேல் உள்ள வெறுப்பில் வேறு ஒரு சிம் கார்டை வாங்கிய யமுனா, அனைத்து நம்பரையும் இழந்து விட்டாள். தன் தாய்மாமா சேகர் நம்பரைக் கூட இழந்து விட்டாள்.
அடுத்த ஒரு மாதத்தில் கேசி ஐடி நிறுவனத்தில் நேர்முகத்தேர்வில் தேர்வாகி வேலைக்குச் சேர்ந்து, இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது. இந்த இரண்டு வருடங்களில், யாரும் யமுனாவிடம் அவளின் சொந்த விஷயங்களைப் பற்றிப் கேட்டதில்லை. அவர்கள் கேட்டதில்லை என்பதை விட, யமுனா யாரிடமும் நட்பாக பழகவில்லை.
விடுதி சென்றால் சாப்பிடுவாள், தூங்குவாள், தொலைக்காட்சி பார்ப்பாள். வார இறுதியில் துணிகளைத் துவைத்து முடித்துவிட்டு, புத்தகம் படிப்பாள். ஷாப்பிங் சென்றால் கூட தனியாகத் தான் செல்வாள். பக்கத்து ரூம் பெண்ணின் மொபைல் நம்பரை மட்டும் வாங்கி வைத்தவள், யாரிடமும் நட்பு பாராட்டாமல் இருந்தாள்.
யமுனாவைப் பொறுத்தவரை, திவ்யாவிடம் நெருங்கிப் பழகியதால் தான் அவளுடைய வாழ்க்கையே கேள்விக்குறி ஆனது. அதனால் யமுனா தனியாகவே இருந்தாள். மனதில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல், அந்த சோகத்தைத் தன்னுள் அடக்கி வைத்து தன்னுடைய வேலையில் கவனத்தைச் செலுத்திவந்தவளிடம், கேசி இரண்டு மாதங்களுக்கு முன், யமுனாவை மணம் புரியக் கேட்டான்.
தொடர்ந்து மறுத்தவளிடம், இன்று உன் மனதில் வேறு யாராவது இருக்கிறார்களா? என்று கேசி கேட்டதற்கு, ‘ஏன்? எப்படி? நம் மனதில் தேவ் தோன்றினான்?’ என்று குழம்பியவளுக்கு தலைவலித்தது. அதனால் கஃபேக்குச் சென்று காஃபி குடித்துக் கொண்டு வரலாம் என்று எழுந்தாள்.
***
யமுனாவை சென்னையில் விட்டுவிட்டு டெல்லிக்கு வந்த தேவ், யமுனாவை அடியோடு வெறுத்தான். யமுனாவை விலகிய தேவ், அவள் இன்னொருவனை திருமணம் செய்ய வேண்டும் என்று, முன்னால் கூறிய அந்த வார்த்தையை மனதிலேயே வைத்தவன், அவளிடம் வஞ்சத்தைக் காட்டினான்.
ஜெயக்குமார் இறந்த பின், தன் அன்னை இங்கே இருந்தால் மன உளைச்சலுக்கு ஆளாவார் என்று, தன்னோடு அன்னையையும் ஆதிராவையும் லண்டனுக்கு அழைத்துச் சென்றான். குணா மற்றும் திவ்யா, டெல்லியிலேயே இருந்து வீட்டைப் பொறுப்பாக பார்த்துக் கொண்டனர்.
திவாகர் மற்றும் பிரியா சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்ற பின், சேகர், யமுனாவின் நிலையை நினைத்து வருந்தி, அவளுடைய செல்லுக்கு கால் செய்து கொண்டிருந்தார். ஆனால், அந்த சிம் கார்டு உபயோகத்தில் இல்லை என்பதைத் தெரிந்து, மிகுந்த மன உளைச்சல் ஆனார்.
அத்தகைய சமயத்தில் தான் விஜயலட்சுமி சேகரிடம் வந்து, “ஏங்க நீங்க நிம்மதியா இல்லை என்று எனக்குத் தெரியும். நம்மளால தான் இப்போது யமுனாவின் வாழ்க்கை இப்படி ஆனது. யமுனாவின் நம்பருக்கு நானும் கால் செய்து பார்த்தேன். அவளுடைய சிம்கார்ட்டு உபயோகத்தில் இல்லை. இப்போது தான் நம்முடைய வீட்டின் பத்திரம் கிடைத்துவிட்டதே. நாம் பேசாமல் சென்னை போயிடலாம், யமுனாவை தேடலாம்” என்றாள்.
சேகருக்கும் யமுனாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. “பேசாமல் தேவ்விடம் கேட்டால் தெரியுமே, அவர் தானே யமுனாவை விட்டுவிட்டு வந்தார். அதனால் பிரியாவிடம் சொல்லி அவள் அண்ணனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என்ற சேகர், பிரியாவிடம் இதைப் பற்றிக் கூறினார்.
தன் அண்ணனிடம் எப்படிக் கேட்பது என்று யோசித்த பிரியா, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, லண்டனில் இருக்கும் தன் அண்ணனுக்கு கால் செய்தாள்.
“அண்ணா… யமுனாவுடைய விடுதி முகவரியை என்னுடைய மாமனார், மாமியார் கேட்கிறாங்க. அவங்க சென்னை வீட்டிற்கு போய்டலாம்னு இருக்காங்க…” என்று இழுத்தாள்.
“பிரியா நீ இப்போ குழந்தை உண்டாகி இருக்க, இந்நேரம் உன் மாமியார் துணை இல்லாமல் எப்படி இருப்ப? இப்போ அவங்க மருமகளை விட அந்த யமுனா தான் முக்கியமா?” என்று கடுப்பானான் தேவ்.
“அண்ணா, எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை. நான் கேர் டேக்கர் வெச்சு சமாளிச்சிருவேன்” என்ற தங்கையிடம், “உன் மாமியார் இருக்கும் போது எதற்கு கேர் டேக்கர் பிரியா? நம்முடைய அன்னை அளவுக்கு அவங்களுக்கு வயது ஆகவில்லை. அவங்களுக்குக் குழந்தையைப் பார்க்க உடம்பில் தெம்பு இருக்கு. அதனால் முதலில் உன்னை பாசமாகப் பார்க்கச் சொல். குழந்தை வந்த பின், குழந்தையைப் பார்க்கச் சொல். அதற்கு அப்புறம் அவர்களுக்கு யமுனாவின் மேல் கரிசனம் வரட்டும்” என்றான் தீர்மானமாக.
தேவ் கூறிய அனைத்தையும் கேட்ட பிரியா, சொல்வதறியாது திகைத்தாள். “என்ன பிரியா நீ சொல்றியா இல்லை, நான் உன் மாமனார், மாமியாரிடம் பேசணுமா?” என்று கேட்டான்.
“இல்லை அண்ணா, நானே பேசிக்கிறேன்” என்று வைத்தவள், தன் மனதில் சங்கடத்துடன் தன் மாமனார், மாமியாரிடம், தேவ் கூறியதைக் கூறினாள். அவர்களும் வேறு வழியின்றி அமைதியாக ஒப்புக்கொண்டனர்.
இப்படியே இரண்டு வருடங்கள் கடந்த பின், பிரியாவே தன் மாமனார், மாமியாரிடம் வந்து, தன் ஒரு வயது மகள் தர்ஷியைக் காட்டி, “இவளுக்கு தான் வயது ஒன்று ஆகி விட்டதே அத்தை, நீங்கள் சென்னைக்கு கிளம்புங்கள். நான் இன்று அண்ணனிடம் பேசி யமுனாவின் விடுதி முகவரியை வாங்கிக் கொடுக்கிறேன்” என்று வாக்குக் கொடுத்து விட்டு, தன் அண்ணனுக்கு கால் செய்தாள் பிரியா.
தன் தந்தை இறந்து இரண்டு வருடங்கள் ஆகிய இன்று, தேவ்விற்கு யமுனாவின் மீது தான் கோபம் வந்தது. தன் தந்தையின் மரணத்திற்கும் யமுனாவையே காரணம் காட்டினான் தேவ். அப்போது தான் பிரியா கால் செய்தாள்.
“அண்ணா, இன்னிக்கு அப்பா தவறி இரண்டு வருடங்கள் ஆகுது. குணா அண்ணன் திதி கொடுத்தார்…” என்று இழுத்தாள். “ம்ம்” என்று தேவ் விரக்தியாகக் கூறினான்.
“அண்ணா, அது வந்து… தர்ஷிக்கு ஒரு வயது ஆகி விட்டது. இனியாவது அத்தை, மாமா சென்னை கிளம்பட்டும். யமுனாவுடைய விடுதி விலாசத்தைக் கொடுத்தால், அவர்களுக்கு யமுனாவைத் தேட வசதியாக இருக்கும்” என்று பயத்துடன் ஒரு வழியாகக் கூறி முடித்தாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக