மாயம் 3
அப்போது அவளுக்கு ஒரு கால் வந்தது அழைப்பைப் பார்த்த யமுனா அதில் தன்னுடைய மாமா கால் செய்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
"யமூ குட்டி எப்படி டா இருக்க?" என்றவரின் குரல் தழுதழுத்தது. சேகருக்கு தற்போது 70 வயது இருக்கும் சிறிய வயதிலேயே தங்கள் அப்பா அம்மாவை இழந்த பதினைந்து வயது சேகர் தன்னுடைய எட்டு வயது தங்கை சாந்தியை ஒரு தந்தை போல் பாதுகாத்தார்.
அவளை படிக்கவைத்து இவரும் படித்து பகுதி நேரத்தில் வேலைப்பார்த்துப் படித்து முடித்தவுடன் அரசுப் பணியில் சேர்ந்தார். சாந்தியைக் கல்யாணம் பண்ணி வைக்கவே அவருக்கு வயது 35 ஆனது.
தன்னுடைய வாழ்க்கையைத் தனியாக வாழலாம் என்று நினைத்த போது சாந்தி தன் கணவன் வழி சொந்தமான விஜயலட்சுமியைப் மணம் முடிக்க கூறினாள்.
விஜயலட்சுமி மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவள் ஆனாலும் அவளுக்குப் பேராசை அதிகம் தங்கை மற்றும் மாப்பிள்ளை சங்கரின் வார்த்தைக்காகக் கல்யாணமும் செய்தார்.
திவாகர் பிறந்து மூன்று வருடம் கழித்துத் தான் யமுனா பிறந்தாள்.நாட்கள் இப்படியே சென்ற சமயத்தில் தான் ஒரு விபத்தில் யமுனாவின் பெற்றோர் உயிரிழந்தனர்.
ஐந்து வயதான யமுனாவை தன்னுடைய மகளாகவே நினைத்து தன்னோடு வைத்துக்கொண்டார். விஜயலட்சுமி எவ்வளவு முயன்றும் யமுனாவை அவர் விட்டுகொடுக்கவில்லை.
அவளுக்குத் தந்தை மற்றும் தாயாய் இருந்து நல்ல உணவு உடை இருப்பிடம் கொடுத்தார். சுட்டிப் பெண்ணான யமுனா படிப்பில் எப்போதுமே முதல் மதிப்பெண் தான்.
வருடங்கள் சென்றன. திவாகரை என்ஜினீயரிங் படிக்க வைக்கவே பத்து லட்சம் ஆனது. ஐந்து லட்சத்திற்கு தன் சொந்த பணமும் மீதி ஐந்திற்குக் கடன் வாங்கினார்.
அப்போது தான் டெல்லியில் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் படிக்க நினைத்தான் திவாகர். இதற்கு விஜயலட்சுமியும் துணை போனாள். அந்த கல்லூரி பெரும் பணக்காரர்கள் படிக்கும் கல்லூரி ஒரு வருடத்திற்கு 25 லட்சம் கட்டணம் இருந்தது.
இதில் சேகருக்கு உடன்பாடு இல்லை ஆனால் இக்கல்லூரியில் இரண்டு வருடம் எம்.பி.ஏ முடித்து வெளியில் வரும்போது மாத சம்பளமே பத்து லட்சம் இருக்கும் என்று தங்களுடைய வீட்டை அதாவது சேகரின் பெற்றோர் வீட்டை அடமானம் வைத்தார்.
அதில் 30 லட்சம் கிடைத்தது மிச்ச பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தான் விஜயலட்சுமி தாங்கள் வசிக்கும் சொந்த வீடான சென்னை பல்லாவரம் வீட்டுப் பத்திரத்தை சேகருக்குத் தெரியாமல் அடமானம் வைத்து 30 லட்சம் பெற்றார் நேராக திவாகரிடம் பணத்தைக் கொடுத்து முதல் கட்டணத்தைச் செலுத்தச் சொன்னார்.
சேகருக்கு இந்த விஷயம் ஒரு வாரம் கழித்துத் தான் தெரிய வந்தது. "என்னிடம் சொல்லாமல் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைக்க உனக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் நானே ஒரு வீட்டை அடமானம் வைத்து விட்டேன்.”
“நீ இருந்த இன்னொரு வீட்டையும் எனக்குத் தெரியாமல் அடமானம் வைத்து விட்டாய். அது யாருடைய வீடு என்று தெரியுமா இல்லையா உனக்கு? இது சாந்தி, சங்கர் மாப்பிள்ளையோட வீடு இது யமுனாவின் வீடு அவள் கல்யாணம் முடிந்தவுடன் அவளின் மாப்பிள்ளையின் கையில் ஒப்படைக்கவே நாம் இந்த வீட்டில் வசிக்கிறோம் ஆனால் நீ பாவி என்ன காரியம் செய்துவிட்டாய்" என்று அடித்தார்.
"நீங்க என்ன சொன்னாலும் பரவாயில்லை நான் பண்ணியது கரெக்ட் தான் அந்த பொண்ணுக்கு எவ்வளவு செலவு செஞ்சிருக்கீங்க நம்ம வீட்டிலேயே என் மகனை மயக்க சுத்திட்டு இருக்கா" என்று அவர் கூறி முடிப்பதற்குள் அவரின் கழுத்தைப் பிடித்து நெறித்துவிட்டார்.
விஜயலட்சுமி அலறியதைக் கேட்டு ஓடி வந்த யமுனா தன் மாமாவைப் பிடித்து விலக்கினாள்.நடந்த அனைத்தையும் அறிந்த யமுனா,
"மாமா நீங்க எனக்குக் கடவுள் மாதிரி இந்த வீடெல்லாம் ஒன்றுமே இல்ல அது எனக்கு முக்கியம் இல்ல திவு அத்தானை நான் ஒருநாளும் தப்பா பார்த்தது இல்ல அவர்கள் டெல்லியில் படிக்கட்டும் அதான் முக்கியம் இப்போது நான் இங்க கல்லூரி விடுதியில் சேர்ந்துக்குறேன்" என்றாள்.
திவாகர் தன் தந்தையிடம் மிச்ச பணத்தை வாங்கி "ஜேகே க்ரூப் ஆஃப் மானேஜ்மென்ட்டில்" இரண்டு வருடம் கட்டணம் செலுத்திவிட்டுச் சேர்ந்தான்.
"யமுனா இருக்கியா மா?" என்று கேட்ட மாமாவின் குரலில் தன் சுய நினைவிற்கு வந்த யமுனாவின் கண்களில் கண்ணீர் மூண்டது.
"ஏன் மாமா உங்களுக்கு ஹாட் அட்டாக் வந்திருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணிருக்காங்க என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல நீங்க" என்று கதறி அழ ஆரம்பித்தாள்.
"யமுனாமா உனக்கு தெரிய கூடாதுன்னு நினைச்சேன்மா நீ ரொம்ப துடிச்சிடுவ மாமா நல்லா ஆயிடுவேன்மா கவலைப்படாத. இங்க நிறையப் பிரச்சனை இருக்குமா, திவாகர் கூட படித்த பொண்ணு அவனை காதலிச்சுருக்கு ரொம்ப பெரிய பணக்கார குடும்பம் திவாகர் மும்பைல வேலைப் பார்த்த சமயம் அவங்க வீட்டோடு வந்து அம்மா அப்பா இரண்டாவது அண்ணன் மாப்பிள்ளை கேட்டு வந்தார்கள் உன் அத்தை அந்த பணத்தாசை புடிச்சவ எங்க கிட்டலாம் ஆலோசனை கேட்காமல் திவாகர்க்கே தெரியாமல் சம்மதம் சொல்லிட்டாள். நிச்சயம் தேதியும் முடிவு பண்ணிட்டாள்."
"மாமாவால் முன்னாடி மாதிரி தட்டி கேட்க முடியலைம்மா வயசாகிடிச்சு உடல் பலம் இல்லைம்மா. அத்தோட எங்க பையன் டெல்லில படிக்க வைக்க வீட்ட அடமானம் வைத்தோம் 50 லட்சம் ஆச்சுன்னு நீலிக் கண்ணீர் வடிச்சுருக்கா உடனே அவங்க அப்பா லண்டனில் இருக்கும் மூத்த மகனிற்கு கால் செய்து அந்த விஷயத்தைச் சொன்னார்.”
“அவர் என்ன சொன்னார் என்று தெரியலமா இவர் கால் கட் செய்துவிட்டு 50 லட்சம் காசோலை கொடுத்து அதை மீட்கச் சொன்னார். அதை வாங்கி வீட்டை மீட்டு விட்டாள் அப்போது தான் திவாகர் ஊரிலிருந்து வந்தான். திருமண விஷயம் கேட்டவுடன் வீட்டை இரண்டாக்கி விட்டான் உன் அத்தை 50 லட்சம் வாங்கியதும் தெரிந்தது கண்டபடி கத்தினான்மா."
"நிச்சயத்திற்காக இந்தியா வந்த பிரியாவின் மூத்த அண்ணனிற்கு இவனுக்குக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்பது தெரிந்து அப்போது வீட்டிற்கு வந்து திவாகரை நேரடியாகக் கேட்டார் அவன் நான் யமுனாவைத் தான் காதலிக்கிறேன் வேறு யாரையும் மணக்க மாட்டேன்னு சொல்லிட்டான்.”
“அப்போது மேஜை முன் இரு பத்திரங்களை வீசினார். அது நாம் அடகு வைத்த வீட்டின் பத்திரம் எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி ஆனது."
"நீ இந்த மாதிரி பண்ணுவனு எனக்கு தோணுச்சு நீங்க யார் கிட்ட வீட்ட அடமானம் வைத்திருந்தீர்களோ அவருக்குப் பணம் கொடுத்தேன் ஒர்ஜினல் பத்திரம் என்கிட்ட டூப்ளிகேட் உங்ககிட்ட. லுக் திவாகர் பிரியா உன்ன விரும்பறா அவளை மாதிரி அமைதியான நல்ல பொண்ணு உனக்குக் கிடைக்க மாட்டா அவள் ஆசைப்பட்டு என்கிட்ட இதுவரைக்கும் எதுவும் கேட்டது இல்ல அவள் என்கிட்ட ஆசைப்பட்டுச் சொன்ன விஷயம் உன்னை கல்யாணம் பண்ணவேண்டும் அதனால் நிச்சயதார்த்தம் சொன்ன தேதியில் நடக்கவேண்டும் இந்த கல்யாணம் நடந்த அப்பறம் இந்த பத்திரம் உங்கள் கைக்கு வரும்" என்று கூறி முடிக்கும் போது,
"என் யமுனா தேவதை நான் அவளைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் இந்த பத்திரம் வீடு நீங்களே வெச்சிக்கோங்க எனக்கு என் படிப்பு அப்புறம் மாதா மாதம் கை நிறையச் சம்பாதிக்கிறேன் அது போதும்" என்றான்.
இதைக்கேட்டு வேகமாகச் சிரித்த சத்யதேவ், "நீ படிச்ச பல்கலைக்கழகமே என்னோடது தான் ஜெகே க்ரூபோட எம்டி நான் தான் என்னோட அப்பா ஜெயக்குமார் பெயரைச் சுருக்கி வைத்திருக்கிறோம் என் தங்கை எம்டி யோட தங்கச்சியென்று யாருக்கும் தெரியாது பவர் ஆஃப் அட்டார்னி என் நண்பன் அசோக் கிட்ட இருந்ததினால் அவன் தான் நான் லண்டனில் இருக்கேன்னு பார்த்துக்கிட்டான் அப்படியும் கல்லூரி ஆட்டிகில்ல தி யங் பிசினஸ் கிங் னு என் போட்டோ இருக்கும் நீ கவனிக்கவில்லை போல" என்று வெற்றிப்புன்னகை செய்தான்.
"நான் நினைத்தால் நீ காம்பஸ்ல பிலேஸ் ஆன கம்பெனியில தான வொர்க் பண்ற உன்ன அங்க இருந்து தூக்கி நடு ரோட்டுல நிறுத்த முடியும் வேற எங்கேயும் வேலை கிடைக்காத அளவுக்குப் பண்ணவும் முடியும் அந்த நிலைமைக்கு வரவிடமாட்டனு நம்புகிறேன்னு சொல்லிட்டு கிளம்பினார்மா"
"தம்பி மன்னிச்சிருங்க கண்டிப்பா பிரியா தான் எங்க வீட்டு மருமகள்" என்று உறுதியளித்தாள் உன் அத்தை.
"இதெல்லாம் கேட்டு எனக்கு நெஞ்சு வலி வந்துவிட்டதுமா அப்போது அந்த தம்பி உடனே ஆம்புலன்ஸிற்கு கால் செய்து அவருடைய ஹாஸ்பிட்டலில் சேர்த்தார். எனக்கு ஆப்ரேஷன் பண்ணாங்க அங்கு எல்லா வசதிகளும் இருந்ததுமா, பிரியா வந்து என்ன நல்லா பாத்துக்கிட்டாமா பொண்ணு மாதிரி... அவளவிட எனக்கு நல்ல மருமகள் கிடைக்காதுமா நான் இப்போ கூட செக் அப் போறேன் எல்லாத்துக்கும் பிரியா எங்க கூட வருவா, விஜி பணத்தாசை பிடிச்சவள் தான்மா ஆனா பிரியா ரொம்ப நல்ல பொண்ணு இப்போ நீ உதவி பண்ணா தான்மா திவாகர் பிரியா கல்யாணம் நடக்கும் திவாகர் உன் மேல் பைத்தியமா இருக்கான்"
"உன்ன கெஞ்சி கேட்கிறேன்மா, திவாகர் எப்படியாவது பிரியாவ கல்யாணம் பண்ணனும் இல்லனா அந்த தம்பி திவாகர் வேலையைச் சொன்ன மாதிரி தூக்கிடும் நாங்கள் நடு ரோட்டுல நிற்கவேண்டும் பிரியா மாதிரி நல்ல குணமுள்ள பெண்ணை திவாகர் மிஸ் பண்ண கூடாதுமா. நீ தான் அதுக்கு எப்படியாவது இந்த கல்யாணத்தை நடத்தணும் அது உன்னால் மட்டும் தான்மா முடியும்" என்று அழுதார்.
"பிரியா ஒரு தடவ உன் போட்டோ கேட்டாமா நானும் கொடுத்தேன் இப்போது உன் போட்டோ அவள் கையில் தான் இருக்கிறது உன்னைப் பார்த்து ரொம்ப அழகாய் இருக்கனு சொன்னாமா ஆனா அவ குணம் ரொம்ப சுத்தம்மா" என்றார்.
'மாமா நீங்க இந்த ஆள பெருமையா பேசுறீங்க ஆனா இவன் இங்கே என்ன மிரட்டி பேரம் பேசிட்டு இருக்கான்' என்று மனதில் நினைத்தவள் தன் மாமாவிடம், "நான் பாத்துக்குறேன் மாமா நீங்க கவலைப்படாதீங்க" என்று காலை வைத்தாள். தன் முன்னே கம்பீரமாக கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த சத்யதேவ்வைப் பார்க்க பயமாகவும் எரிச்சலாகவும் இருந்தது.
'இது என்ன நமக்கு இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை?' என்று நினைத்தாள் யமுனா.
"திவா அத்தான் என்னை வெறுக்கணும்னா நான் யாரையாவது கல்யாணம் பண்ணவேண்டும் அவ்வளவு தான அதுக்கு உங்களைத் தான் கல்யாணம் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லை நான் வேற யாரையாவது காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றாள் திமிராக.
"நீ என்ன லூசா? பிரியாவிற்கு இப்போது வயசு 26 ஆகுது நீ ஒருத்தனை லவ் பண்ணி கல்யாணம் பண்றதுக்கு எல்லாம் இங்க நேரம் இல்லை உங்கள் குடும்பத்துக்கு நான் கொடுத்த நேரம் இன்னும் ஒரு மாசம் தான் அப்படியே நீ இந்த ஒரு மாசத்தில் ஒருத்தனை லவ் பண்ணி கல்யாணம் பண்ண நினைத்தாலும் நீ என்னைக் கல்யாணம் பண்ணா தான் திவாக்கு முறைப்படி தங்கச்சி முறை ஆயிடும் அவன் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டான் இங்கப் பாரு உன்கிட்ட சின்ன குழந்தைக்கு சொல்ற மாதிரியெல்லாம் விளக்க முடியாது. முதலில் நம்ம இரண்டு பேர் கல்யாணம் நடக்கணும் அதுவும் அடுத்த வெள்ளிக்கிழமை நடக்கவேண்டும்" என்றான்.
'இவனுக்கு என்ன கல்யாணமென்றால் அசால்ட்டா போச்சா?' என்று நினைத்தவளை, "நீ என்னைக் கல்யாணம் பண்ண சம்மதிக்கலனா திவாகருக்கு வேலை போகும் அடுத்து குணா திவ்யா கல்யாணம் நடக்காது அடுத்து உனக்கும் வேலை போகும்" என்றான் தீர்மானமாக.
"என்னது எனக்கும் வேலை போகுமா என்ன மிரட்டுகிறீர்களா?" என்று நேரடியாகக் கேட்டாள்.
"ஆமா மிரட்டுறேன் இதற்கு மேலயும் மிரட்டுவேன்" என்றான்.
"என்னால் உங்கள கல்யாணம் பண்ண முடியாது என் மாமா குடும்பத்தை எப்படி காப்பாற்றுவதென்று எனக்குத் தெரியும்" என்று கிளம்பி எழுந்தாள் யமுனா.
"நான் பேசும் போது நீ உன் இஷ்டத்துக்குக் கிளம்பி போற அவ்வளவு திமிரா உனக்கு உன்னைப் பார்க்கவே இரிடேட்டிஙா இருக்கு ஜஸ்ட் சிட் டௌன் இடியட்" என்று கர்ஜித்தான். பயத்தில் அப்படியே இடத்தில் அமர்ந்த யமுனாவின் முன் இருந்த மேசையில் தன்னுடைய செல் போனை எடுத்த சத்யதேவ் ஒரு நம்பர்க்குக் கால் செய்து,
"ஹாய் பார்த்திவ்... சத்யதேவ் ஹியர் உன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் திவாகர் பத்தி பேசிருந்தேன்ல" என்று போனை ஸ்பீக்கரில் போட்டான்.
"யா சத்யா... அவனை வேலையை விட்டு தூக்கிடவா? அன்ட் ஆல்சோ நீங்கச் சொன்ன மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் சான்றிதழில் பேட்னு போட்டு கொடுத்தால் எங்கேயும் வேலை கிடைக்காது அதையும் பண்ணிடவா?" என்று கேட்டான்.
'அடப்பாவி! சும்மா இவன் மிரட்டுவான்னு பார்த்தா உண்மையாகவே பார்த்திவ்க்கே கால் பண்ணிட்டானே' என்று கலங்கினாள். யமுனாவிற்கு தெரியும் திவாகர் வேலை பார்க்கும் பார்த்திவ் க்ரூப்ஸ் மிகப் பெரிய நிறுவனம் என்று.
"பார்த்திவ்... யா அவனை வேலையை விட்டுத் தூக்கிட்டு அன்ட் நம்ம பேசின மாதிரி..." என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,
"நான் உங்களையே கல்யாணம் பண்ணிக்கிறேன் ப்ளீஸ் அத்தான் வேலையில் இருக்கவேண்டும்" என்று அழுதாள்.
"பார்த்திவ் யு ஹோல்ட் இட் ஐ வில் கால் யு பேக்" என்று கட் பண்ணி விட்டு யமுனாவிடம் திரும்பியவன், "லுக் யமுனா நீ உன் வேலையை விடணும் கல்யாணம் முடிந்த அப்புறம் நம்ம டெல்லி போறோம் அங்க தான் என்னுடைய பேமிலியில் எல்லாரும் இருக்காங்க நம்ம கல்யாணம் முடிந்த அப்புறம் நீ திவாகரை கன்வின்ஸ் பண்ணி பிரியா திவாகர் கல்யாணம் நடக்க வைக்கணும் அப்புறம் திவ்யா குணா கல்யாணம் எல்லாமே ஒரே மேடைல நடக்கும்" என்றான்.
"நான் சொல்லுற வரைக்கும் நம்ம கல்யாணம் பண்ண போறது யாருக்கும் தெரியக் கூடாது திவ்யா குணாவைத் தவிர..." என்றான்.
எல்லாம் கனவு மாதிரி தோன்றியது யமுனாவிற்கு இது கனவாகவே இருந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாள். ஆனால் அவள் வாழ்க்கை அவள் கையில் இல்லை என்பதை உணர்ந்த யமுனா திவ்யாவுடன் பேசவில்லை குணாவின் மூலமாக விஷயத்தைத் தெரிந்துக் கொண்ட திவ்யாவிற்கு முதலில் தன்னுடைய கல்யாணம் நடக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தவள் பின் யமுனாவின் நிலைமை அறிந்து அமைதியாக இருந்தாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக