மாயம் 20

 

மாயம் 20




"இதைப் பற்றி என்கிட்ட பேசாதீங்க பிரியா ப்ளீஸ்" என்று பேச்சை மாற்றினாள் யமுனா. அன்று வந்த அதே துர்க்கை அம்மன் கோவிலுக்கு வந்தார்கள்.




"அண்ணி நீங்க இருங்க நான் விளக்கு ஏத்திட்டு வந்திடறேன்" என்று விளக்கேற்ற சென்றுவிட்டாள் பிரியா.




கடைசி முறை இந்த கோவிலுக்கு வந்த போது திவ்யா சொன்னதை நினைத்துப் பார்த்தாள் கணவனின் ஆரோக்கியத்திற்காக அவரின் நலனுக்காக துர்க்கை அம்மனை வேண்டி விளக்கேற்றினால் நல்லது என்பதை நினைத்துப் பார்த்தவள் பக்கத்தில் இருந்த பூஜை சாமான் கடையில் விளக்கை ஹிந்தியில் கேட்டு வாங்கியவள் நேராக அம்மன் சன்னதியில் விளக்கேற்றி வேண்ட ஆரம்பித்தாள்.




"அம்மா துர்க்கை தாயே தேவ் கொஞ்ச நாளா என்கிட்ட விலகி விலகிப் போறாரு... எனக்கு முதல்ல அவர் அப்படி பண்ணது நிம்மதியாக இருந்தது ஆனா இப்போ என்னால தேவ்வை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவரின் மேல் அக்கறை காட்டாமல் இருக்க முடியவில்லை அவரின் நெருக்கத்தை விட அவரின் ஒதுக்கம் என்னை வெகுவாக பாதிக்கிறது அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும்" என்று வேண்டினாள்.




சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்குச் செல்கையில் பிரியா யமுனாவின் முகத்தைக் கவனித்தாள். அதில் ஏதோ மாற்றம் இருந்தது. 'முன்னாடி இருந்தது போல் யமுனாவின் முகத்தில் சிரிப்பு இல்லை முன்னாடி போல் பேச்சும் இல்லை இதில் ஏதோ இருக்கிறது' என்று யோசித்த பிரியா இதைப் பற்றி

திவ்யாவிடம் கேட்டால் தெரியும் என்று விட்டுவிட்டாள்.




இருவரும் வீட்டிற்கு வரும் போதே தேவ்வின் கார் வீட்டிற்கு வெளியே இருந்தது.இவர்கள் உள்ளே வருவதைப் பார்த்த சீதாலட்சுமி, "யமுனா, தேவ் இன்று இரவு லண்டன் கிளம்புறானாம் மா, ஏதோ ஆபிஸ் வேலையாம் உன்னை உடனே அவன் அறைக்கு வரச் சொன்னான்" என்று மேலே அனுப்பினார்.




அங்கு தேவ் அவனின் துணிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தவன் யமுனா வந்தவுடன், "யமுனா இன்னிக்கு நைட் லண்டன் கிளம்புறேன் வீட்ல இருந்து கரெக்டா பத்து மணிக்கு கிளம்பிடுவேன். அதுக்குள்ள ஆதிராவைத் தூங்க வெச்சிடு அவள் முழிச்சிருந்தா அழுவாள்" என்றான்.




"நீங்க அங்க எங்க தங்குவீங்க? எப்படி சாப்பிடுவீங்க?" என்று தயங்கியவாறு கேட்டாள்.




"அங்க நம்மளோட சொந்த வீடு இருக்கு. அங்கே என் நண்பனும் அவன் குடும்பமும் இருக்காங்க அங்க இந்தியன் ஃபுட்ஸ் கிடைக்கும் அதனால பிரச்சனை இல்லை. நான் வீட்டுல இல்லாத சமயம் நீ தான் வீட்டை பொறுப்பா பாத்துக்கணும் குணா கிட்டயும் சொல்லிருக்கேன்" என்று தன் பெட்டியை மூடினான்.




"நீங்க வருவதற்கு எவ்வளவு நாள் ஆகும்?" என்று தயங்கி தயங்கிக் கேட்டாள்.




"ஏன் யமுனா இந்த வீட்டுல இருந்து தப்பிச்சுப் போக பிளான் பண்ணிட்டியா? என்ன அதுக்காக என் மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்க வேண்டாம் இப்போ என் அறையை விட்டு கொஞ்சம் வெளிய போ" என்று காட்டமாகக் கூறினான்.




தேவ் சொன்ன வார்த்தைகளில் யமுனாவிற்கு அழுகை பயங்கரமாக வந்தது. அவன் முன் நாம் அழக்கூடாது என்று வெளியேச் சென்று விட்டாள்.




இரவு தேவ் வீட்டில் இருந்து கிளம்பும் போது யமுனா வெளியே வரவில்லை இது அவன் எதிர்பார்த்தது தான் என்றாலும் யமுனா தன்னிடம் கொஞ்ச நாள் நடந்துக்கொள்வதை வித்தியாசமாக உணர்ந்த தேவ் அவள் தன்னிடம் இருந்து சீக்கிரம் விடுபட இப்படி பாசாங்காக இருக்கிறாள் என்றே நினைத்தான்.




இரவு முழுவதும் தன் அறையில் அழுதுக்கொண்டிருந்த யமுனா தேவ் தன்னை இப்படி நினைப்பது மனது வலிக்க ஆரம்பித்தது. 'முன்னாடி தன் மேல் முரட்டு தனமாக இருந்த தேவ் இப்போது தன்னை கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஏன் தன்னால் ஏத்துக்கொள்ள முடியவில்லை இதற்குப் பேர் என்ன?' என்று நீண்ட நேரம் யோசித்தவளுக்கு தூக்கம் வர மறுத்தது.




தேவ்வை ஏர்ப்போர்ட்டிற்கு விடச் சென்ற குணாவிடம், "யமுனாவை எங்கும் தனியாக அனுப்பாதே குணா, அவள் டெல்லிக்கு புதுசு ஹிந்தியும் அவளுக்கு பெரிதாகத் தெரியாது குடும்பத்தைப் பார்த்துக்கொள்" என்று கூறிவிட்டு செக் இன் செய்ய சென்றுவிட்டான்.




இரவு தாமதமாக தூங்கிய காரணத்தினால் யமுனா விழிக்க ரொம்ப நேரம் ஆனது. அவள் எழுந்திருக்கும் போதே ஆதிராவை பிரியா குளிப்பாட்டி ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள்.




"சாரி பிரியா நேற்று இரவு தூங்க தாமதம் ஆயிடுச்சு அதனால் தான் சீக்கிரம் எழுந்திருக்க முடியல" என்று மன்னிப்புக் கேட்டாள்.




"ஐய்யோ அண்ணி, எதுக்கு இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்குறீங்க உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைத்தேன் ஒரு நிமிஷம் இதோ வந்திடறேன்" என்று சாப்பாடு கொடுத்து முடித்து விட்டு தன் கையை கழுவியவள் இரண்டு பத்திரங்களை எடுத்துக் கொண்டு வந்தாள்.




"என்ன பிரியா இது எல்லாம்..?" என்று சந்தேகமாகக் கேட்டாள்.




"நேற்று இரவு அண்ணா என்கிட்ட பேசுனாரு. 'பிரியா நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நான் யமுனாவை உயிருக்கு உயிராக விரும்புகிறேன். இது எப்போ எப்படினுலாம் கேட்காத யமுனா உன்னை விட திவ்யாவை விட சின்னப் பெண் ஆனால் அவளுடைய தைரியம் துணிவு உங்க யாருக்குமே இல்லை. எனக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஓரு குழந்தை இருக்குனு தெரிஞ்சும் அவள் ஆதிராவின் மேல் பாசமாக இருந்தாள். ஆதிரா என் குழந்தை இல்லை என்று தெரிந்தும் பாசமாக இருக்கிறாள். இதற்கு மேல் அவளைக் காதலிக்காமல் இருந்தால் நான் ஒரு முட்டாள் இதில் இரண்டு பத்திரங்கள் இருக்கிறது. ஒன்று யமுனாவின் பேரில் நம்முடைய மருத்துவமனையை எழுதி வைத்திருக்கிறது இன்னொன்று நம்முடைய கல்லுரியும் அவளுடைய பேரில் எழுதி வைத்திருக்கிறேன். இந்த விஷயம் யமுனாவைத் தவிர மற்ற அனைவருக்கும் தெரியும் நீ இந்த வீட்டுப் பெண் உனக்கும் இது தெரிய வேண்டும் இது இப்போது உன்னிடம் இருக்கட்டும் நான் லண்டன் போய்ட்டு வந்த உடனே வாங்கிக்கறேன்' என்று என்னிடம் இதைக் கொடுத்தார் அண்ணி."




"அண்ணா உங்களை உயிருக்கு உயிராக நேசிக்கிறார். நீங்களும் நேசிக்க வேண்டும் என்று சொல்ல என்னால் முடியாது ஆனால் எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து தேவ் அண்ணாவிற்கு எந்தப் பெண்ணின் மீதும் இத்தகையான உணர்ச்சிகள் வந்ததில்லை... நீங்கள் தான் அந்தப் பெண்" என்று ஆதிராவைத் தூக்கிக் கொண்டு வெளியில் சென்றாள் பிரியா.




தன்னை தேவ் காதலிப்பதை அறிந்த யமுனா அதைப்பற்றி யோசிக்க விரும்பாமல் இருந்தாள். தேவ் வீட்டில் இல்லாமல் யமுனாவிற்கு நேரம் கடப்பதே கஷ்டமாக இருந்தது. அவன் இருந்தாலுமே அவளும் அவனும் பேசிக்கொள்வதில்லை ஆனாலும் தேவ் வீட்டில் இருந்தால் ஒரு தனி புத்துணர்ச்சியாக இருக்கும் என்பதை யமுனா உணர்ந்தாள் இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தது.




அன்று காலை சீதாலட்சுமியும் ஜெயக்குமாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயம் தேவ்விடம் இருந்து ஒவர்சீஸ் கால் வந்தது. ஜெயக்குமாரின் நம்பருக்கு கால் செய்த தேவ் தான் லண்டன் வந்தடைந்துவிட்டு இப்போது அலுவலகத்தில் இருப்பதாய்க் கூறிவிட்டு தன் தாயிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டு கால்லை துண்டித்தான்.




"ஏன் நம்ம கிட்ட ஒரு வார்த்தை பேசுனா இவருக்கு வாய் வலிக்கவா போகுது?' என்று மனதில் அவனைத் திட்டினாள். யமுனாவிற்கு தேவ்வை பிடித்தது ஆனால் அது காதலா என்று கேட்டால் இல்லை என்றே நினைத்தாள்.




'ஒருவேளை நம்மை பிடிக்காதவர் கூட இரண்டு மாசம் இருந்ததால் கூட நமக்கு இப்படி எல்லாம் உணர்ச்சி தோன்றுகிறதோ' என்று கூட நினைத்தவள் இப்போதைக்கு இதைப் பற்றி நினைக்க வேண்டாம் என்று நினைத்தாள்.





அந்த ஞாயிற்றுக்கிழமை பாயலின் கல்யாணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தாள் பிரியா. மாநிறத்தில் இருக்கும் பிரியா அவளுடைய அத்தை பனிமலரின் ஜாடை தேவ் தன் தந்தையின் ஜாடை என்பதால் அதே கம்பீரம் அதே நிமிர்வு அதே துணிச்சல் அதை விட உயரம் மற்றும் அழகு குணா தன் தாயின் ஜாடையில் இருப்பான். பிரியா பொதுவாகவே தன்னை அழகுப் படுத்திக் கொள்ளமாட்டாள். அன்று நடப்பது பஞ்சாபி கல்யாணம் ஆனால் பிரியா ஒரு பட்டுப் புடவையை உடுத்தி இருந்தாள்.




அவளைக் கண்ட யமுனா, "பிரியா பஞ்சாபி கல்யாணத்திற்கு போறேன்னு சொன்னீங்க ஆனா பட்டுப் புடவை உடுத்தி இருக்கீங்க ஒரு நிமிஷம் இருங்க" என்று தன் அறைக்குச் சென்று அந்த அழகிய பட்டியாலா சுடிதாரை எடுத்துக் கொண்டு வந்தாள்.




"பிரியா இந்த சுடிதாரை உடுத்திக்கோங்க உங்களுக்கு அழகாக இருக்கும். அப்பறம் இந்த ஜடை லாம் வேண்டாமே நீங்க முதல்ல இதை உடுத்திட்டு வாங்க நான் உங்களுக்கு தலை வாரி விடுறேன்" என்று அந்த மஞ்சள் நிற பட்டியாலா சுடிதாரைக் கொடுத்தாள்.




அதை அணிந்து வந்த பிரியாவைப் பார்த்து, "சூப்பர்" என்று கூறி அவளை அமர வைத்து அவளுக்கு ஓபன் ஹேர் ஸ்டைல் பண்ணிவிட்டாள்.




"பிரியா இப்போ பார்க்க செம அழகா இருக்கீங்க. இப்போ தான் ஒரு டெல்லி பொண்ணு மாதிரி இருக்கீங்க தினமும் இந்த மாதிரியே அழகா ட்ரெஸ் பண்ணுங்க" என்றாள் யமுனா.




"ஐய்யோ அண்ணி உங்க அளவுக்கு லாம் அழகு இல்லை" என்று வெட்கப்பட்டாள் பிரியா.




தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு பிரியா மத்திய டெல்லியில் இருக்கும் அந்த கல்யாணத்திற்குச் சென்றாள். அந்த கல்யாண மண்டபமே கோலாகலமாக இருந்தது. பிரியாவின் கல்லூரி நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். அவர்களைப் பார்த்து சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.




பிரியாவிற்கு திவாகருடன் கல்யாணம் ஆன விஷயம் யாருக்கும் தெரியாது பிரியா இன்னும் மணம் ஆகாதவள் என்றே நினைத்துக் கொண்டனர் அனைவரும். அந்த கல்யாணத்திற்கு திவாகரும் அழைக்கப்பட்டிருந்தான். இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பு என்பதால் அவனும் வந்திருந்தான்.




திவாகர் வந்ததை முதலில் பார்த்த பிரியா திவாகர் தன்னைக் கண்டால் அவனுக்கு எரிச்சல் வரும் என்று மறைவாகச் சென்றாள். தன் நண்பர்களுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்த திவாகரிடம், "ஹேய் திவாகர் எனக்கொரு ஹெல்ப் பண்ணு டூட்... பிரியா வந்திருக்கா அவள் உங்களுடைய வகுப்புலேயே உன்கிட்ட தான் நல்லா பேசுவா நான் அவளை காதலிக்கிறேன் எப்படியாவது ஒரு இன்ட்ரோ கொடு" என்று அவர்களுடைய சீனியர் மனீஷ் கேட்டான்.




இதைக் கேட்ட திவாகருக்கு பத்திக்கொண்டு வந்தது. "பிரியா வந்திருக்காளா எங்கே?" என்று தேடியவன் அங்கே பிரியா பாயலின் அம்மாவோடு பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தான். அவளைப் பார்த்த நொடி ஸ்தம்பித்து நின்றான் திவாகர். அவளை இவ்வளவு அழகாக அவன் இதுவரை கண்டதில்லை ஒருவேளை இவ்வளவு நாள் தன்னுடைய கண்களில் தான் ஏதோ கோளாறு இருக்கிறதோ என்பதை உணர்ந்து அவள் பக்கத்தில் சென்றான்.




அவன் பின்னாடியேச் சென்ற மனீஷ், "ஹேய் பிரியா" என்று கத்திக்கொண்டே அவளை நோக்கிச் சென்றாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 2

மாயம் 8