மாயம் 18
"ஹேய் போய் உன் கணவருக்கு நன்றி சொல்லு உனக்காக அவர் என்ன வாங்கிட்டு வந்திருக்காருனு வெளியே போய் பாரு..." என்ற யமுனா குணாவிடம் செய்கை செய்தாள். திவ்யாவின் கண்ணை மூடிய குணா அவளை பொறுமையாக அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
"குணா என்ன வாங்கிருக்கீங்க? என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியலை ப்ளீஸ் சொல்லுங்க" என்று கேட்ட திவ்யாவை கார் பார்க்கிங்கிற்கு அழைத்துச் சென்றான் குணா. பின் கண்ணைத் திறந்து விட்டான் குணா.
"என்ன குணா கார் பார்க்கிங் கூட்டிட்டு வந்திருக்கீங்க?" என்று யோசனையாகக் கூறினாள். தேவ்வின் வீட்டில் மொத்தம் ஐந்து கார்கள் இருக்கும் எல்லாமே உலகத் தரம் வாய்ந்த பிரான்ட் கார்கள். அதனால் திவ்யாவால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
"உனக்கு ரொம்ப பிடிச்ச பென்ஸ் அங்க புதுசா நிக்குது பாரு. அது உனக்காக நான் வாங்கிய கார்" என்று அங்கு கறுப்பு நிறத்தில் கம்பீரமாக நின்ற புதிய காரைக் காட்டினான் குணா.
"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு குணா சொல்ல வார்த்தைகளே இல்லை" என்று காரைத் தொட்டுப் பார்த்தாள். இதை தூரத்தில் பால்கனியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவ் ஒரு நிமிடம் யமுனாவைப் பார்த்தான்.
யமுனாவுமே குணாவுடன் நிற்கும் போது ஏதேர்ச்சையாக தேவ் நிற்பதைக் கண்டவள்,
'நமக்கு எப்போ தேவ் இந்த மாதிரி கிஃப்ட் கொடுப்பாரு?' என்று யோசித்தவளின் மனம் அவளையேத் திட்டியது.
திவ்யாவின் பக்கத்தில் சென்ற குணா, "குழந்தை பிறந்து மூன்று மாதம் கழித்து தான் இந்த காரை ஓட்டணும் திவ்யா அதுவரைக்கும் பிக் நோ" என்றான்.
"கண்டிப்பாக குணா" என்று அவனைக் கட்டிக் கொண்டு அவனுடைய கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் திவ்யா. இதைப் பார்த்த யமுனாவிற்கு சங்கடமானது அவளுக்கே தெரியாமல் அந்த காட்சியைப் பார்த்தப் பின் தேவ்வைப் பார்த்தாள். ஆனால் இம்முறை தேவ் அங்கு இல்லை
யமுனாவிற்கு ஏனோ சொல்ல முடியாத வருத்தம் அவளுக்கே அது என்ன என்று தெரியவில்லை.
தேவ்வின் அறைக்குக் காபி கொடுக்கச் சென்றாள் யமுனா. அங்கு தேவ் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தான். "உங்களுக்கு காஃபி" என்று யமுனா தேவ்வின் முன்
காஃபியை நீட்டினாள். அவளைப் பார்க்காமலே தன் டையை சரி செய்தவன்,
"நான் காஃபி குடிச்சிட்டேன் கமலாம்மா குடுத்துட்டாங்க. இனிமேல் நீ ஆதிராவை மட்டும் கவனிச்சா போதும் யமுனா, காஃபி சாப்பாடு வைக்குறது எல்லாம் நீ பண்ண வேண்டாம்" என்று தன் அலுவலக பேக்கை எடுத்துக் கொண்டு கீழே வந்தான்.
அவன் பின்னாடியே சென்ற யமுனா, "அத்தை, மாமா
பிரியாவை அழைக்க போயிருக்காங்க சாப்பாடு நான் எடுத்து வைக்கவா?" என்று கேட்டாள்.
"கமலாம்மா சாப்பாடு எடுத்து வைங்க" என்று அமர்ந்தான். யமுனாவிற்கு மூக்கு உடைந்தது போல் ஆனது.
'ஒருவேளை நம்மளை அவன் பின்னாடி அலைய வைக்க இப்படி புது பிளான் பண்றானோ?' என்று நினைத்தவள், 'நீ என்ன பண்ணாலும் நான் உன் கிட்ட வர மாட்டேன்' என்று மனதில் சபதம் எடுத்தவள் ஆதிராவை குளிக்க வைக்கச் சென்றாள்.
பிரியா அவள் துணிகளை பேக் செய்துக் கொண்டிருந்தாள். ஒரு இன்டர்வியூவிற்கு சென்று வந்த திவாகருக்கு வேலை கிடைத்து விட்டது. சுமார் இரண்டு மாதங்கள் வேலை இல்லாமல் திண்டாடிய திவாகர் தேவ்வைப் பார்க்க நினைத்தான். ஏனெனில் அவனால் தான் தன் வேலை போனது அதே தேவ்வின் முன் தனக்கு வேலை கிடைத்து விட்டது என கம்பீரமாகக கூற நினைத்தான். ஆனால் அவனுக்குத் தெரியவில்லை தேவ்வினால் தான் அந்த வேலையே கிடைத்தது என்று தேவ் தான் அவனுடைய நண்பனுக்கு கால் செய்து அவனுடைய கம்பெனியில் இருந்து இன்டர்வியூக்கு அழைக்க சொல்லி வேலை கிடைக்க வைத்தான்.
காலையில் சாப்பிட்டு முடித்த தேவ் வேலைக்குக் கிளம்பாமல் சோஃபாவில் நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தான். ஆதிராவை குளிக்க வைத்த பின் அவளுக்கு பவுடர் போட்டு விட்டு உடை போட்டு விட்ட யமுனா அவளை கீழே அழைத்துக் கொண்டு வந்த போது தேவ் அங்கு இருப்பதைக் கண்டாள்.
'இவன் ஏன் இன்னும் அலுவலகம் கிளம்பாமல் இருக்கான்?' என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
"தேவ் அத்தான் இன்னும் அரைமணி நேரம் ப்ளீஸ்" என்று வந்த மாயா குளிக்கச் சென்றாள்.
தேவ்வின் அலுவலகத்திற்குச் சென்ற திவாகர் அவன் அங்கு இல்லை என்றவுடன் நேராக வீட்டிற்கே வந்து விட்டான். திவாகரை முதலில் பார்த்த யமுனா, தேவ் அங்கு இருப்பதால் அமைதியாய் இருந்தாள். அவனை முதலில் வரவேற்றது குணா தான்.
"வாங்க மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க? தங்கச்சி எப்படி இருக்கா? உட்காருங்க" என்றான். இதற்கு மேல் திவாகரிடம் பேசாமல் இருந்தால் நல்லா இருக்காது என்று நினைத்த யமுனா அவனை வரவேற்று காஃபி எடுத்துக் கொண்டு வந்தாள்.
"அப்பறம் திவாகர் என்ன இங்க வந்திருக்க..? அம்மா அப்பா உங்க வீட்டிற்கு தான் இப்போ போயிருக்காங்க" என்று தன் தாடையைத் தடவி யோசிக்கும் பாவனையில் கேட்டான் தேவ்.
"நான் உங்களைப் பார்க்கத் தான் வந்தேன்... இந்த லெட்டர் என்னன்னு தெரியுமா? என்னுடைய வேலை அப்பாயின்மெண்ட் லெட்டர் பணத்தால் நீங்க எல்லாத்தையும் விலைக்கு வாங்கிடலாம். ஆனால் என் திறமையை யாராலும் விலைக்கு வாங்க முடியாது... மாசம் ஒரு லட்சம் சம்பளம் இதை உங்க கிட்ட சொல்லிட்டு போக தான் வந்தேன்" என்றான் திவாகர் பெருமையோடு.
"திவாகர்... தேவ் அண்ணாவால் தான்" என்று சொல்ல வாயெடுத்த குணாவின் முன் தன் கைகளைக் காட்டி அடக்கிய தேவ், "வாழ்த்துக்கள் திவாகர்... வே டூ கோ" என்றவன்,
"அத்தான் நான் ரெடி போலாமா?" என்று கேட்ட மாயாவிடம்,
"போகலாம்" என்ற தேவ்
குணாவிடம் திரும்பி, "குணா நான் இன்னிக்கு ஆபிஸ் வர லேட் ஆகும் அதனால் அந்த சீனா கிளைன்டை நீ டீல் பண்ணிக்கோ" என்றவன் யமுனாவிடம், "திவாகருக்கு சாப்பாடு கொடுத்திடு யமுனா" என்றவன், "ஐ நீட் டூ கோ சாப்பிட்டுக் கிளம்பு" என்று திவாகரிடம் கூறிவிட்டு மாயாவை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான் தேவ்.
"அத்தான் சாப்பிட வாங்க" என்று அழைத்தாள் யமுனா. திவாகரும் யமுனா சாப்பிடக் கூப்பிட்டதால் சாப்பிடச் சென்றான். சாப்பிட்டுக்கொண்டே இருந்த திவாகர், "யமுனா சாரி என்னால தான் உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு நான் உன்னை காதலிச்சதை மறைச்சிருந்தா உன் வாழ்க்கையாவது தப்பிச்சிருக்கும் இப்போ இரண்டு பேரோட வாழ்க்கையும் குழிக்குள்ள போயிடுச்சு... அந்த தேவ் உன் கண் முன்னாடியே இன்னொருத்தியை கூட்டிட்டு சுத்துறான்" என்றான் திவாகர்.
"அத்தான் போதும் நிறுத்து தேவ்வை எனக்கு பிடிக்காது தான்... ஆனா அவர் நெருப்பு மாதிரி தன் பொண்டாட்டியைத் தவிர எந்தப் பெண்ணையும் பார்க்க மாட்டாரு. இனிமேல் அவரைப் பற்றி அவதூறாக பேச வேண்டாம்" என்று தீர்மானமாக சொன்ன யமுனாவை விசித்தரமாகப் பார்த்தான் திவாகர்.
குணாவிற்குத் திவ்யா சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்ததால் அவர்களும் யமுனா பேசியதைக் கேட்டு வியந்தனர். முதல் தடவை யமுனா தேவிற்காகக் கோபப்பட்டாள் என்கிற விஷயம் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது இவர்களுக்கு.
சாப்பாட்டு முடித்த பின் திவாகர் கிளம்ப தயாரானான். "அத்தான் ஒரு நிமிஷம் எனக்கு தெரியும் பிரியாவை நீங்கள் விருப்பம் இல்லாமல் தான் கல்யாணம் பண்ணீங்க... ஆனா ஒரு விஷயம் புரிஞ்சிக்கோங்க அத்தான்... பிரியா ரொம்ப நல்லவங்க ஆதிராவை அவ்வளவு பொறுப்பா வளர்த்துருக்காங்க. அதே மாதிரி உங்களை உயிருக்கு உயிராக காதலிக்குறாங்க அழகுன்றது முகத்துல இல்லை அத்தான் மனசுல இருக்கு அவங்களை மிஸ் பண்ணிடாதீங்க" என்று அனுப்பினாள்.
அவனை அனுப்பிவிட்டு தன் அறைக்குள் வந்து கதவைப் பூட்டிக் கொண்ட யமுனா அங்கே உயர்ந்து இருக்கும் டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் கண்ணாடியைப் பார்த்து, "ஏன் அந்த மாயா தனியா வெளிய போக மாட்டாளா? இவர் கூட தான் போவாளா? இவரும் பொண்டாட்டி கிட்ட சொல்லாம மாயாவை கூட்டிட்டுப் போயிருக்காரு... சத்யதேவ் நீங்க வந்த அப்புறம் கவனிச்சிக்குறேன்" என்று கண்ணாடியில் தன்னிடமே பேசி விட்டுச் சென்றாள் யமுனா.
திவாகர் வீட்டிற்குச் சென்று தன் தாய் தந்தையிடம் தனக்கு வேலை கிடைத்த விஷயத்தைக் கூறினான். அங்கு பிரியா இல்லாததைக் கண்டவன்,
"அவள் எங்கே?" என்று மொட்டையாக கேட்டான்.
"அவள்னா யாரு திவாகர்?" என்று கேட்டார் சேகர்.
"அதான் பிரியா..." என்று தடுமாறினான்.
"அவளை அவளுடைய பெற்றோர்கள் ஆடி மாசம் வந்ததுனால அவங்களுடைய வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்கள்" என்றார்.
"என்கிட்ட சொல்லாமல் அவள் எப்படி கிளம்பலாம் இதான் அவள் ஒரு புருஷனுக்கு கொடுக்கும் மரியாதையா?" என்று கோபமாகக் கேட்டான்.
"ஏன் திவாகர் நீ அவளை உன் பொண்டாட்டி மாதிரியா நடத்துன? அப்போ எப்படி உன்னால் இப்படி பேச முடியுது?" என்றார் விஜயலட்சுமி.
"எனக்கு அவள் பிடிக்காத பொண்டாட்டினாலும் பொண்டாட்டி தான அப்போ என்கிட்ட சொல்லாமல் அவள் எப்படி இந்த வீட்டு வாசப்படியைத் தாண்டிப் போகலாம்?" என்ற திவாகரிடம் அவன் தந்தை தாய் அதைப்பற்றி பிறகு எதுவும் பேசவில்லை.
ஜெயக்குமாரும் சீதாலட்சுமியும் பிரியாவை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். பிரியா வந்தவுடன் ஆதிரா அவளை ஒட்டிக்கொண்டு கட்டிக்கொண்டாள். பிரியாவை ரொம்ப நேரமாக கவனித்த திவ்யா அவள் சிரிப்பு பொய்யாக இருக்கிறது என்பதை உணர்ந்தாள். அவள் தனியாக இருக்கும் பொழுது அவளிடம் இதைப் பற்றிக் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.
பிரியாவிற்கு ஏனோ ஒரு மாதம் திவாகரைக் காணாமல் இருக்கப் போவது மனதிற்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அவனுக்கு இவள் இல்லை என்றால் சந்தோஷமாக இருக்கும் என்பதால் தன்னால் அவனுக்கு நிம்மதி இப்படி கிடைக்கும் என்றால் விதிப்படி நடக்கட்டும் என்று நினைத்தாள். திவாகரைத் திருமணம் செய்த பின்பு அவன் மாறிவிடுவான் அவன் கட்டிய தாலியின் மகிமை அவனை மாற்றி விடும் என்று நினைத்த பிரியாவிற்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.
பிரியா தனியாக இருக்கும் போது திவ்யா பிரியாவிடம் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டாள். "நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அண்ணி நீங்க டாக்டர் செக் அப் லாம் போறீங்களா?" என்று பேச்சை மாற்றினாள். இவள் சொல்ல மாட்டாள் என்று திவ்யாவும் அவளிடம் நோண்டாமல் சென்று விட்டாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக